கவிதை பொருள்கொள்ளும் கலை

பெருந்தேவியின் “கவிதை பொருள்கொள்ளும் கலை” எனும் தொகுப்பில், நகுலன் கவிதைகள் குறித்த கட்டுரையில், “அர்த்ததள மயக்கம்” என்னும் சொல்லாடலைப் பயன்படுத்துகிறார். மேலும், ‘சொல் அதனிடமிருந்து தப்பித்தலையும், நிகழ்வென உருக்கொண்டு இருத்தலை உணரவைப்பதையும்’ குறித்த கிறிஸ்டாஃப் ஜியாரெக் கூற்றின் வழி நகுலன் கவிதைகளில் நிகழும் இருத்தலின் விளையாட்டை விளக்குகிறார்.
“யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது
எல்லாம்.”
நகுலனின் இந்த கவிதையை நான் முதன் முறையாக எதிர்கொண்டபோது, இக்கவிதை ஒரு எளிய வார்த்தை விளையாட்டு போலவே தோன்றியது. இரண்டாவது முறை, மூன்றாவது முறை என மீண்டும் மீண்டும் எதிர்கொண்ட போதுதான் இக்கவிதையில் உறைந்திருக்கும் தன்னிலை பிடிபடத் தொடங்கியது.
“யாருமில்லாத” ஒன்றை உணர அங்கே ஒரு தன்னிலையான இருப்பு தேவைப்படுகிறது. ஆகவே அது யாரோ இருப்பதற்கான சாத்தியம் உள்ளதாகிறது. அந்த இருப்பே அங்கு “எல்லாம்” நடந்து கொண்டிருப்பதை உணர்ந்து கொள்கிறது.
இவ்வுணர்வு கிட்டத்தட்ட தனிமை என நாம் புரிந்துகொள்வதில் உறைந்திருக்கும் இருத்தலுக்கு ஒப்பானது. “எல்லாவற்றிலிருந்தும்” தன்னை விடுவித்துக்கொள்ள விரும்பும் அதுவே தனக்குள் “எல்லாவற்றையும்” நிகழ்த்திப் பார்க்கின்றது.
இது இக்கவிதை குறித்து நான் சாத்தியப்படுத்திக் கொண்ட பொருளாகக் கூட இருக்கலாம். ஆனாலும் இக்கவிதை எனக்கு அதற்கான இடம் தருகிறது.
இன்று பெருந்தேவியின் கட்டுரையை வாசித்த பிறகு, இக்கவிதை குறித்த புரிதல் வேறொன்றாக விரிகிறது.
“நீ வந்தாய்
எல்லாம் புதிதாகத் தெரிந்தது
அங்கே
நானுமில்லை
நீயுமில்லை”
எனும் ஆத்மாநாமின் வரிகளுக்குள் இயங்கும் தன்னிலையை, அது மற்றமையாய் திரிவதை எப்படிப் புரிந்துகொள்வது?
அதற்கு, ஆத்மாநாமின் கவிதைக்குள் இயங்கும் “பிளவுபட்ட மனநிலையைப்” பேசும் “எங்கும் உயிரணுக்களின் இயக்கம் - ஆத்மாநாமின் கவிதை மொழி” எனும் கட்டுரையை துணைகொள்ளலாம்.
கவிதைகள் சார்ந்த ‘ரசனை’ மற்றும் ‘கோட்பாட்டு’ விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு கவிதைகளின் மேன்மைகளை, அதன் கலையம்சங்களை புரிந்துகொள்ள உதவும் திறப்புகளாக பெருந்தேவியின் கட்டுரைகளை சுட்டலாம்.


Comments
Post a Comment