சிகரி மார்க்கம் - உப்புக் காற்றின் கதைகள்


வெற்றிலைக் கறை படிந்த சிவந்த பற்களுடன் லாத்தாம்மாதான் முதன் முதலாக தன் துணி மூட்டையிலிருந்து அரபு தேசத்தை அவிழ்த்துக் காட்டினாள். வழுப்பான துணிகள், முதலை மார்க் பச்சை பெல்டுகள், ஜரிகை இழையும் கைலிகள், பேரிட்சை பழங்கள், வாசனை திரவியங்கள் என வந்து விழுந்து கொண்டிருந்த அரபு தேச ஆச்சர்யங்களோடு சேர்த்தே வாப்பாக்களையும், உம்மாக்களையும் அறிமுகம் செய்தாள். எங்கள் வீட்டு அத்தான்களுக்கு மத்தியில் அவளுடைய மச்சான்களும், மச்சிகளும் புழங்கத் தொடங்கின.

வழுவழுப்பான பச்சை நிற மினார்களுடன் தூரத்தில் நின்று கொண்டிருந்த கொடிக்கால் பாளயம் பள்ளிவாசல் இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்தது. ‘பிள்ள பயந்து கெடக்கு விசாலக்கிழம நாகூர் தர்காவுக்கு போயி மந்திரிச்சு வந்துடுக’ என்பது வரை அவள் வழியாகத்தான் நம்பிக்கைகள் அடுக்கடுக்காக வீட்டுக்குள் நுழைந்தன.

“ஈச்சமர தோப்புக்குள்ளே எழுந்தாச்சு கட்டிடமே
ஈரைந்து மாதத்திலே தீர்ந்து விடும் ஒபந்தமே!!
ஆக்க பொருத்தவளே ஆறப் பொறு ரத்தினமே!
கண்ணுக்குள்ள வாழ்பவேளே,கல்புக்குள்ளே வாழ்பவளே
இன்சா அல்லா விரைவில் வருவேன்; 
உன் இஸ்டம் போல
நினைத்தது எல்லாம் தருவேன்.”

எனும் முடியும்  “கப்பலுக்கு போன மச்சான்” பாடலும், “இறைவனிடம் கையேந்துங்கள்” எனும் ஹனீபாவின் குரலும் அப்பாவின் டீக்கடையில் ஒலிக்கத் தொடங்கின.

லாத்தாம்மா அறிமுகப் படுத்திய ஆர்சர்யங்களில் இன்னமும் வசீகரம் குறையாத ஒன்று, பாய்மார்களின் “கடல் பயணம்”. அவள் துணி மூட்டையிலிருந்து எழும் விதவிமான அத்தர் மற்றும் நறுமண புட்டிகளின் மணங்களைப் போலவே அவள் சொல்லும் கடல் வழி பயணக் கதைகள் சுவாரஸ்யமானவை.

இப்போது யோசித்தால், நானும் சில காலமாகவே கடலைப் பற்றி பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன்.

கடந்த இரண்டு நாட்களாக அத்தனை கடல்களையும், கதைகளையும் மீண்டும் மீண்டும் நினைவுக்குள் இழுத்து வந்து வீசுகிறது ரியாசின் “சிகரி மார்க்கம்”.

ஒவ்வொரு கதையிலும் கடல். ஒவ்வொரு கடலிலும் ஆயிரம் கதைகள். ஆயிரமாயிரம் மனிதர்கள்.

கட்டுமரம், படகுகள், மீன்கள், உப்பளம், கடற்கரை கிராமங்கள், சத்தியங்கள், ஏமாற்றங்கள், நன்றிக்கடன், மன்னிப்பு, வன்முறை என அனைத்தையும் உப்புக் காற்றோடு இணைத்துக்கொண்டு இஸ்லாமியர்களின் வாழ்க்கைப் பாடுகளின் வழியாக பயணப்படும் கதைகள்.

எங்கு பார்த்தாலும் சிங்கத்தை நினைவூட்டும் சிங்கப்பூரில் சிங்கம் இல்லை. ஆனால் ஒரு தேசத்தின் பெயரில் வாழ்ந்து வரும் அந்த தொன்மத்திற்கு உயிர் உண்டு. அது இன்றும் புனைவுகளில் தன் பிடறியை சிலிர்த்துக் கொண்டு எழுந்து வருகிறது. அந்த தொன்மத்தின் ஆன்மாவை ரியாஸ் ‘சிங்கா’ சிறுகதையில் உயிர்தெழச்செய்யும் விதம் அலாதியானது.

இஸ்லாமியர் வாழ்வின் களமும், அதற்குள் இழையோடும் மொழியுமே ரியாஸின் கதைகளை அடிப்படையாக கட்டியெழுப்புகின்றன. கதையின் ஆன்மாவை இவ்விரண்டும் துணைகொண்டும் எப்படி கட்டியெழுப்புகிறார் என்பதையே தனிப்பட்ட முறையில் அவர் கதைகளில் நான் தொடர்ந்து அவதானிக்க விரும்பியிருக்கிறேன்.

அவ்வகையில் நகுதாவும், பெம்பலாவும் புனைவில் ஆன்மாவை நுட்பமாக இழையோடச் செய்யும் ரியாசின் துல்லியம் வெளிப்படும் கதைகள்.

அவரின் முந்தைய ‘சேஞ்ச் ஆலி’ கதை குறித்து எனக்கிருந்த விமர்சனம், இத்தோகுப்பில் இடம்பெற்றுள்ள “மலே பாஜி” கதையில் உண்டு.

தவிர, நுண்ணுணர்வுகளை நுட்பமான உரையாடலில் இழைத்துப் பின்னும் லாவகமும், செல்வியின் கனவுகளில் அலையாடும் பிறைகொடிக் கப்பல்களைப் போல, கற்பனை முளைத்தெழும் புனைவுக் காட்சிகளை நம் கண்முன் கொண்டு வரும் சாதுர்யமும் வெளிப்படும் கதைகள்.

ரியாஸின் அறிமுகத் தொகுப்பு ‘அத்தர்’ ஆசியப் புனைவுகளில் ஒரு மைல்கல். ரியாஸின் முன்னிருக்கும் ஆகப்பெரிய சவால் ‘அத்தர்’ தொகுப்பை விஞ்சுவதே!

Comments