வன்முறையின் கையளிப்பு
வீட்டில் தொலைக்காட்சியில் நேரலை ஓடிக்கொண்டிருந்தது. அம்மாவைப் பார்த்துக்கொள்ளும் தாதி, “இன்று இத்தனை மணியிலிருந்து இத்தனை மணிவரை மந்திரம்போல் அதை உச்சரிக்க வேண்டும்” என்றார். “யார் சொன்னது?” என்று கேட்டதற்கு, “டிவியில் யாரோ சொன்னார்கள். பிரதமர் சொன்னார்” என்றெல்லாம் பதில்கள் வந்தன.
பாமரனின் ஆன்மீகம் பெரும்பாலும் எளிய நம்பிக்கைகளாலும், அச்ச உணர்வுகளாலும் பின்னப்பட்டு இருக்கிறது. அதை கிளர்த்த இன்னொருவனின் ஒரு சொல் கூட போதுமானதாக இருக்கிறது. அங்கே தர்கங்களுக்குப் பெரிதாக இடமில்லை.
வேளாங்கன்னி மாதா வளாகத்தில் வெள்ளியில் செய்த உடல் உறுப்புகளோடு தரையில் முட்டி தேய தவழ்ந்து செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் பைபிள் வாசித்தவர்கள் கிடையாது. புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு வரும் இஸ்லாமியர்களும், நாகூர் தர்காவிற்கு வரும் இந்துக்களும் அப்படியே.
எங்கள் வீட்டிலேயே இப்படியான நம்பிக்கைகள் உண்டு. தர்கப்பூர்வமான உரையாடலுக்கும் ஒரு எல்லை உண்டு. அதுவரை உரையாடலாம். எனினும் தனிப்பட்ட நம்பிக்கைகளை, அச்ச உணர்வுகளை அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது.
எங்கள் ஊர் (கும்பகோணம்) ஏற்கனவே ஆன்மீக பேக்கேஜ்களின் நகரமாக மாறிக்கிடக்கிறது. இன்று கூடுதல் களேபரங்கள். இது செய்தால் இது நடக்கும் என்று ஓடிக்கொண்டு இருப்பவர்களை திருத்துவது எவருக்கும் முழுநேர வேலை இல்லை. ஆனால் இது ஆபத்து என்று தோன்றும்போது எச்சரிப்பது எளிய தார்மீகம்.
வினை விதைத்தவன் வினையை அறுப்பான் என்பதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. நம் எதிர்காலத்திற்கும், அடுத்த சந்ததியினருக்கும் எதை விட்டுச் செல்கிறோம் என்பதே முக்கியம்.
நீங்கள் சார்ந்திருக்கும் தரப்புகளை விட்டுத் தள்ளுங்கள். குரூரமான வெற்றிப் பெருமிதத்திலிருந்து கிளர்ந்து எழுவது எப்படி ஆன்மீக உணர்வாக இருக்க முடியும்? சகமனித உணர்வுகளை கொன்றுவிட்டு அந்தச் சமாதியின் மீது எப்படி எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் நிற்கமுடிகிறது. இதில், எதைப் பேசினாலும் அடுத்தவர் மனம் புண்படாமல் பேசுங்கள் என்று அறிவுரை வேறு. ஏற்கனவே மனம் புண்பட்டு நிற்பவர்கள் எதை உங்களிடம் நோகாமல் சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்?
இன்று நடப்பது தேசிய அவமானம். கழுவ முடியாத கறை. இந்த அபத்தத்தை ஆன்மீகம் என்று ஏற்றுக்கொண்டால், இது வன்முறையின் வழியாக நமக்கு கையளிக்கப்படது என்பதையும் சேர்த்தே ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.



Comments
Post a Comment