வாக்குமூலம்
வாசிப்பதின் சாபக்கேடு அது ஒரு சுமாரான வாசகனையும் எழுதத் தூண்டுவதுதான். நான் எழுதிய முதல் சிறுகதைக்கு விருதும் பரிசும் கிடைத்தன. சில வருட இடைவெளிக்குப் பிறகு ‘என் மொழியும், மனமும் கொந்தளிப்பாக இருக்கிறது’ என்று நானே எண்ணிக் கொண்டேன். இன்னும் பல கதைகளை எழுதினேன். அவற்றில் சில கதைகள் கடுமையாக நிராகரிக்கப்பட்டன. அப்படி எழுதிய பல கதைகள் இத்தொகுப்பில் சேர்க்கப்படவில்லை. தயக்கம் என்னை அலைகழித்தது. வேறொன்றாகத் திரித்தது. இன்று முதல் தொகுப்பை நோக்கி இழுத்து வந்திருக்கிறது.
இத்தொகுப்பிற்கான கதைகளை ஓரளவு தேர்வுசெய்து முடித்ததும், இதுவரை என் வாழ்விலிருந்து நான் எடுத்து எழுதாத எத்தனையோ கதைகள் என் நினைவுக்கு வந்து சென்றன. நான் இதுவரை எழுதிய கதைகளை அவை பகடி செய்தன. இப்போதும் தவிப்பும், நிறைவின்மையுமே எஞ்சி நிற்கின்றன. இந்த தவிப்பையும், நிறைவின்மையையும் என்றும் எனக்குள் தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறேன்.
இத்தொகுப்பில் என் வாசிப்பின் பாதிப்புகள் இருக்கின்றன. நான் குடியேறிய நிலத்தின் தொன்மங்கள் இருக்கின்றன. என் குடியிருப்பிற்குப் பின்னால் செத்து விழுந்த புறாக்கள் இருக்கின்றன. கடலடிமைகளின் சாட்சிகளாக, சமத்துவத்தை விரும்பும், ஆலாப்பறவைகள் இருக்கின்றன. ஒளியத் தெரியாத சிறுவனாய் என் மொழி ஆங்காங்கே தன் கையை உயர்த்தியபடி துருத்திக்கொண்டு நிற்கிறது.
என் எழுத்துக்களை இதுவரை அங்கீகரிக்காத, அதேவேளை என்னை தொடர்ந்து உந்தித் தள்ளிக் கொண்டிருக்கும் நண்பர்கள் சாம்ராஜ் மற்றும் இசை இருவரையும் இந்த நேரத்தில் நன்றியோடு நினைவு கூறுகிறேன். இந்த தொகுப்பில் நல்லன நிகழ்ந்திருந்தால் அதன் கணிசமான பங்கு இவர்களுடையது!
#11-191 இலக்கமிட்ட எங்கள் அல்ஜுனிட் கிரஸன்ட் இல்லத்திற்கு ஒரு செல்லப்பெயர் உண்டு. வாசிப்பும், எழுத்தும், கொண்டாட்டமும், கேலிகளும், மன்னிப்பும், கண்ணீருமாய் அதை இன்றும் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் நண்பர்கள் மதிக்குமார் தாயுமானவன், யாழிசை மணிவண்ணன், வினோத் மற்றும் பால்ய நண்பர்கள் வாலி, இளையராஜா ஆகியோருக்கு என் அன்பு!
குறிப்பிட முடியாத சில பெயர்களும் உண்டு. ஒருவேளை இந்த வரிகளை வாசித்தால் அவர்கள் புன்னகைக்கக் கூடும்.
என்னை சகித்துக்கொள்ளும் இணையர் சுபாவுக்கும், மகள்கள் ஸ்வேதா மற்றும் ஶ்ரீஷாவிற்கு என் முத்தங்கள்!
நான் என்றேனும் ஒழுங்குபடலாம். அதுவரை எழுதவே விரும்புகிறேன்.
செந்தில்குமார் நடராஜன்
25-09-2023, 3:21 am
dnsenthil@gmail.com
(நீர்முள் தொகுப்பிற்கான முன்னுரை)



Comments
Post a Comment