யதார்த்த முற்போக்கு இடுக்கும் தேவர் மகனும்…
“தேவர் மகனும் சாதியமும்” என்ற தலைப்பில் ஆசான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
சாதி மத உணர்வுகள் சார்ந்த சமூக யதார்த்தங்களை காட்டும் படங்களை, அவற்றின் உள்ளடக்கத்தின் அடிப்படையாக மூன்று வகைமைக்குள் கொண்டுவந்து, தேவர்மகனை “உண்மைக்கு மிக அணுக்கமாக ஒரு யதார்த்தச் சூழலைக் காட்டிய படம்.” என்கிறார்.
மேலும் “சாதியடுக்கு, சாதிப்பெருமிதம், சாதிய மூர்க்கம், சாதிப் பாசாங்குகள், சாதிய சமூகத்தின் தேக்கநிலை எல்லாவற்றையும் அப்பட்டமாக காட்டியது அது. கூடவே அதில் இருந்து முன்னகர்வதற்கான அறைகூவலையும் அது விடுத்தது.” என்று சொல்லி இவற்றின் அடிப்படையில் தேவர்மகன் “யதார்த்தவாத முற்போக்கு இலக்கியம்” போன்றது என்கிறார். கூடவே, “ஒரு சினிமா சாதிய யதார்த்தத்தை காட்டியது என்பதனாலேயே அது சாதியப்படம் என்று சொல்பவர்கள், உண்மையை ஒளிக்கவேண்டுமென நினைப்பவர்கள்” என்கிறார்.
இதில் நுட்பமான ஒரு முரண் இருக்கிறது.
“சாதிப்படம்” என்று ஒரு படம் முத்திரை குத்தப்படுமானால், அது பிற்போக்குத் தன்மை கொண்டது என்று பொருள்படுகிறது. அதற்கு நேர் எதிராக தேவர் மகனை, “முற்போக்குத் திரைப்படம்” என்றும் சொல்லிவிட முடியாது. “முற்போக்கு” எனும் சொல் தன்னளவில் சமரசம் இல்லாதாது.
ஆனால் கொஞ்சம் நூதனமாக “யதார்த்தவாத முற்போக்கு” என்றால், “முற்போக்கு” என்ற அடைமொழியுடன், “யதார்த்தம்” என்பதற்கான சமரசமும் சேர்த்து, ஒரு சொகுசான இடுக்கில் “தேவர் மகனை” சொருக முடிகிறது.
முதலில், “முன்னகர்வதற்கான அறைகூவல்” விடுப்பதேல்லாம் “முற்போக்கு” படங்கள் என்று ஆகிவிடாது. பொதுவாக சாதி மத பின்புலங்களைக் கொண்டு எடுக்கப்படும் எந்தத் திரைப்படமும் “திருந்தாம சாவுங்கடா…” என்று அறைகூவல் விடுப்பதில்லை. அல்லது அவை ஒரு விதமான “happy ending” நோக்கி நகர்த்தப்படும் template படங்களே! (பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் விதிவிலக்குகள்)
ஒரு உதாரணத்திற்கு Silenced எனும் கொரியன் திரைப்படத்தை எடுத்துக் கொள்ளலாம். (Spoiler ahead…) காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியில், அப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளாலே அந்த குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளைக் குறித்துப் பேசும் படம். Happy Ending எல்லாம் கிடையாது. படம் அறைகூவல் எல்லாம் விடாது. கோர்டில் நடைபெறும் வழக்கும் பாலியல் வன்முறை செய்தவர்களுக்கே சாதகமாய் முடியும். ஆனால், படம் முடியும்போது நம் மனம் குழந்தைகளின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு எதிராய் திரண்டு எழுந்து நிற்கும். இந்தப் படத்தை சந்தேகத்துக்கு இடமின்றி, “யதார்த்தவாத முற்போக்கு” என்னும் வகைமையின் கீழ் வைக்கலாம்.
