பைலா - நினைவுகளின் இசைத்துடிப்பு
90களில் கும்பகோணத்தின் முக்கிய வீதிகளில் ஜேம்ஸ் பேண்ட் வாத்தியக் குழுவின் இசை அதிர, கரகாட்டக்காரன் சொப்பன சுந்தரி புகழ் Chevrolet Imbala டைப் காரில் செல்லும் மாப்பிள்ளை ஊர்வலங்கள் பிரசித்தம்.
வெற்றிவிழா படம் ரிலீஸுக்கு அப்புறம் பேண்ட் வாத்தியக் குழுக்களில் “மாருகோ மாருகோ..” பாடல் தவிர்க்க இயலாத பாடலானது. கிளாரினட், ஓபோ, சாக்ஸபோன், ட்ரம்பட், ட்ரம்போன் மற்றும் ட்ரம்ஸ்கள் அதிர “மாருகோ மாருகோ..” வாசிக்கத் தொடங்கினால் கால்கள் இயல்பாகவே நடனமிடத் துவங்கும்.
பேண்ட் வாத்திய இசையில் இந்த பாடலை கேட்டுவிட்டு ஒரிஜினல் பாட்டை YouTubeல் பார்த்தால் மடல் மடலாக ஆச்சர்யங்கள் விரிகின்றன.
கதைப்படி நாயகன் சுயநினைவை இழந்து கடற்கரையோர மீனவ கிராமம் ஒன்றில் (கோவா) விழித்து எழுகிறான். இந்துவான அவனுக்கு கிருஸ்துவ மதத்தைச் சேர்ந்தவளின் மீது காதல் பிறக்கிறது.
தேவாலயத்தில் திருமணம். பைபிள் வசனங்கள் சொல்லும் போது, பின்னணியில் அவனுக்கு வேத மந்திரங்கள் நினைவுக்கு வருகின்றன. மோதிரம் மாற்றும் போது, தாலி நினைவுக்கு வருகிறது. தேவாவாலய மணியோசையும், கோயில் மணியோசையும் அவன் நினைவுகளை அலைகழிக்கின்றன. வேறு நிலம், வேறு மனிதர்கள். வேறு வேறு நினைவுகள்.
இதற்கிடையில் திருமண கொண்டாட்டம். ஆட்டமும் பாட்டுமாய் கொண்டாட வேண்டிய தருணம். வேத ஒலிகளுக்குப் பிறகு கிடார் strumming-ல் தொடங்கும், “மாருகோ மாருகோ..” பாடல் தட தட வென நடனத்திற்குரிய பீட்டோடு அதிரத் தொடங்குகிறது.
முதல் வியப்பு. இப்பாடலுக்கான இளையராஜா தேர்ந்தெடுத்த இசைக்கோர்வை சிங்கள நாட்டாரியல் வகையான “பைலா”. எளிய அறிமுகத்திற்காக, சிலோன் மனோகரின், “சுராங்கனி.. சுராங்கனி..” அல்லது கன்னத்தில் முத்தமிட்டால் இலங்கை வீதிகளில் பயணிப்பது போல் படமாக்கப்பட்ட, “சென்யோரே.. சென்யோரே…” பாடல்களை குறிப்பிடலாம். (ஒருஜினல் பைலாக்கள் இன்னும் தனித்துவமானவை)
பைலாவின் தொன்மங்களுக்கும் வெற்றிவிழா காட்சிகளும் சில ஒற்றுமைகள் உண்டு. பைலா இசை போர்த்துக்கீசிய வரவு. ஆப்ரிக்க அடிமைகளும், இலங்கை பூர்வக் குடிகளாலும் கடற்கரை கிராமங்களில் வளர்த்தெடுக்கப்பட்ட இசை வடிவம். போர்த்துக்கீசியர்களின் கிருஸ்துவ மதமாற்றங்கள் நடந்த காலகட்டம். போர்த்துக்கீசியர்கள் ஆண்ட அரபிக்கடல் மார்கமாய் மங்களூர், கோவா என இந்த இசைவடிவம் பயணித்து இன்று உலகம் எங்கும் பரவிக்கிடக்கிறது.
ஆப்ரிக்க பழங்குடி இனக்குழுவிற்கேயான துடிப்பு மிகுந்த இசைக்கருவிகள், மற்றும் நடனத்தின் சாயல்கள் இந்த இசையில் உண்டு. இன்றும் கடற்கரை கேளிக்க விடுதிகளில் மான்டலின், கிடார், பாங்கோ போன்ற இசைக்கருவிகள் ஒலிக்க, வண்ணமயமான ஆடைகளுடன் “பைலா” கொண்டாட்டமாகத் தொடர்கிறது.
தன் பூர்விகத்தை, தன் நிலத்தை, தன் நினைவுகளை விட்டுவிட்டு வந்தவனின் ஒரே கொண்டாட்டம் பைலா.
நினைவிழந்த வெற்றிவிழா நாயகனுக்கும் புலம் பெயர்ந்த ஆப்ரிக்க பழங்குடியினனுக்கும் கடற்கரை கிராமத்தில் கொண்டாட்டமாக பைலா இருப்பது தற்செயலாகவும் இருக்கலாம்.
நிச்சயம் எந்தச் சூழலிலும் இந்த இசை நமக்குள் ஒரு துடிப்பைக் கிளர்த்துகிறது.
தொடங்கிய இடத்திற்கு வருவோம். பைலாவிற்கு ஒரு உள்ளார்ந்த மென்மையும் உண்டு. இயல்பான கேலியும் கிண்டலும் உண்டு. இருப்பினும், முற்றிலும் வேறுபட்டு தடதடவென அதிரும் பேண்ட் இசைக்குள் பைலா எவ்வாறு பொருந்திப் போகிறது?
இதற்கு இன்னொரு வரலாற்றுப் பின்னணியும் உண்டு. போர்த்துக்கீசியர்கள் இந்திய கடற்கரை கிராமங்களில் கிருஸ்துவ மதப் பிரச்சாரங்களுக்கு இந்திய உள்நாட்டு இசை வடிவங்களுடன், பைலாவைக் இணைத்து பயன்படுத்தியிருக்கின்றனர்.
இன்றும் வேளாங்கன்னி வீதிகளில் ஒலிக்கும் பேண்ட் வாத்திய இசையில் ஆப்ரிக்க பழங்குடி நடனத்தின் துடிப்பு இருக்கலாம், இலங்கை கடற்கரை கிராமங்களில் புழங்கும் நையாண்டிகள் இருக்கலாம்.
யார் கண்டது? இயக்குநர் ப்ரதாப் போத்தனுக்கோ, நடிகர் கமலுக்கோ அல்லது இளையராஜாவுக்கோ இந்தத் தொன்மங்கள் தெரிந்தே பைலாவை தேர்ந்தெடுத்திருக்கலாம்!



Comments
Post a Comment