இளையராஜா 81
இசை இப்படிச் சுருங்கி நின்றுவிடுவதில்லை. சாமிப்புலவன் பற்றி எழுதியிருந்தேன்.
“I don’t know the language. I can’t understand the music. But this is my song. My soul. My words. My mind is a holy place and lt’s lot in it.. is music..” என்று மனம் பதற வந்து நிற்பவனின் கழுத்தில் தன் கழுத்தில் விழுந்த மாலையைப் போட்டுவிட்டு, “உன் சங்கீத ஞானத்துக்கு என் சன்மானம்”என்று தலையைச் சிலிப்பிவிட்டு கையில் மதுப்புட்டியோடு நடந்து செல்லும் தாரை தப்பட்டை சாமிப்புலவனின் சங்கீதம் சமரசம் இல்லாத இசையின் உள்ளோளிப் பெருக்கு.
இன்னொரு பாடல். சிந்து பைரவியில் வரும் “தண்ணித் தொட்டித் தேடிவந்த…” பாடல். மதுவினால் தரம் தாழ்ந்தவனின் நிலையைக் காட்டுவதான சூழலில் இடம்பெற்றாலும், அது இசையாக அலங்காரங்களுக்கு எதிரான, மேட்டிமையான கற்பிதங்களுக்கு எதிரான ஒரு சாமானிய இசையின் கலகக் குரல். யேசுதாஸ் அந்தப் பாடலை பாட மறுத்ததாகச் செய்திகள் உண்டு. இசை தன்னிலையாக மேன்மை கீழ்மைகளுக்கு அப்பாற்பட்டது. அதனாலேயே பிறப்பிலிருந்து இறப்பு வரை இசையோடு நம் வாழ்வைத் தொடர்புபடுத்திக் கொள்கிறோம். நம் வாழ்வின் அனைத்து தருணங்களுக்கும், அனைத்து அனுபவங்களுக்கும் ஓர் இசைமை உண்டு.
“தண்ணித் தொட்டித் தேடிவந்த..” பாடல் மனச் சரிவிலிருந்து எழுந்துவரும் இசையின் கம்பீரமான வெளிப்பாடு. கர்நாடக இசைக்கு எதிரான ஒன்றாக கட்டமைக்கப்பட்ட அந்த டப்பாங்குத்துப் பாடல் “காபி” ராகத்தில் ஒரு சுள்ளென்ற சாராயம்.
பின்னாட்களில், “பாட்டுக்கு நான் பாடுபட்டேன்.. அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்…” என்று இளையராஜாவே எழுதி பாடியது கூட இப்படியான தருணங்களைத்தானோ என்னவோ?
இளையராஜாவின் இன்னொரு பாடல். சலங்கை ஒலி படத்தில் இடம்பெற்ற “தகிட ததிமி…”.
சிந்துபைரவி நாயகன் தன் இசையின் அலங்காரங்களைக் கலைத்து விளையாடினால், சலங்கை ஒலி நாயகனோ தன் பித்திலிருந்து கலையைக் கட்டி எழுப்புகிறான். சிந்துபைரவியில் folk ஐ தேர்ந்தெடுக்கும் இளையராஜா, சலங்கை ஒலியில் கர்நாடக இசையிலேயே அந்தப் பாடலை அமைக்கிறார்.
மதுவின் மயக்கத்தை, அது தலைக்குள் அலையலையால் எழுப்பும் பிறழ்வுகளின் குரல்களையே ஆலாபனையாகக் கொண்டு அந்தப் பாடல் முடிவதெல்லாம் இசை ஞானத்தின் தெறிப்பு.
இசையின் கம்பீரத்திற்கு வயது 81!
❤️



Comments
Post a Comment