மென்பொருளோடு காதல்கொள்வது..
பயிற்சி நிறுவனம் ஒன்றிற்குச் சென்று கொண்டிருந்த காலம். கிபி போல 486பி காலம். அந்த நாள் அப்படியே நினைவில் இருக்கிறது. பயின்றுனர் ஒரு அழகான வாலிபர். திரையில் ஒரு சிக்கலான C நிரல் கறுப்பு வெள்ளை எழுத்துக்களாக ஓடிக் கொண்டிருந்தது. நாங்கள் அவர் பின்னால் நின்று திரையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். (அப்போதெல்லாம் அவ்வளவு எளிதாக கீ போர்ட்-ஐ ஸ்பரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்துவிடாது.)
அவர் ஒரு சாகசங்கள் புரியும் போர் வீரனைப் போல அதில் இருந்த பிழைகளை சரிசெய்து கொண்டிருந்தார். புதிர்களை ஒவ்வொன்றாக அவிழ்த்துக் கொண்டே வருவது போல குரலில் பரவசம். பழைய TVS கீ போர்டுகளின் தட்டச்சு ஒலி பிரத்யேகமானது. அதன் மீது விசுக் விசுக்கென அவர் விரல்கள் நடனமிடுவதைப் போல் இருந்தது. அவர் கவனம் விரல்களில் இல்லை. தனக்குத் தானே ஏதோ பேசியபடி பிழைகளை சரி செய்துவிட்டிருந்தார். சட்டென்று இரண்டு கைகளையும் மானிட்டர் முன் விரித்து,
“இப்போ பாருங்க.. பாருங்க… இப்ப இந்த அவுட்புட் அழகா ஒரு குழந்தை மாதிரி.. ஒரு குழந்தை மாதிரி வந்து விழும் பாருங்க…” என்றார்.
கறுப்பு வெள்ளை எழுத்துகளின் வழியே குழந்தையை உருவகிப்பது குறுகுறுப்பாக இருந்தது. என் கவனம் திரையிலிருந்து மொத்தமாக அவர் மீது நழுவியிருந்தது. அவர் சொன்ன விதம் வினோதமாகவும், அதேவேளை உள்ளுக்குள் ஒருவித கிளர்ச்சியாகவும் இருந்தது. அந்த கணம் மனசுக்குள் அப்படியே உறைந்துவிட்டது.
இப்போதும் யாராவது, “உனக்கு இந்த வேலை பிடிச்சிருக்கா?” என்று கேட்டால் அன்று நடந்ததுதான் நினைவுக்கு வருகிறது.
மென் பொருள் பணிக்கென ஒரு கலை நேர்த்தி உண்டு. முன் ஒவ்வொரு முறை கணினியின் முன் அமரும்போதும் மனம் புதிய சாசகத்திற்குத் தயாராகிவிடுகிறது. புதிய தொழில் நுட்பங்கள், புதிய சவால்கள் என இந்தத் துறை சலிப்பதே இல்லை. ஏதோவொன்றை ஒழுங்குபடுத்தும் போது இயல்பாகவே மனம் சமநிலைக்குத் திரும்பிவிடுகிறது. ஏதோவொன்றிற்கு தீர்வு காணும்போது உள்ளுக்குள் குட்டியாய் ஒரு பெருமிதம் முளை விடுகிறது.
வெகு நாட்களுக்கு முன்பு கவிஞர் வெய்யிலுடனான உரையாடலின் போது ஒரு மலரை அதன் பருவம் முழுவதும் அவதானிக்கும் ஒருவன் மனம் எதிர்கொள்ளும் பித்து நிலையைப் பற்றிச் பேசிக் கொண்டிருந்தார்.
ஒன்றை அதன் பருவம் முழுவதும் அவதானிப்பது என்பது அதன் இருப்போடு நம் மனதை இணைத்துக் கொள்வது. அந்த இருப்பின் வழியே நம் பித்தான வாழ்வை அர்த்தப்படுத்திக் கொள்வது. அதன் வழியே நினைவுகளை உருவாக்கிக் கொள்வது.
என் கணினியை வெகு காலமாய் நானும் ஒரு மலரைப் போலவே அவதானிக்கிறேன். எவ்வளவு உரையாடல்கள். அழுத்தங்கள். கொண்டாட்டங்கள். உறக்கமற்ற இரவுகள். பைனரிப் பெட்டகம் வண்ணமயமான பெரும் காலத்தை தனக்குள் புதைத்து வைத்திருக்கிறது. அட்சயம் போல நினைவுகளை வழங்கிக் கொண்டிருக்கிறது.
மென்பொருளோடு வாழ்வென்பது ஆசீர்வதிக்கப்பட்டது நண்பர்களே!



Comments
Post a Comment