எல்லோரின் பொருட்டு எல்லோருக்கும் சிலுவை




கிடைத்ததை நினைத்தபோதே கொடுக்கும் மடைமையை 'கொடை மடம்' என்கிறது சங்க இலக்கியம். சாம்ராஜின் கொடைமடம் நாவல் அந்த மடைமையின் எல்லை வரை சென்று, அங்கிருந்து தவறிப்போன வாழ்வின் பாதையின் மீது நடுக்கத்துடன் ஒரு தீக்குச்சியை பற்றவைத்து நீட்டுகிறது.

நாவலில் மூன்று பிரதான கதாப்பாத்திரங்கள். அல்லது சரடுகள். முகுந்தன், ஜென்னி மற்றும் மதுரை.

நாவல் தொடங்கி முடியும் சமணர் படுகை, ‘எப்போதாவது தன்னை நதி என்று உணர்ந்துகொள்ளும்’ வைகை, கோக்கோ கோலாவிடம் தோற்றுபோகும் சக்தி -கிருஷ்ணா தியேட்டர், இடம் மாறும் காவல் நிலையம், மாட்டாஸ்பத்திரி மணம் வீசும் காதலியின் வீடு, நடுக்குளம் கண்மாய், கோரிப்பாளையம் என விரியும் நிலக்காட்சிகளும், நுட்பமான வரலாற்று பின்ணணிகளும், அவற்றோரு ஊடாடும் இயக்க அரசியலும் என “மதுரை” நாவல் முழுவதும் ஒரு கதாப்பாத்திரமாகவே உடன் வருகிறது.

அதன் வீதிகளில் கேள்வித்தாள்களை கைகளிலும் கேள்விகளை நெஞ்சிலும் சுமந்து அலையும் முகுந்தனுக்கு சாம்ராஜின் சாயல்.

“மார்க்ஸை இயேசுவாக்கி அவரை புரட்சிகர கட்டுப்பாடு என்னும் சிலுவையில் உயிர்த்தெழ முடியாத அளவிற்கு அறைஞ்சு வச்சிட்டீங்களே தோழர்” என்ற முகுந்தனின் கேள்விக்கு பின்ணணியில் சாம்ராஜின் கரகரப்பான குரல் ஒலிப்பதை எப்படிக் கடந்து செல்வது?

அதிகாரமற்றர்களுக்காக உதித்தெழும் வறட்டு சிந்தாந்தங்கள் ஒரு கட்டத்தில் தன்னைத் தக்கவைக்க அதே அதிகாரத்தை நம்பத்தொடங்குகின்றன. தயக்கமின்றி வலுவற்றவன் மீது வன்முறையைச் செலுத்துகின்றன. ஜென்னி அத்தகைய, எளிதில் மறுதலிக்க முடியாத, முரட்டு சித்தாந்தங்களின் தொகையாகவே வருகிறாள்.

அப்பழுக்கற்ற சித்தாந்தங்களை நம்புகிறாள். காதல் கொள்கிறாள். பண்பட்ட விலங்கினைப் போல காமத்தை ஏற்கிறாள். ஆனால் அவள் கழுத்தை எப்போதும் அந்த சித்தாந்த இறுக்கம் சுற்றிக் கிடக்கிறது. அது தன் காதலனை புனிதப்படுத்த அவனை பூட்டிய அறைக்குள் சிறைவைக்கத் துணிகிறது. அண்டை வீட்டுக்காரனைப் பழிவாங்க தயக்கமின்றி வன்முறையை ஏவுகிறது.

இந்த மூன்று பிரதான சரடுகளையும் பற்றியபடி, வழி நெடுக உபகதைகளை இணைத்துக் கொண்டு, சித்தாந்தப் பற்று கொண்ட தோழர்களின் எதிர்பார்ப்புகளை, தியாகங்களை, துயர்களை, கீழ்மைகளை, ஏமாற்றங்களை எளிய பகடிகளின் வழியே லாவகமாய் நெஞ்சில் சொருகியபடி நகர்கிறது கொடைமடம்.

