நினைவோ ஒரு பறவை…
“தாமரைத் தண்டா தூதி மீமிசைச் சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப் புரைய மன்ற புரையோர் கேண்மை” - நற்றிணை தாமரை மலரில் தேனெடுத்து அதை சந்தன மரத்தின் உயர்ந்த கிளைகளில் உள்ள தேனடையில் வைத்தாற் போல உயர்வானது அன்றோ உயர்ந்தோர் நட்பு. இது தலைவன் பிரிவை எண்ணி காதலில் மறுகும் தலைவியிடம் தோழி உரைக்கும் பாடல். கபிலரின் கூற்று. அடர்ந்த வனத்தில் நுறுமணம் வீசும் சந்தன மர உச்சிக் கிளையில் சூல் கொண்ட “கேண்மை”, அதாவது நட்பைத்தான் பசலைக்கு மருந்தாக கபிலன் வைக்கிறான். இதில் காதலுக்கு எங்கே இடம்? காதல் அரூப மலர்களின் அந்தரங்கமான நறுமணம். அதில் ததும்பும் தேனின் சுவை. அதில் திளைக்கும் மனதின் ஊகிக்க இயலாத பயணம். இந்தப் படிமங்கள் யாவும் அடிப்படையான கேண்மையின் மீதே எழுந்து நிற்கின்றன. நட்பு கெடும்போது அனைத்தும் கெடுகின்றன. நட்பின் நரம்பு அறுபடும்போது காதலின் சுவையும், மணமும் அற்றுப் போகின்றன. நட்பில்லாத காதல் எட்டாத உயரத்தில் அந்தரத்தில் மிதக்கும் தேனாக யாருக்கும் பயன்ற்றுப் போகிறது. மாறாக, இப்பாடலில் “கேண்மையை” அரூபமாக்கி, காதலில் திளைக்கும் மலரைப் பெண்ணாகவும், அதில் தேனெடுக்கும் வண்டாக ஆணையு...









