குளம்படி - வழித்தடம்

குளம்படி நாவலில் கீதாரிகளின் வாழ்வு இருக்கிறது. அவர்களுடைய அன்றாடங்கள், நம்பிக்கைகள், பண்டுவம், மேய்ச்சல் சார்ந்த நிலவியல், தட்பவெட்பம், இடம்பெயர்வு, மாறிவரும் நவீன உணவு உற்பத்தி முறையினால் மண்ணின் மறுசுழற்சிக்கு ஏற்படும் சிக்கல்கள் என நுட்பமான பதிவுகள் இருக்கின்றன. கதை முழுவதும் உலவும் பாசாங்கற்ற மனிதர்களைப் போலவே அலங்காரமற்ற மொழி இருக்கிறது. ஆனால் அம்மொழியே கலையின் செறிவிலிருந்து விலகியும் நிற்கிறது.
இலக்கியங்களி்ன் வழியான இனவியல் பதிவுகள், அதிலும் குறிப்பாக புனைவுகளின் வழியாகச் சொல்லப்படும் ஒரு இனத்தைப் பற்றிய பதிவு, ஆய்வு நோக்கில் எழுதப்படும் கட்டுரைகளைவிட எளிதில் ஒரு வாசகப் பரப்பைச் சென்று சேர்ந்துவிடுகிறது. மேலும் பிற்காலத்தில் இத்தகைய எழுத்தியக்கப் படைப்புகளின் அடிப்படையில் கொண்டு மேற்கொள்ளப்படும் “இலக்கிய மானுடவியல்” ஆய்வுகளுக்கு ஆதாரங்களாகவும் அமைகின்றன.
அவ்வகையில் கீதாரிகளின் வாழ்வியலின் அடிப்படையில் எழுதப்பட்ட “குளம்படி” நாவல் இனவியல் படைப்பு எனும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.
அதேவேளை, கலைப்படைப்பாக நாவலில் பலவீனங்களும் தென்படுகின்றன. கதையின் திருப்புமுனைகளும், உச்சங்களும் பகுக்கப்பட்ட அத்தியாங்களுக்குள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. இருப்பினும், “வீறல்விட்ட பானையின் ஓசையாக அவரது குரல் நைந்துபோய் வந்தது” என்பது போன்ற எளிய தெறிப்புகளும், “செட்டியைக் குடிகெடுத்த வெள்ளி” போன்ற நாட்டார் வழக்காற்றியல் கதைகளும், ஆடுகளுக்கு செய்யப்படும் பண்டுவங்களுமாய் தொய்வடையும் கதையோட்டத்தை ஈடு செய்கின்றன.
வெற்றிச்செல்வனிடம் எளிமை இருக்கிறது. தன் வாழ்வின் வழியே கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து வைத்திருக்கும் இனவியல் தரவுகளும், அனுபவங்களும் இருக்கின்றன. கலையாக்கத்தை நோக்கி நகரும் துடிப்பும், தன்முனைப்பும் இருக்கின்றன. அதேவேளை தன் தனித்தமிழ் ஆர்வம் புனைவில் வலிந்து நுழையாமல் பார்த்துக் கொள்வதும், ஆவணப்படுத்துதலுங்கும் புனைவாக்கத்திற்குமான இடைவெளியை இன்னும் துல்லியமாய் கையாள்வதும், மொழியின் நுட்பங்கள் கைகூடி வருவதும், அவரை இன்னும் பல உயரங்களுக்கு இட்டுச் செல்லலாம்!


நன்றிண்ணா 😍. தங்களின் இக்கருத்துரை கண்டிப்பாக அடுத்த படைப்பிற்கான வழிகாட்டுதல்! மிக்க மகிழ்ச்சி!
ReplyDelete