மாமன்னன் – கலை வலுவிழந்த சாட்சியம்
கறுப்பு வெள்ளையாக அழுத்தமான முன்கதை. அது படத்தில் பின்னால் பேசப்படவிருக்கும் அரசியலை உணர்வுப் பூர்வமாக எதிர்கொள்ளத் தேவையான மனநிலையைக் கட்டமைக்கிறது. இடைவேளை நெருங்கும் வரை படத்தின் பிரதான கதாப்பாத்திரங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளும் காட்சிகளே இல்லை. கதையின் நாயகன் வில்லனை நேருக்கு நேராக சந்திக்கும் காட்சியே இடைவேளையின் போதுதான் நிகழ்கிறது. மாமன்னனுக்கும் அவர் மகனுக்குமிடையே பேச்சுவார்த்தை இல்லை. காதல் வசப்படும் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே கூட தாமதமாகத்தான் உரையாடல் தொடங்குகிறது. ஒவ்வொரு கதாப்பாத்திரமும் ஒருவிதமான விலக்கத்துடனே அறிமுகம் செய்யப்படுகின்றனர். பின்னர் ஒருவரை ஒருவர் நெருங்கும் போது அவர்களுக்குள்ளான இணக்கமும், முரண்களும் கொஞ்சம் கொஞ்சமாக துலங்கி, சூழலின் அழுத்தத்தை கூட்டிக்கொண்டே செல்கிறது. பின்னர் சட்டென வெடித்துச் சிதறும் உணர்வுப்பூர்வமான இன்டர்வல் ப்ளாக். மாரி செல்வராஜின் வித்தியாசமான underplay crafting முதல் பாகத்தில் கச்சிதமாகவே வெளிப்பட்டிருக்கிறது.
ஆனால், இரண்டாவது பாதியில் கத்தி, துப்பாக்கி சகிதம் விசில் பறக்க crafting தடம் புரளத் தொடங்கி விடுகிறது. (இரண்டாவது பாதியில் பல காட்சிகளில் ஆயுதத்தை எடுப்பது தற்காப்பு என்பதோடு நிறுத்திக்கொள்வது பெரிய ஆறுதல்). மற்றபடி இடைவெளிக்குப் பிறகு கிட்டத்தட்ட யூகிக்கக் கூடிய காட்சிகள். முதல் பாதியில் உணர்வுப் பூர்வமாக நகரும் படம் இரண்டாம் பாதியில் உரக்கப் பேசுத் தொடங்குகிறது. முதல்வரிடம் மாமன்னன் தன் transformation குறித்து பேசும் பாட்ஷா வகை மாஸ் டயலாக், மாணவர்கள் வீட்டு வாசலில்கூடி நின்று பேசும் அரசியல் வசனங்கள், வீடியோ பதிவின் வழியாக மாற்றத்தை கொண்டுவருவது என ஒரு சாதாரண வணிக சினிமாவுக்கு உரிய காட்சிகளுடன் நகரத் துவங்குகிறது. முற்பகுதியில் ரஹ்மானின் பின்னணி இசை மிரட்டலாக இருந்தாலும், அயர்ச்சியூட்டும் புரட்சிகரப் பாடல்கள் பொறுமையிழக்கச் செய்கின்றது. உணர்வுப்பூர்வமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “ராசாக்கண்ணு” பாடல் பொருத்தமில்லாத இடத்தில் சொருகப்பட்டது போல வருகிறது. (கறுப்பு வெள்ளை மான்ட்டேஜ் இன்னும் பொருத்தமான இடமாகத் தோன்றுகிறது)
வடிவேலு எனும் மகா கலைஞனின் ஆதிக்கம் படம் முழுவதும் நீடிக்கிறது. அதிர்ந்து பேசாத உடல் மொழியும், தளர்ந்த முகத்தில் புதைந்து கிடக்கும் ஆழமான உணர்வுகளும் அபாரம். வலியும், இயலாமையும் கூடி மலை முகட்டில் நின்று தனிமையில் கதறும் வடிவேலுவை இத்தனை வருடங்களாக தமிழ்த் திரையுலகம் பயன்படுத்திக் கொள்ள தவறியிருப்பது பெரும் இழப்பு. சூழலுக்கு ஏற்ப மாறும் உடல்மொழியும், முகபாவங்களுமாய் பகத் மற்றொரு நடிப்பு அரக்கன். கதைக்கு எந்த விதத்திலும் வலு சேர்க்காத நாயகி என்றாலும், கீர்த்தி சுரேஷின் பாத்திரப் படைப்பு பரியேறும் பெருமாள் நாயகியைவிட நேர்த்தியான ஒன்றாகவே இருக்கிறது.
