நிதானத்தின் சிறகு

பண் இசைத்துப் பாடுவது தமிழ் மரபு. அரசவைகள், சங்கங்கள், பாணர்கள், பாடினிகள், கூத்து, ஆன்மீகம், பிரச்சாரம், காதல், தாலாட்டு, ஒப்பாரி என வெவ்வேறு தோள்களில் பயணித்த அந்த நெடிய மரபின் தொடர்ச்சியில் திரையிசைப் பாடல்களுக்கும் ஓர் இடம் உண்டு. பொதுவாக நவீன இலக்கியச் சூழலில் கவிதைகள் எனும் வகைமையில் திரைப்படப் பாடல்கள் இடம் பெறுவதில்லை. சந்த நயங்களுடன் எழுதப்படும் கவிதைகளுக்கு மெட்டமைத்து திரைப்படங்களில் பயன்படுத்துவது அரிதாக நிகழ்ந்தாலும், நவீன இலக்கியச் சூழலில் திரைப்படப் பாடல்கள் ஒருவித விலக்கத்துடனே பரிசீலிக்கப்படுகின்றன.

"இன்றைக்கும் கடைசி ரயில் பிடித்து" என்ற தலைப்பில் கவிஞர் யூமா வாசுகியின் கவிதை ஒன்று உண்டு. அக்கவிதையில், கடைசி ரயில் பிடித்து அகாலத்தில் தன் அறையை வந்தடைபவன், உள்ளே நுழைந்ததுமே அங்கு ஏற்கனவே வந்துவிட்டுப் போன தன் காதலியின் இருப்பை உணர்கிறான். இவ்வளவுக்கும் அந்த அறையில் காலையில் விட்டுப்போன தடங்கள் அனைத்தும் சற்றும் பிசகாமல் அப்படியே இருக்கின்றன. அவள் கூந்தலிலிருந்து உதிர்ந்த பூக்கள் இல்லை. அவள் மணம் இல்லை. எனினும், இருப்புகொள்ளாமல் புலப்படும் அத்தனையையும் துழாவுகிறான். 

தரைத்தூசுப் படலத்தில் தடம் பதிக்காமல்
நீ நுழைந்து சென்றிருக்கிறாய்.

என்று சந்தேகத்திற்குரிய அவள் இருப்பை மனம் வலிந்து உறுதி செய்துகொள்கிறது. தேடிக் கொண்டிருப்பவன் கைபட்டுத் தற்செயலாக தண்ணீர் சாடி விழுகிறது. பரவும் ஈரம் நனைக்கிறது. "நனைகிறேன்" என்று கவிதை முடிகிறது. இயலாமை நிறைந்த ஒரு மனம் இல்லாத அவள் இருப்பை அகமாக உணர்ந்து கொள்கிறது. அல்லது தனக்கு அகமாக தேவைப்படும் குறைந்தபட்ச சுயசமாதானத்தை அடைகிறது.

இப்படியான நுட்பமான உணர்வுகளை நெருங்கும் திரையிசை பாடல் வரிகளும் உண்டு. 

ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்!
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்!

எனும் கண்ணதாசன் வரிகளிலும் இப்படியானதொரு தன்னுணர்தல் உண்டு. காதலின் வழியே சாத்தியங்களுக்கு அப்பாற்பட்ட சாகசம் ஒன்றை நிகழ்த்த விரும்பும் ஒரு குரல் உண்டு. ஆனால், சற்று வெளிப்படையாக அவ்வுணர்வை பிரகடனம் செய்கிறது.

இப்படி எழுத்து எனும் அடிப்படையில் நவீனக் கவிதைகளும், திசையிசைப் பாடல்களும் இயைந்து பயணிக்க முற்பட்டாலும், கவிதை ஒரு தனித்த அலகு.  அது தன்னளவில் அனைத்துமாய் இயங்குகிறது. மாறாக திரைப்படப் பாடல் கூட்டுக் கலைவடிவின் ஒரு அங்கமாகவே நம்மை வந்து சேர்க்கிறது. பாடல், இசை, காட்சி என நம் கவனம் தனித்த ஒன்றின் மீது மட்டும் நிலைகொள்ளாத  வகையில் நம் மனதின் கவனம் சிதறிப்போகும் வாய்ப்புகளுடனே திரையிசைப் பாடல்கள் நம்மை வந்து அடைகிறது.

இளம்பரிதியின் பாட்டுவாசி போன்ற புத்தகங்கள் இந்த இடத்தையே இட்டு நிரப்ப முயற்சி செய்கின்றன. ஒரு பாடலை நிதானமாய் பகுத்து நாம் தவறவிட்ட தருணங்களை நிதானமாய் நம் முன் நிகழ்த்திக்காட்ட முனைகின்றன.   

