High Quality MP3 யும், நவீன இசை பூமர்களும்!
தொழில்நுட்பம் இந்த உலகைச் சுருக்குவது போலவே, பல நேரங்களில் நம் ரசனையையும், தேடலையும் கூடச் சுருக்கிவிடுகிறது. அதிக வசதிகளைத் தரும் தொழில்நுட்பம், அதற்கு நேரெதிர் திசையில் தர வீழ்ச்சியை நிகழ்த்துவதும் உண்டு. அப்படியாக இசைத்துறை இன்றைய நவீன யுகத்தில் சந்தித்த வீழ்ச்சிகளில் ஒன்று mp3 தொழில்நுட்பமே!
கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்க்கலாம். ஆடியோ CDக்களின் காலம். 44.1 KHz/16 bit தொழில் நுட்பத்தில் ஒரு நிமிடம் ஓடக்கூடிய இசையை CD-யில் பதிவு செய்ய தோராயமாக 10MB memory தேவைப்படும். இத்தகைய தரத்திலான இசை ஒலிக்கும்போது 1411 kbps எனும் வீதத்தில் தகவல் பரிமாற்றம் நிகழ்கிறது. இந்தத் தரமே CDக்களின் காலத்தில், பாடலில் ஒலிக்கும் ஒவ்வொரு ஒலியையும் துல்லியமாக பிரித்து நம் செவிகளில் கொண்டுவந்து சேர்த்துக் கொண்டிருந்தது.
இந்த kbps வீதமே இன்று நாம் இணையத்தில் கேட்கும் தரத்தினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகவும் இருக்கிறது.
உதாரணமாக நாம் இன்று பயன்படுத்தும் பெரும்பாலான mp3க்களின் அதிகபட்டச் தரம் 320 kbps மட்டுமே. அவை பழைய audio CDக்களின் தரத்தில் கிட்டத்தட் நான்கில் ஒரு பங்கு தரம் கொண்டவையே!
Audio CD-க்களில் அதிகபட்சம் 80 நிமிடங்கள் ஓடக்கூடிய இசையை பதியலாம். இன்றோ ஒரு இசையமைப்பாளரின் மொத்த இசையையும் சில GBக்களில் mp3-களாக சுருக்க முடியும். இந்த வசதிக்காகத்தான் தொழில்நுட்பம் இசையின் தரத்தை சமரசம் செய்துகொண்டது.
YouTube (120kbps) , Spotify (160kbps) போன்ற தளங்களில் இன்று இலவசமாக நாம் கேட்கும் இசையும் compress செய்யப்பட்டவையே! இதே இணையதளங்கள் தங்களுடைய Premium subscribers க்குக் கூட YouTube (256 kbps) , Spotify (320kbps) எனும் தரத்திலான இசையையே வழங்குகின்றன. அதாவது உயிர்ப்பான ஒரு இசை நரம்பின் முனகலையே இவை நமக்கு வழங்குகின்றன.
இதுவரை சொன்னது audio source-ன் தரம்தான். துல்லியமான இசை என்பதை ஸ்பீக்கர், ஆம்ளிபயர், ப்ளேயர் என்று தனித்தனியாக பல காரணிகள் தீர்மானிக்கின்றன. நம் இசையோ இணையத்திலும், ஹெட் போன்களிலும் சுருங்கிக் கிடக்கிறது.
ஆடியோ கேசட்டுகள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் நண்பர் ஒருவர் ப்ளேயர், ஆம்ப்ளிபயர், ஸ்பீக்கர் என்று தேடித்தேடி வாங்கி அசம்பிள் செய்து தருவார். 1983 ல் வெளிவந்த இளமைக் காலங்கள் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற “ஈரமான ரோஜாவே..” பாடலைத்தான் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களில் right, left-களை பரிசோதிக்கப் பயன்படுத்துவார். இன்றும் YouTube-ல் இந்த பாடலின் பல version-கள் உள்ளன. முக்கியமாக Ilayaraja Official சேனலில் அந்தப்பாடலைக் கேளுங்கள். 120kbps தரத்தில் கூட மொத்த இசைக்கருவிகளும் வலது, இடது என துல்லியமாக பிரிந்து ஒலிக்கும். அதே பாடலை வாய்ப்பிருந்தால் பழைய CDக்களில் கேளுங்கள். வித்தியாசங்கள் பிடிபடும்.
இது 9216 kbps (96 khz/24) தரத்திலான உயர் தெளிவுத்திறன் ஆடியோ(High-Resolution Audio) ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் காலம். Tidal போன்ற தளங்கள் அதிகபட்சமாக 9216/kbps வரையிலான தெளிவுத் திறனுள்ள இசையை streaming செய்கின்றன. இதற்கு நமக்குக் கிடைக்கும் இணையத்தின் தகவல் பரிமாற்ற வீதம் ஈடுகொடுக்க வேண்டும். இல்லையெனில் இத்தகைய இசையைக் கேட்கும் மற்ற வழிகளை நாம்தான் தேட வேண்டும்.
கடைசியாக ஒன்று. இன்றும் வினைல் இசைத்தட்டுகளிலும், CDக்களிலும் தேடித்தேடி இசையை கேட்பவர்கள் இருக்கின்றனர். அவர்களில் பலரும் இசையின் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள். நாம்தான் MP3ம், Spotify-ம் பயன்படுத்தும் இசை பூமர்களாக இருக்கிறோம்!



Comments
Post a Comment