தனிப்பட்ட முறையில் எனது நாவல் வாசிப்பு அனுபவங்களை கொடைமடம் கலைத்துப் போடுகிறது. முதன்மை கதாப்பாத்திரங்களிலிருந்து அதிகம் விலகாத ஓர்மையுடன், அவர்களின் வாழ்வின் வழியே தரிசனங்களாய் விரியும் வழக்கமான நாவல்களின் கட்டமைப்பைப்பிலிருந்து கொடைமடம் தனித்து நிற்கிறது. எத்தனை உபகதைகள்? எத்தனை மனிதர்கள்? அத்தனையையும் தனக்குள் வாரிச் சுருட்டிக்கொண்டு ஒரு காட்டாறு போல நகரத்தொடங்கும் நாவல், அதன் இறுதியில் பெரும் பாரத்தின் சாரமாய் திரண்டு நிற்கிறது.

சிதறும் மா-லெ குழுக்கள், அவற்றிற்கிடையேயான சித்தாந்த முரண்கள், அவை முன்னிருத்தும் வறட்டு வழிமுறைகள், இவை எல்லாவற்றின் முன்பாகவும் தன்னை ஒப்புக்கொடுக்கும் தோழர்களின் அர்பணிப்பு என கொடைமடத்திற்கு வெளிப்படையான அரசியல் முகம் உண்டு. ஆனால் என்னளவில் அரசியலுக்கு அப்பாற்பட்டு, எளிய நம்பிக்கைகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் நகர்ந்து செல்லும் சாமானியன் வாழ்வை கலைத்துப்போடும் சமூக எதார்த்தங்களின் எளிய முகமாகவும் கொடைமடத்தை பொருத்திக்கொள்ள முடிகிறது.

நாவல் முழுவதும் வித விதமான மனநிலைகள்.

“தோழர் நம்ம பத்திரிக்க புரட்சிகர வீரன் ரொம்ப பழையது இருக்கு. அதுல (புளியோதரை) கட்டலாமா?” என்று தயங்கியபடி, புரட்சியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தொடக்க நிலை சித்திரங்கள் ஒருபுறம்.

மறுபுறம், “இந்த வாழ்க்கையை அழகாக வாழவேண்டும். மூல நூல்களை வாசித்துக் கொண்டு, சமையலே இல்லாமல், பழங்களைச் சாப்பிட்டுக்கொண்டு, நாள் முழுக்க தத்துவம் பயின்று, அதை விவாதித்து, பிற உயிர்களிடத்தில் அன்பாய் இருந்து இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கலாம்” என காதல் கடிதம் எழுதும் முரட்டுச் சித்திரங்கள்.

இவற்றிற்கிடையே, தலைமறைவு வாழ்வு வாழும் தோழருக்கு, தான் பல வருடங்களாக கண்காணிக்கப்படுவதில்லை அந்த உண்மை தெரியவருகிறது. பொதுச் சமூகத்திலிருந்து நெடுங்காலமாய் தனிமைப்பட்டுக் கிடக்கும் அந்தக் குரல், “என்ன சார் பண்றது 25 வருஷமா இப்படியே பழகிடிச்சு” என்று பதில் சொல்கிறது.

இப்படியாக, சாம்ராஜின் பகடியும், அரசியலும் நுட்பமாக வெளிப்படும் இடங்களைப் போலவே அவரின் கதாப்பாத்திரங்களின் பெயர்களுக்கும் முக்கியமான இடமுண்டு.

