யார் யாரைக் கைவிட்டோம் அம்மா?




கிட்டத்தட்ட குழந்தையைப் போலத்தான். இனி நிற்பதற்கும், நடப்பதற்கும், உணவை மெல்லுவதற்கும் கூட புதிதாகச் சொல்லித்தர வேண்டும்” 

அம்மாவைப் பரிசோதித்த மருத்துவர் கடைசியாகச் சொன்னது இதைத்தான். முப்பது வருடங்களாய் நோய்மையில் நைந்து கிடந்தவளின் மூளையைத்தான் பக்கவாதம் மூர்க்கமாகத் தாக்கியிருந்தது. தன் உடலின் வலது பக்கம் முழுவதும் செயலற்றுக் கிடந்தாள். 


அம்மா கடும் உழைப்பாளி. வியாபாரத்திற்காக மூட்டப்பட்ட அனலில் தன் வாழ்வின் பெரும்பொழுதைக் கழித்தவள். எச்சில் குவளைகளைக் கழுவியும், வீதியில் காய்கறிகள் விற்றும் தன் பிள்ளைகளைக் கரைசேர்த்தவள். அன்று அவள் கரங்கள் கனிந்துச் சுருங்கிக் கிடந்தன. வாழ்வில் நெடு நேரத்தை நின்றே கழித்த கால்கள் முற்றிச் சாய்ந்த வாழை மரம் போல தடித்துக்கிடந்தன.


நினைவு கொஞ்சம் கொஞ்சமாக நழுவிக் கொண்டிருந்தது. மூக்கின் செருகப்பட்ட குழாயின் வழியாக மட்டும் திரவ உணவாகச் செலுத்த வேண்டியிருந்தது. தன் இடது கையும், தலையையும் மட்டுமே அம்மாவால் ஓரளவு அசைக்க முடிந்தது. நினைவு திரும்பும் போதெல்லாம் இடதுகையால் அனிச்சையாக மூக்கில் சொறுகப்பட்ட குழாயை பிடிங்கி வீச, இரவுகளில் கையை கட்டிலோடு சேர்த்து கட்டிப் போட நேர்ந்தது.


“இனி வீட்டில் கவனித்துக் கொள்வதில்தான் இருக்கிறது” என்று மருத்துவர் சொல்லாமல் சொன்ன அன்றுதான், ஒரு நோயுற்ற குழந்தையை கைவிடும் முடிவை கிட்டத்தட்ட எல்லோரும் மனதளவில் எடுத்திருந்தோம். ஆனாலும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளவில்லை. எதை வழங்குவது? வலியையா? விடுதலையா? என்ற கேள்விகளுக்கு மனம் ஏற்றுக்கொள்ளும் ஒரு பதில் உண்டா எனத் தெரியவில்லை.


“சமயபுரத்தாளே உங்கிட்ட நல்லபடியா கூட்டிக்கோ..” என்று எங்கள் கண்முன்னே நடந்தேறிய வேண்டுதல்களை மௌனமாய் பார்த்துக் கொண்டு நின்றிருந்தோம். 


தன் வாழ்வின் கடைசி நாட்களை நெருங்கிக் கொண்டிருப்பதை அவள் நிச்சயம் உணர்ந்துவிட்டிருந்தாள். தன்னை நெருங்கி வரும் அத்தனை கரங்களையும் இழுத்து தன் நெஞ்சில் புதைத்துக் கொண்டாள். கன்னங்களில் உரசிக் கொண்டாள். எந்த முகத்தை ஏறிட்டாலும் அவளுக்குக் கண்ணீர் பெருகியது. பேச்சற்றுப் போன நாக்கு வாய்க்குள் தவிப்புடன் சுழன்று கொண்டே இருந்தது.


அவளின் வலது கைவிரலை பற்றி திருநீற்றில் தொய்த்து அக்காதான் எங்கள் எல்லாருடைய நெற்றியிலும் தீற்றினாள். அம்மா எப்போதும் தன் விரலை பிரத்யேகமாகச் சுருக்கி என் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் அளவாகத் தீற்றுவாள். அவள் விரலின் ஸ்பரிசம் முதல் முறையாக எனக்கு நடுக்கத்தைத் தந்தது. அவள் பார்வையை எதிர்கொள்ள இயலாமல் உள்ளுக்குள் ஏதோ குற்றவுணர்வு.


திரண்ட கண்ணீரில் சொற்கள் கரைந்து போயிருந்தன. எதிர்கொள்ளவே இயலாத வறட்டுப் புன்னகையை அம்மா எல்லோர் மீதும் வீசினாள். அசைவுகளுக்கும், சப்தங்களுக்கும் மட்டுமே தலையை மெல்லத் திருப்பினாள். சில நாட்களுக்குப் பிறகு கண்ணீரும் முற்றிலுமாய் வறண்டு போனது.


அயல் தேசம் சென்ற பின்னாலான என் விலக்கமும் சேர்ந்தேதான் அம்மாவை குலைத்துப் போட்டிருந்தது. ஆனாலும் அவளுக்கு எப்போதும் மகிழ்ச்சி தரும் விஷயங்களில் ஒன்றாக நான் இருந்தேன். தன் வாழ்நாளின் கடைசி நாள்வரை அவளால் கைவிடப்படாத ஒருவனாக நானே இருந்தேன். 


அம்மாவின் வாழ்வில் மகத்தான காலம் என்று ஒன்று இருந்ததா என எனக்குச் சரியாக சொல்லத் தெரியவில்லை. தன் வாழ்வில் சுதாரிப்பதற்குள் அவளுக்கு எல்லாமும் தாமதமாகிவிட்டிருந்தன. கொடுஞ் சொற்கள் வாழ்நாள் முழுவதும் அவளைத் துரத்திக் கொண்டே இருந்தன. வைராக்கியத்தை மட்டும் கடைசிவரை கெட்டியாய் பிடித்துக் கொண்டிருந்தாள். தன் இறுதி நாட்களில் நெஞ்சுக்குள் எதையோ தேக்கிவைத்தபடி துவண்டு கிடந்தாள். 


அம்மா பல சந்தர்ப்பங்களில் பலராலும் கைவிடப்பட்டாள். ஆனாலும் கூடி வாழ்வதில் எப்போதும் தன் நம்பிக்கையை அவள் இழந்ததே இல்லை. அம்மாதான் உயிர்கொடி. அவள் மீதுதான் மொத்த குடும்பமும் படந்திருந்தது. 


இனி எதைப் பற்றுவது? எங்கே தொடங்குவது? எதைத் தொடர்வது? யாரை யாருடைய சொல் தேற்றுவது? எதை மீட்க இனி எந்தக் கரங்களை பற்றுவது? 




Comments