துயரத்தின் இனிமையை இசைத்தல்…



சக்கரவாகம். 

கேட்பதற்கு இனிமையான சொல் போலத் தெரிந்தாலும், ராகங்களில் இது துயரத்திற்கான ராகம். இணையைப் பிரிந்த பறவையின் அழுகுரல் சக்கரவாகம்.

சீர்காழி கோஙிந்தராஜன் “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காஆஆஆஆதென்பது…” என சுத்தரிஷபத்தில் கீழிறங்கி மேலேரும் போது,  கர்ணனின் ஆழ்மனதில் புதைந்துகிடக்கும் ரகசியத் துயரங்களை பிராவகமெடுக்கும் குருதியைப் போல வெளியே அள்ளி வீசும் ராகம் சக்கரவாகம். 

சோகப்பாடல்களை பாடும் குரல் அந்தப் பாடலின் ஒரு இடத்திலாவது கொஞ்சம் உடைய வேண்டும். என்றோ கடந்து போன ஒரு துயரம் சட்டென அதன் ஸ்ருதியிலிருந்து கொஞ்சம் நழுவி பாதி நிறைந்திருக்கும் மதுக் கோப்பையில் விழ வேண்டும். கொலைகாரனின் அடிமனதில் உறைந்து கிடக்கும் கருணையை கொஞ்சம் சுரண்டி எழுப்ப வேண்டும். குறைந்தபட்சம் ஒரு கரகரப்பான குரலை சின்னதாய் தழுதழுக்கச் செய்ய வேண்டும். இப்படித்தான் நெடுங்காலமாக சக்கரவாகத்தில் பாடல்கள் கட்டியெழுப்பப்பட்டன.

ஆனால் இந்தக் கணக்கெல்லாம் இளையராஜாவுக்குக் கிடையாது. அவர் ஆர்மோனியப் பெட்டியில் வந்தமரும் இசைப் பறவைக்கு எத்தகைய உணர்வைத் தரவேண்டும் என்பதை அவரே முடிவு செய்கிறார். 

கலகலவென கீச்சொலிகளோடு தொடங்கும் சக்கரவாகம் “சலக்கு சலக்குச் சேல..” என கறுப்பு வெள்ளைக் கட்டைகளுக்கு மத்தியில் துள்ளித் திரிகிறது. “சந்தனப்பெட்டிஇஇஇஇ.. சக்கரக்கட்டி…” என்று மழைத்துளிகளின் ஊடே கீழிறங்கி மேலேரும் சிறகடிப்பு கர்ணனுக்கு கிடைத்திருக்க வேண்டிய விடுதலையின் துடிப்பும்தானே!

இளையராஜா கூண்டுக்குள்ளிருந்து விடுவித்த ராகங்கள் எத்தனையோ!  எந்த சட்டகங்களுக்குள்ளும் அடைக்க முடியாத பிரவாகம் இளையராஜா!

🧡

Comments