கலவிப் பாடல்

செல்லோ (Cello), சாரங்கி, வயலின் போன்ற நரம்பு இசைக் கருவிகளுக்கு ஒரு பிரத்யேகத் வேட்டைத் தன்மை உண்டு. இத்தகைய நரம்புக் கருவிகளின் தந்திகள் மீட்டப்படும் போதெல்லாம், அவை சட்டென மனிதனின் அந்தரங்கத்தில் நுழைந்து, அவன் உணர்வுகளை ஆழமாக கிளர்த்தி விடுகின்றன. கிட்டத்தட்ட தன் ஒருவனுக்காக மட்டுமே யாரோ உள்ளிருந்து உயிர் நரம்புகளை மீட்டுவதைப் போல. இரவில், தனிமையில் ஒற்றைச் செல்லோ அல்லது சாரங்கி இசையைக் கண்ணீர் இன்றிக் கேட்பது சாத்தியமில்லாதது.

நான் தமிழ் திரைப்படங்களின் வழியே கேட்ட செல்லோ மற்றும் வயலின் இசைக் கோர்ப்புகளில் மகத்தானவை பெரும்பாலும் இளையராஜா இசையமைத்தவை. சட்டென நினைவுக்கு வரும் ஒரு உதாரணம் “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” படத்தின் பின்னணி இசை. மனதை வேட்டையாடும் இசைக் கோர்ப்பு.

இத்தகைய இசைக் கோர்ப்பு இளையராஜாவுக்கு மட்டுமே சாத்தியம் என வெகுகாலமாகவே மனம் நம்பியதுண்டு. பின்னாளில் அரோல் கரோலியின் இசையமைப்பில் பிசாசு படத்தின் பின்னணி இசையைக் கேட்டபோது, கிட்டத்தட்ட இளையராஜாவின் இசையைக் கேட்டது போன்ற அதே உணர்வு. காரணம், வயலின் மற்றும் செல்லோ நிகழ்த்தும் ஆழமான அகத் தூண்டல்கள்.

மேலே குறிப்பிட்ட இரண்டு திரைப் படங்களும் உள்ள பொதுவான இன்னொரு அம்சம் மிஷ்கின். நந்தலாலா உள்ளிட்ட மிஷ்கினின் பிற படங்களிலும் மனதை கலங்கடிக்கும் பின்னணி இசையில் வயலினுக்கும் மற்றும் செல்லோவுக்கும் தனித்த இடமுண்டு.

Devil மிஷ்கின் இசையமைப்பாளராய் அறிமுகமாகும் முதல் திரைப்படம். கலவிப் பாடலின் அந்தரங்கம் தந்திக் கருவிகளில் தொடங்குகிறது. அடுத்த சில நொடிகளில் மனதின் ஆழத்திலிருந்து ஏதோவொன்று திரண்டு எழுந்து வருவது போல செல்லோவின் இசை!

அதே பிரத்யேகத் தூண்டல்!

வாழ்த்துகள் மிஷ்கின்!

Comments