உதயநிதி அளவான தேர்வு. உதயநிதி மாரி செல்வராஜிடம் சென்று சேர்ந்ததும், இந்த கதைக்குள் உதயநிதியை மாரி செல்வராஜ் பொருத்தியதும் இருபக்கமும் சாதுர்யமான நகர்வுகள். வணிகமும், அரசியல் பலன்களும் கூட காரணங்களாக இருக்கலாம் என்றாலும், இந்த இணக்கம் இயல்பாகக் கைகூடியிருக்கிறது. தவிர, கலைஞரின் வாரிசுகளாக on screen வழியாக மு.க.முத்து, மு.க.ஸ்டாலின், தொடங்கி அருள்நிதி வரை எட்டிப்பிடிக்க விரும்பிய ஒரு இடம் உண்டு. ஒரு நடிகராகவும், தன் சமீபத்திய கதைத் தேர்வுகளின் வழியாகவும், அது உதயநிதிக்கு ஓரளவு வசப்பட்டிருக்கிறது. அதானால்தான் என்னவோ அவருடைய சமீபத்திய பேட்டிகளில் "target achieved" என்பது போன்ற மனநிலை வெளிப்படுகிறது.
மேலும், சாதிய மனநிலை என்று வரும்போது, பெரும்பாலானத் திரைப்படங்கள் தீண்டாமை உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளையே பேசுவதோடு மட்டுமே நின்று விடுகின்றன. ஆனால் தமிழ் திரைப்படச் சூழலில் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றவர்களின் வரவுக்குப் பின் சாதி அதிகாரத்தின் நவீன முகங்களைப் வெகு நுட்பமாக பதிவு செய்யத் தொடங்கியிருக்கின்றன. மாமன்னன் படத்தின் பகத் கதாப்பாத்திரம் அதற்கு மிகச்சிறந்த உதாரணம்.
ஒரு திரைப்படம் எல்லாவற்றையும் மாற்றிவிடுவதில்லை. ஒரு பக்கம், அரசியல் சாசனம் சமத்துவத்தை அடையும் வழிமுறைகளையும், அவற்றை செயல்படுத்துவதற்கான சட்டப் பாதுகாப்பையும் வழங்குகிறது. மறுபக்கம் இறுகிப்போன சாதி அதிகார மனநிலை தன்னை காலத்திற்கேற்ப புதுப்பித்துக் கொள்கிறது. சமூக நீதிக்கான பெரும் பயணமும், நம் படிப்பினைகளும், நீடிக்கும் இடர்களும், அதை களைவதற்கான முயற்சிகளும், அது சார்ந்த உரையாடல்களும் சேர்ந்தேதான் சமத்துவத்தை நோக்கி நம்மை நகர்த்திக் கொண்டிருக்கின்றன. இந்த பயணத்தில் நாம் எதிர்கொள்ளும் முரண்களை சாட்சியங்களாக கலைப் படைப்புகள் நம் கண்முன் நிறுத்துகின்றன.
மாமன்னன் மாரி செல்வராஜின் தவிர்க்க இயலாத அரசியல் படைப்பு. ஆனால் அவர் முன்னிருக்கும் உண்மையான சவால் கலையாக பரியனே முந்துவதே!



Comments
Post a Comment