நவீனக் கவிதைக்கான பண்புகளிலிந்து சற்று விலகி நின்றாலும் திரையிசைப் பாடல்கள் ரசனையின் அடிப்படையில் ஒரு சாமானியனை எளிதில் நெருங்கிவிடுகிறது. அவன் தன் அன்றாட வாழ்வின் அன்றாட மகிழ்ச்சியையும், துயரங்களையும், கொண்டாட்டங்களையும் வெகு இயல்பாக, இப்படியான திரைப்படப் பாடல்களின் வழியாக பகிர்ந்துகொள்ள முடிகிறது. மேலும் அது ரகசியமாக அவனுடைய  ஆழ்மனதில் புனைவிற்கான வெளியை திறந்துவிடுகிறது. நவீனக் கவிதைகளில் தென்படும் பூடகத்தன்மைகள் ஏதுமின்றி, சட்டென்று கனவுலகில் சஞ்சரிக்கச் செய்யும் மயக்கம் தோய்ந்த மந்திரக் கதவுகளாக திரைப்படப்பாடல்கள் அவனுக்குள்  திறந்து கொள்கின்றன. ஆகவேதான், திரையிசை பாடல்கள் குறித்தான வெகுஜன ஏற்பை அவ்வளவு எளிதாகப் புறந்தள்ளிவிட முடிவதில்லை. 

இப்படியானதொரு ரசனை சார்ந்த வெளியில் அலைந்து திரியும் இளம்பரிதியின், மூன்றாவது கட்டுரைத் தொகுப்பு இந்த “பாட்டுவாசி”. நாம் ஏற்கனவே கேட்ட, ரசித்த திரையிசைப் பாடல்களை தன் ரசனையின் வழியே பகுத்து அதன் "வாவ்" தருணங்களை மீள் உருவாக்கும் செய்யும் முயற்சி இந்த புத்தகம்.

நம்மில் பெரும்பாலானவர்களின் வாழ்நாளில் ஒரு குறிப்பிடத்தக்க காலத்தை இசையும், பாடல்களுமே ஆக்கிரமித்து இருக்கின்றன. நம் பருவங்களில், நம் நினைவுகளில் வெகு இயல்பாக ஒரு திரைப்படப் பாடலின் மீது அமர்ந்தபடி நுழைந்து வெளியேற முடிகிறது. மூளைக்குள் எங்கோ ஒளிந்திருக்கும் ஒரு பாடல், நம்மையும் அறியாமல், அதன் வரிகளை முணுமுணுப்பதான் வழியாகவும், அனிச்சையாக விரல்கள் தாளம் போடுவதன் வழியாகவும் தன் இருப்பை வெளிக்காட்டி விடுகிறது. நம்  மகிழ்ச்சியும், துயரமும், கொண்டாட்டங்களும், கழிவிரக்கமும் ஒலி நாடாக்களில் பதிந்திருக்கும் பாடல்கள் போல நம் மூளைக்குள் பதிந்து கிடக்கின்றன. இளம்பரிதி, இப்படி நமக்குள் ஏற்கனவே அறிமுகமான பாடல்களில் ஒளிந்திருக்கும் சூட்சுமங்களைத்தான், தன் பிரக்ஞை பூர்வமாக எழுத்தின் வழியாக இளம்பரிதி ரசனை சார்ந்த மீள் உருவாக்கம் செய்கிறார். 

ரசனை சார்ந்த மீள் உருவாக்கம் என்பது, நம் பறத்தலின் நிதானத்தை பரிட்சித்துப் பார்ப்பது. அவசர அவசமாக கடந்து போகும் ஒன்றை நிதானத்துடன் நின்று ரசிக்க வைப்பது. நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ளும் சாத்தியங்களை உருவாக்குவது. இது மேலோட்டமாக "ப்ளாஷ்பேக்" காட்சிகளை மனத்திரையில் ஒட்டிக்காட்டுவது மட்டுமில்லை. அதற்கு கூடுதலாய் சிறகுகளை பொருத்துவது. வேறு உதாரணங்களாக, திரைத்துறையின் இளைய தலைமுறை இயக்குனர்களான கார்த்திக் சுப்புராஜூம், லோகேஷ் கனகராஜூம் தங்கள் இளம் பருவத்தில் ரசித்துக் கொண்டாடிய நாயக பிம்பங்களை, அவர்களின் சில "வாவ்!" தருணங்களை, தன்னுடைய பேட்ட, விக்ரம் போன்ற படங்களில் மறு உள்ளீடு செய்ய முயன்றதை குறிப்பிடலாம். இவை மறுவுருவாக்கம் இல்லை. ரசனைக்குரிய சின்னச் சின்ன நுட்பங்களைத் தேர்வுசெய்து தன் கலைப் படைப்பில் உள்ளீடு செய்வது. ஒருவிதத்தில், இளம்பரிதி தன் எழுத்தின் வழியாக நிகழ்த்த விரும்புவதும் இந்த உத்திகளையே!