சிரிப்பதையும், அழுவதையும் மறந்து போன தோழரின் பெயர் “கலைக்கோ”. ஜென்னியின் வளர்ப்பு நாய்களின் பெயர்கள் ஜாக்கிஜான், முகமது அலி, புருஸ்லீ. எண்பதுகளில் ML குழுக்களில் ஹோமியோபதி படிப்புக் குழுக்கள் முளைக்கத் தொடங்கிய நேரத்தில் தோழர் சிவம் தன் குழந்தைக்கு வைக்க விரும்பும் பெயர் அமேலி (ஹோமியோபதியின் தந்தை சாமுவேல் ஹனிமனின் மகள் பெயர்). அதுவே பின்னர் மாமியாரின் பிடிவாதத்தால் “அமலா” ஆகிறது. (அதே தோழர் சிவம் பின்னாளில் வயிற்று வலிக்கு கொடுக்கும் ஹோமியோபதி மருந்து ஓவர் டோசாகி, கலவியின் எண்ணிக்கையை அதிகரிக்க, அதே மருந்துக்கு, “lyco podium - 200 வீரியம் - வயக்ரா” என குறிப்பெழுதுவதெல்லாம் அதகளம்.)

மேலும், கொடைமடம் நாவல் முழுவதும் நிலக்காட்சிகளை சாம்ராஜ் சித்தரிக்கும் விதம் தனித்துவமானது.

திண்டுக்கல் சாலையில் ஒருபுறம் கையில் உருவிய வாளுடன் கட்டபொம்மன் நிற்க, அவர் பின்னால் நேர்க்கோட்டில் சிலுவையில் தொங்கும் கர்த்தர் சிலையை விவரிக்கும் காட்சியின் சித்தரிப்பு இப்படி நீள்கிறது…

“வாளும், சிலுவையும் ஏதோ ஒரு இடத்தில் சந்தித்துக் கொள்கின்றன. வாளிருக்க்க வேண்டுமெனில் சிலுவை வேண்டும். யாரையேனும் சிலுவையில் தொங்கவிடாது வாள் சமாதானம் ஆகாது. கர்த்தருக்கும், கட்டபொம்மனுக்கும் இடையில் மனிதர்கள் போய்க்கொண்டே இருந்தார்கள்.”

புரட்சிகர இயக்க அரசியல் செயல்பாடுகளை இந்த நாவல் பகடி செய்கிறது என்று குற்றம் சாட்டப்படும் சாத்தியங்கள் உண்டு. ஆனால், இயக்கத்திற்காக தன் வாழ்வை ஒப்புக்கொடுத்து, இறுதியில் மார்ச்சுவரியில் கேட்பாரற்று கிடக்கும் உடலைப் போல நாவல் முழுவதும் நிரம்பிக்கிடக்கும் உடல்களும், கண்ணீரும் அத்தகைய சாத்தியங்களை வலுவற்றதாக்குகின்றன.

நாவலை வாசித்த நண்பர்களில் ஒருவர், “இத்தனை வருடங்களாய்த் தன் தலையில் சுமந்த மதுரையை முழுவதுமாய் சாம்ராஜ் இந்த நாவலில் இறக்கிவைத்துவிட்டாரோ?” எனக் கேட்டார்.

எனக்கு வேறொன்று தோன்றுகிறது. வைகை ஆற்றில் சரக்கடிக்கும் தாமஸ், “ஊத்துறேன். சும்மா கையில வச்சிருங்க. இல்லன்னா எம்ஜிஆர் மாதிரி கீழையும் ஊத்தலாம்.” என முகுந்தனுக்கு ஒரு கிளாஸ் எடுத்து வைப்பது போல சாம்ராஜ்க்கு நாங்கள் ஒரு கிளாஸ் எடுத்து வைப்பதுண்டு. சில நேரங்களில் அந்த கிளாஸ் குறைவது போலத் தோன்றுவதும் உண்டு. ஆனால் சாம்ராஜிடம் மதுரை மட்டும் குறையாமல் உரையாடலில் வந்து விழுந்து கொண்டே இருக்கும். கொடைமடத்தில் எழுதப்பட்ட மதுரை முகுந்தனுக்கு ஊற்றப்பட்ட ஒரு கிளாஸ் மதுவாக இருக்கலாம். இன்னும் எழுதப்படாத மதுரை வைகை ஆற்றில் புதைத்து வைக்கப்பட்ட மற்றொரு பகுதியாகவும் இருக்கலாம்.

அதை, சாம்ராஜோ, தாமஸோ அல்லது வேறு யாரோ கூட எழுதலாம்!

Comments