தடங்களின் தொடர்ச்சி…




“கிடை ஆடுகள் பாதுக்காப்புடன் இடம்பெயர்வதற்கு சாலைகளில் பிரத்யேகமாய் பாலங்கள் அமைத்துத் தரச்சொல்லி அரசிடம் கேட்பது எங்கள் கோரிக்கைகளில் ஒன்று”

வெற்றிச்செல்வன் இதை ஒரு சந்திப்பில் சொன்னபோது, கிட்டத்தட்ட சாத்தியமற்ற கோரிக்கைகளை முன்வைக்கும் மேடைப் பேச்சாகவே தோன்றியது. ஆனால் தன் கோரிக்கைக்கு ஆதரவாய் சிங்கப்பூரில் வன விலங்குகள் கடப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேகப் பாதைகள் தொடங்கி, உலகங்கெங்கும் மேய்ச்சல் இனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அந்நாடுகளில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள், ஐநா போன்ற அமைப்புகளின் பரிந்துரைகள் என அவர் தன் வாதத்திற்கு வலு சேர்க்க பயன்படுத்திய தரவுகள் எளிதில் புறம்தள்ளி விட முடியாதவை.

ஏற்கனவே குளம்படி நாவல் குறித்தும், அது இலக்கியப் படைப்புகளின் தொடர்ச்சியில் தனக்கான இடத்தை எப்படி நிறுவிக் கொள்கிறது என்பதையும், கலைப்படைப்பாக எங்கே சறுக்குகிறது என்பதைப் பற்றியும் உரையாடலாம் என ஒரு எண்ணம் இருந்தது. பிறகு, எழுத்திற்கு அப்பாற்பட்டு அப்படைப்பு சார்ந்த அரசியல் மற்றும் களச்செயல்பாடுகள் பற்றியும் பேசலாம் என அத்திட்டம் விரிவடைந்தது.

வழக்கம் போல் ECP இரவு.

நெகிழ்வான நினைவேக்கத் தருணங்களில் தொடங்கி, அன்றாடங்களின் மானுட அறம் என்பது வரை தன்னுடைய தனி மனித அனுபவங்களுடன் நாவலை ஒப்பிட்டு நண்பர்கள் பேசத் தொடங்கியதுமே, ஒரு நாவல் கதையாகவும், வாழ்வாகவும் இத்தனை பேரை ஊடுறுவியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

நாவல் எழுப்பத் தவறிய சித்திரங்கள் குறித்து வினோத் பேசும் வரை அனைத்தும் நிதானமாகவே சென்றது. அதன் பிறகு படைப்புகளின் ஒப்பீடு தொடங்கி, கலைநேர்த்திக்காக எழுதிய எழுத்தாளனையும், படைப்பையும் அவனிடமே பலி கேட்டது வரை சென்றதற்கு ஹெனிகனினுக்கும் பங்கு உண்டு. ஒரு படைப்பு கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும் போது அதன் வாசகன் ஆத்மார்த்தமாய் அந்தப் பிரதிக்காக எழுந்துவருவதையும், ஒரு விதத்தில் அப்பிரதியின் வெற்றியாகவே கருதுகிறேன்.

ஒரு படைப்பு இப்படி கடும் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்படுவது முதல் முறையல்ல. வெற்றிச்செல்வனுக்கு புத்தக வெளியீடு முடிந்து சில வாரங்கள் கழித்து நேற்று நிகழ்ந்தது, இளாவிற்கு அவர் புத்தகம் வெளியீடு நடந்த அடுத்த சில மணி நேரத்திலேயே (இன்னும் கடுமையாகவே) நிகழ்ந்தது. மணிக்கும், மதிக்கும் கொஞ்சம் மரியாதையோடு மேடையிலேயே நிகழ்ந்தது. எனக்கு தனிப்பட்ட முறையில் நண்பர்கள் வழியாகவும், இதழாசிரியர்கள் வழியாகவும் நிகழ்ந்தது.

அவ்வளவுக்கும் பிறகே அடுத்தடுத்த சந்திப்புகள் நிகழ்கின்றன. இன்று இளா உடன் வருவதைப் போல ஒருவேளை வெற்றிச்செல்வனும் உடன் வரலாம்.

அதேவேளை படைப்பின் கலை நேர்த்தி சார்ந்த எதிர்பார்ப்புகள் கடுமையானது. அதை நோக்கிய கவனயீர்ப்பை, மடைமாற்றத்ததை இத்தகைய சந்திப்புகள் நிகழ்த்தும் என்று நம்புகிறேன்.

ஹெனிக்கனுக்கும் நண்பர்களுக்கும் நன்றி! 

Comments