நலிந்த இந்தியாவின் ஊட்டம்
பெரியகுளம் எல்லைக்கு உட்பட்ட கிராமம். கூலித்தொழிலாளர்கள் மாந்தோட்டங்களில் காய்களைப் பறித்து, தரம் பிரித்து பிளாஸ்டிக் கூடைகளைகளில் அடுக்கிக்கொண்டிருந்தனர். பெரும்பாலானோர் பழங்குடியின கிராமங்களிலிருந்து வந்து தோட்ட வேலை செய்பவர்கள். ஒரு பெண் குழந்தைக்கு பத்து வயதிருக்கும். அப்பா இல்லை. அம்மா நோய்வாய்ப்பட்டிருந்தார். படிப்பதற்கு விருப்பமுள்ளவள். ஆனால் அவள் வருவாயை நம்பிதான் அவள் குடும்பமே இருக்கிறது. அரசு பள்ளிக்கூடம் கட்டியிருக்கிறது. அரசு விடுதியும் இலவசம்தான். இருந்தாலும் இன்றைய சூழலில் அவள் முழுநேர பள்ளிக்குச் செல்வதன் சாத்தியம் குறைவு.
இது போன்ற சூழல்களை காணும்போது, பொதுச் சமூகம் இரக்கப்படலாம். தனிப்பட்ட சிறு உதவிகளைச் செய்யலாம். ஆனால் அரசாங்கம் இரக்கப்பட்டு நின்றுவிட முடியாது. இதுபோன்ற இடைவெளிகளை களைய வெவ்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டேதான் இருக்க வேண்டியிருக்கிறது.
இன்றும் அரசாங்கம் அளிக்கும் கல்வி வாய்ப்புகளைக் கூட பயன்படுத்திக் கொள்ளமுடியாத நிலையில் பலரும் இருக்கும்போது, சுதந்திரத்துக்கு முந்தைய காலம் எப்படி இருந்திருக்கும்? 2020-களின் கணக்கெடுப்புகள் கூட ஐந்து வயதுக்குட்பட்ட இந்தியக் குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் வளர்ச்சி குன்றியவர்களாகவும் எடை குறைவாகவும் இருப்பதாகவும் கூறும்போது அன்றைய கால கட்டம் எப்படி இருந்திருக்கும்? மேலும், ஒரு மாணவர்க்கு ஒரு அணா மட்டுமே செலவு செய்ய முடியும் என்று பொருளாதார நெருக்கடி நிலவிய சூழல்.
அத்தகைய காலத்தில்தான் சென்னை மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு பகல் உணவு வழங்கும் திட்டத்தை அன்றைய மதராஸ் மாகாணத்தை ஆண்ட நீதிக் கட்சி அரசு தொடங்கி வைக்கிறது. பின்னாளில், நெ.து.சுந்தரவடிவேலு சென்னை மாநகராட்சிக் கல்வி அலுவலராகப் பணிபுரிந்ததன் அடிப்படையில், மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தால் மாணவர் வருகை அதிகமாகிறது என்ற தகவலை காமராஜருடன் பகிர்ந்துகொள்கிறார். பல்வேறு நிதி நெருக்கடிகளையும் கடந்து, தனியார் ஒத்துழைப்புடன் மதிய உணவு திட்டம் தொடங்கப்படுகிறது. திராவிடக் கட்சிகள் அத்திட்டத்தை சத்துணவு திட்டமாக வளர்த்தெடுக்கின்றன. பின்னாளில், இந்திய அளவில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இன்றைய National nutrition supplementation programmes-ல் முக்கியத் திட்டமாக Mid-day meal Programs எனும் மதிய உணவு திட்டம் இருக்கிறது.
இப்படியான எந்தப் புரிதலும் இல்லாமல் சோசியல் மீடியாக்களில் வந்து மாணவர்களை தட்டேந்த நிற்க வைத்துவிட்டனர் என்று எழுதுவதெல்லாம் தடித்த மேட்டிமைத்தனத்தின் வெளிப்பாடு. உணவின் தரம் குறித்து விமர்சனங்களும் இருந்தன என்பதும் உண்மைதான். தினமும் மதியம் ரப்பர் பதத்தில் கோதுமை உப்புமாவும். தட்டு ஓரத்தில் கொஞ்சம் நாட்டுச் சர்க்கரையும் மதிய உணவாக வழங்கப்பட்ட நாட்களில் உணவின் தரம் என்பது இரண்டாம் பட்சம். ஒருவேளை சாப்பாடு உறுதி செய்யப்பட்டிருந்தது. அது நிறைய மாணவர்களை பள்ளிக்கு அழைத்துவந்தது. அதுதான் பிரதானம். அரிசி சோற்றுடன் பருப்பு சாம்பாரும், கீரையும் சேர்ந்தபிறகு நல்ல உணவே கிடைத்தது.
மாணவர்களுக்கு உணவு வழங்க பிச்சை எடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்று காமராஜர் பேசிய இடத்திலிருந்தே, இன்று காலை உணவுத்திட்டம் வரை வந்திருக்கிறோம். கோதுமை கஞ்சியில் தொடங்கித்தான், இன்று முட்டை, பழம் என விரிவாக்கப்பட்டிருக்கிறது. இப்போதைய தமிழக அரசு அறிவித்திருக்கும் "காலை உணவுத் திட்டம்" இந்தத் தொடர்ச்சியில் மற்றுமொரு முன்னோடித் திட்டம்.
அரசியல் ரீதியாக விமர்சனங்கள் கூட இருக்கலாம். இதன் தேவையையும், பலன்களையும் முற்றிலுமாய் எவராலும் புறந்தள்ளிவிட முடியாது.



Comments
Post a Comment