பறவையின் குரல்!
உமா ரமணனின் குரல் இயல்பாகவே மேல்ஸ்தாயில் சஞ்சரிக்கும் குரல். அவருக்கு வழங்கப்பட்ட பெரும்பாலான பாடல்கள் மேல்ஸ்தாயிற்குள் சஞ்சரிக்கும் பாடல்கள். “பூங்கதவே.. தாழ்திறவாய்..” கீழ்ஸ்தாயில் தொடங்கும் பாடல். மதகுகளைத் திறந்து வரும் மெல்லிய ஓடையைப்போல, நம் உடலைத் தழுவிச் செல்லும் தென்றலைப் போலத் தொடங்கும் பாடலை, “நீரோட்டம்.. போலோடும்..” என்று உமா ரமணன் மேல்ஸ்தாயில் தொடங்கும் போது ஓடைக்கும் சிறகு முளைத்து விடுகிறது. மொத்த உலகமும் ஒரு குரலில் தலைகீழாகக் கவிழ்ந்துவிடுகிறது
உமா ரமணன் தன் குரலின் வழியே நம்மையும் அறியாமல் நம்மை வானுக்கும், மண்ணுக்கும் அழைத்துச் செல்லும் மந்திரத்தை நன்கு அறிந்தவர் இளையராஜா. அதற்கு அவர் உமா ரமணனுக்கு வழங்கிய பாடல்களே சாட்சி!
இன்னொரு பாடல் “பூபாளம் இசைக்கும்…” .
பறவைப் போல் மேல்ஸ்தாயில் சஞ்சரிக்கும் “ஆஆ..” வெனும் ஆலாபனையில் தொடங்கும் பாடல் “தந்தனத்தன.. தந்தனத்தன..” என கொஞ்சம் கொஞ்சமாகத் தரையிறங்குகிறது. யேசுதாஸ் “பூபாளம் இசைக்கும்…” என அப்பறவையோடு உரையாடலைத் தொடங்குகிறார். அந்த கானப்பறவை உமா ரமணன்தான்.
சுகம் பெறும்…
வாழ்..
நாளே…
இவ்வொரு வார்த்தையும் ஆகாயத்திற்குள் சஞ்சரிக்கும் படிக்கட்டுகள். அதில் தவழ்ந்து மேலேறும் குரல் உமா ரமணன்.
மேலும் கீழுமாய் சஞ்சாரங்கள் செய்யும் “பொன்மானே… கோபம்… ஏனோ..” உட்பட வெகு சில பாடல்கள்தான் பாடியிருக்கிறார். ஆனால் அந்தப் பாடல்களில் ஆண் பாடகர்களை சிரமமின்றி ஓவர்டேக் செய்யும் குரல் அவருடையது. அது மட்டுமல்ல. மேல்ஸ்தாயில் தீபன் சக்கரவர்த்தி தொடங்கி, யேசுதாஸ் வரை அவர் குரல் பொருந்திப் போவது கூட வியப்பில்லை.
“மேகங்கருக்கையிலே… புள்ள தேகங்குளிருதடி…” என மேல்ஸ்தாயில் சஞ்சரிக்கும் இளையராஜாவின் குரலுக்கும் “அக்கரை சேர்ந்தபின்னே…” இணை செய்யும் குரல் உமா ரமணன்.
எனக்கு தனிப்பட்ட முறையில் “ஆனந்த ராகம் கேட்கும் காலம்…” பிடிக்கும். ஏனோ இந்தப்பாடலில் அவர் ஜென்ஸியை இணை செய்வது போன்றதொரு மாயை எனக்குள் உண்டு. எந்த மனநிலையிலும் கேட்பதற்கு சட்டென்று ஒரு பாடலைக் கேட்டால் தயங்காமல் இந்தப் பாடலைச் சொல்லலாம்.
ஒளிதான் தோன்றுதே…
ஆயிரம்…
ஆசைகள்…
உன் நெஞ்சம் பாடாதோ!
❤️



Comments
Post a Comment