அப்படியென்றால், தேவர்மகன் முற்போக்கைப் பேசவில்லையா? இல்லை. அது சாதிய மிடுக்கும், மூர்கமும் கொண்ட ஒரு இளைஞனின் குழப்பமான யதார்த்த மனநிலையைப் பேசுகிறது. கதாநாயகன் சுயசாதிப் பெருமையை பேசுகிறான் (உதாரணம் காதலியின் சாதி தன் சாதிக்கு இணையானது என்று பேசுவது உட்பட பல காட்சிகள்), ஆணாதிக்க மனநிலையை வெளிப்படுத்துகிறான் (உதாரணம் “பூ முடிச்சி ஒரு சேலைய கட்டு” என்பது போன்ற பாடல் வரிகள்), தன் சுய அடையாளத்தை விட்டுவிட்டு சாதிய மிடுக்குடன் வலம்வரும் பெரியதேவரின் அடையாளத்தை அவரின் மறைவிற்குப் பிறகு தேவையே இல்லாமல் தூக்கிச் சுமக்கிறான். வாக்குத் தவறாமைக்காக காதலியை விட்டுவிட்டு பாதிக்கப்பட்ட (ஒடுக்கப்பட்ட சமூகப்பெண்ணை) மணந்து கொள்கிறான். அதேவேளை, காட்டுமிராண்டித் தனங்களையும், வன்முறையை வெறுக்கிறான். “விவசாயம் பாருங்க. பிள்ளை குட்டிகளை படிக்க வைங்க” என்கிறான். (பெரிய தேவர் “உன்னை விவசாயம் பண்ணிதான படிக்கவச்சோம்னு” என்று சொல்வது முன்கதை 🙂 ).
இப்படி “அபத்தக் கலவையாகவே உலாவரும் நாயகன் பேசும் முற்போக்கு” என்ற அடிப்படையில் ஜெயமோகன் தேவர்மகனுக்கு “யதார்த்த முற்போக்கு” என்னும் சமரசமான/குழப்பமான இடத்தை தருகிறார் என்று புரிந்துகொள்கிறேன்.
சாதியைப் பற்றிப் பேசினாலே ஒரு படம் எப்படிச் சாதியப் படம் ஆகிவிடாதோ, அதேபோல “உண்மைக்கு மிக அணுக்கமாக ஒரு யதார்த்தச் சூழலைக் காட்டிய படம்.” என்பதனாலேயே அது சாதியப் படம் இல்லை என்றும் ஆகிவிடாது.
தேவர் மகனின் காட்டிய உண்மைதான் என்ன? பங்காளிச் சண்டை. அதனால் ஊரே இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது. இவற்றுக்கு இடையே குழப்பமான கதாநாயகன் நல்லிணக்க சூழலை உருவாக்க முயற்கிறான். இன்னும் குறிப்பாக முயன்று தோற்றுப் போகிறான். இவற்றில் எது நம்மைச் சுற்றி அன்றாடம் நிகழும் யதார்த்தம்? நாடு முழுவதும் பங்காளிச் சண்டை நடந்தது என்பதா? அதற்காக ஊர் ஊராகப் பிரிந்துகிடந்தோம் என்பதா? (90களில் கூட பங்காளிச் சண்டைக்காக ஊரே பிரிந்து கிடந்தது என்பது மிகைப்படுத்தப்பட்ட புனைவு.) அப்படியெனில் எது “உண்மைக்கு மிக அணுக்கமாக” இருக்கிறது? கதைக்களத்தில் நிலவும் பிற்போக்கு மனநிலைகளும், குழப்பமான சாதிய மனநிலையுடன் வலம்வரும் கதாநாயகனின் மனநிலையும்தான் உண்மைக்கு அணுக்கமாக இருக்கின்றன . அந்த அடிப்படையில்தான் தேவர் மகன் நிச்சயம் “முற்போக்குத் திரைப்படம்” எனும் வகையின் கீழ் வருவதில்லை.
மாறாக அதன் நோக்கம், அது ஏற்படுத்திய விளைவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அதற்கான இடம் தீர்மானிக்கப்படுகிறது. தேவர்மகன் வணிகப்படம். அது காட்சிப்படுத்திய யதார்த்தம், நல்லிணக்கத்தை விதைப்பதற்கு மாறாக, சாதிய மூர்க்கமும், சுயசாதிப் பெருமையும் கொண்டவர்களிடையே அதன் தீவிரத்தை அதிகமாக்கவே உதவியது. வலுவற்ற முற்போக்கு சிந்தனையும், சாதிய தீவிரத்தை தூண்டும் காரணிகளின் அடிப்படையில் அது “சாதியப் படமாக” வரையறுக்கப்படுகிறது.
சமூகப் பிரச்சினைக்கு தீர்வாக முற்போக்கு வசனங்களுடனும், காட்சிகளுடனும் ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டால் போதும் எனில், தேவர்மகன் மட்டுமல்ல, “எஜமான்”, “சின்னக் கவுண்டர்” போன்ற படங்கள் கூட முற்போக்குப் படங்கள்தான்.



Comments
Post a Comment