இளம்பரிதி பாடல்களில் கண்டடையும் ரசனை சார்ந்த "வாவ்!"அம்சங்களுக்கு அப்பாற்பட்டு, அவரிடம் திரைப்படப் பாடல்கள் குறித்த பிரத்தியேகமான தகவல்களின் உலகம் ஒன்று இருக்கிறது. மேலும், சங்க காலப் பாடல்கள் குறித்த தேடல்கள், ஒப்பிடும் முறைமைகள் என தன் பிரத்யேக பாடல்களின் உலகத்தை செறிவாக்கிக் கொள்ளும் தன்முனைப்பு இருக்கிறது. அதுவே, ஒரு பாடலை, அந்த பாடலின் வரிகளுக்கு உள்ளிருந்து மட்டும் இல்லாமல், புறமாக பயணித்து காலம், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் என வெவ்வேறு முனைகளிலிருந்து அணுக முடிகிறது. ஒருவிதத்தில் இளம்பரிதியின் கட்டுரைகளின் கட்டமைப்பையும், உள்ளடக்கத்தையும் இந்த  கூறுகளே தீர்மானிக்கின்றன. 

எனினும், இந்த பலமே சில நேரங்களில் அவருடைய எழுத்தின் பரந்து விரியும் தன்மையை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்து விடுகின்றன. இது ரசனை சார்ந்த கட்டுரை வடிவத்திற்குரிய பொதுவான எல்லை என்றாலும், ஏற்கனவே உருவாக்கப்பட்ட பாடல்களைச் சுற்றி எழுப்பப்படும் போது, அவருக்குள் தன்னுணர்வாக கிளர்ந்து வரும் எழுத்தை அந்தப் பாடல் வரிகள் பிரதானமாய் ஆதிக்கம் செய்வதும் நிகழ்ந்துவிடுகின்றன. 

மேலும், கடந்துபோன ஒன்றை மீள் உருவாக்கம் செய்யும் போது, அவ்வுருவாக்கம் நிகழ்த்தப்படும் காலத்திற்கேற்ற மொழியை தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த லவ்டுடே திரைப்படத்தின் வெற்றிக்கான காரணங்களில், பிரதீப் ரங்கநாதன் தன் திரைப்படத்தின் வழியாக, ரசிகர்களுடன் உரையாட பயன்படுத்திய சமகால மொழிதலுக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. இளம்பரிதியின் களம் முகநூல். அங்கிருப்பவர்களே அவருடைய பிரதானமான வாசகர்கள். ஆகவே, இயல்பாகவே சமகாலத்தவர்களுடன் உரையாடும் ஒரு எளிய மொழி இளம்பரிதியிடம் இருக்கிறது.

இருப்பினும், முகநூல் வாசிப்பிற்கான எழுத்து, புத்தகங்களாக தொகுக்கப்படும் அம்மொழியை கூடுதல் சிரத்தையோடு பரிசீலிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அவ்வகையில், "மடைதிறந்து" மற்றும் "காலங்களில் அது வசந்தம்" தொகுப்புகளைவிட மொழியாய் கொஞ்சம் செறிவான இடம் நோக்கி "பாட்டுவாசி" நகர்ந்திருக்கிறது. எனினும், இன்னும் கூடுதல் செறிவை நோக்கி நகரும் தேவையும் இருக்கிறது.

சாகாவரம் போல் சோகம் உண்டா?, வெட்கம் - தெய்வப்பதம், நந்தன் கதை சொல்லிப் போராடடா, செம்புலப் பெயனீர், ஒரு பேரரசன் புலம்பல், பொன்னியின் செல்வன் கட்டுரைகளில் காணப்படும் நிதானமும், அவதானிப்புகளும் இளம்பரிதியின் தனித்துவங்கள்! தன்னுணர்வு மிகும் அடையாளங்களை பற்றிக்கொண்டு இளம்பரிதி செல்லவேண்டிய தூரம் நீளட்டும்!

வாழ்த்துகள் இளா!

Comments