எல்லாமே அனுமதிக்கப்பட்டவை!

சமீபத்தில் உளவியல் ஆலோசகர் ஒருவரை சந்தித்தேன். தன்னிடம்  ஆலோசனை பெற வந்த இருவருடன் உரையாடிவிட்டு என்னிடம் வந்தார்.  ஆலோசனை பெற வந்திருந்தவர்களில் ஒருவர் கண்களில் வெகுநாள் களைப்பு. மழிக்கப்படாத முகம். தளர்ந்த உடல் மொழி. மற்றொருவர் வெகு இயல்பாகவும், திருத்தமாகவும் இருந்தார். சற்று நேரம் இருவரையும் கவனித்துவிட்டு குழப்பமுடன் "இவர்கள் உங்களோடு பேசுவதை மட்டும் வைத்துக்கொண்டு உங்களால் எப்படி ஒரு தீர்மானத்திற்கு வரமுடிகிறது?" என்றேன்.


அவர் பதிலிலிருந்து நான் புரிந்துகொண்டது இதுதான். அது ஒரு நீண்ட வழிமுறை. அங்கு உரையாடல் என்பது அதன் ஒரு சிறு பகுதி மட்டுமே. அங்கு ஆலோசனை பெற வருபவர்கள் பெரும்பாலும் தங்கள் ஆழ்மனச் சிக்கல்களை வாழ்வின் அனுபவங்களின் வழியாகவே முன்வைக்கின்றனர். புறத்தோற்றத்தில் அவை பெரும்பாலும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற அற்பத்தனங்கள் மிகுந்த அனுபவங்களின் தொகுப்பு போலவே தோற்றமளிக்கும். மிகையான துயரங்கள், மகிழ்ச்சி, பரவசம், ஏமாற்றம், வெறுப்பு, அன்பு ஆகியவற்றின் சிதறல்களாக இருக்கும். 


அவர் வேலையின் ஒரு பகுதி, ஆலோசனை பெற வருபவர்களை முன்னும் பின்னுமாய் அலைகழிக்கும் அவர்களுடைய உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கு இடம் தருவது. அவர்களை வெளிப்படையாக பேசத்தூண்டும் வகையில் நுட்பமான கேள்விகளை பொறுத்தமான இடங்களில் முன்வைப்பது. இப்படித் தொடர்ந்து அவர்களை சந்திப்பதன் வழியாகவும், அவர்களுடன் உரையாடுவதன் வழியாகவும்  நிச்சயம் உளவியல் ஆலோசகரால் ஒரு ஒழுங்கை கண்டடைய முடிகிறது. அந்த ஒழுங்கின் அடிப்படையில் அதன்பின் இருக்கும் சிக்கலை கண்டடைய முயற்சி செய்கிறார்.  மற்றபடி,  தீர்மானத்திற்கு வருவது என்பதெல்லாம் மருத்துவ சோதனைகளையும் உள்ளடக்கியது


என்னளவில் கரமசோவ் சகோதர்கள் வழியாக தஸ்தயேவ்ஸ்கி நிகழ்த்தும் அற்புதம் இதுதான். அவரின் நாவல்கள் புனைவின் பாதையில் அகமாக நீளும் பயண அனுபவங்கள். அப்பயணத்தில் நம்மோடு இணைந்து கொள்ளும் அவருடைய பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் சிதறுண்டவர்கள். நீண்ட கால மனவொழுங்கு என்று எதையும் பெறாதவர்கள். சமூக விதிமுறைகளோடும், தனிமனித அகம் சார்ந்த நெறிகளோடும் அவ்வப்போது முரண்படும் எளிய மனிதர்கள். தஸ்தயேவ்ஸ்கி இப்படியானவர்களின் வாழ்வில் விரவிக்கிடக்கும் முரண்களின் வழியாக கொஞ்சம் கொஞ்சமாகத் திரண்டு எழும் ஒரு தரிசனத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறார்.


ஒரே ஒரு வித்தியாசம்தான். உளவியல் ஆலோசகர் திட்டமிடப்பட்ட ஒரு தீர்வை நோக்கி முன்நகர்கிறார். மாறாக, தஸ்தயேவ்ஸ்கி முன் முடிவுகள் இல்லாத, ஒரு தரிசனத்தின் கதவுகளை திறந்துவிடுகிறார்.


வரலாற்றிலும், சமகாலத்திலும் நிகழ்த்தப்பட்ட குற்றங்களையும், வன்முறைகளைப் பற்றி யோசிக்கும்போது, தார்மீகத் தீர்வாக அவை சென்று சேரும் இடம் மன்னிப்பு அல்லது தண்டனையாகவே இருந்திருக்கிறது. குற்றங்களைத் தடுக்கும் அதிகாரமும், ஆன்மீகத்தை போதிக்கும் மதமும் கூட இவ்விரண்டையுமே தன் தீர்ப்புகளில் முன்வைக்கின்றன.


ஆனால், மன்னிப்பும் தண்டனையும் அதனளவில் முற்றிலும் ஒன்றுக்கொன்று எதிரானவையாக இருக்கின்றன. உயிரைப் பறிக்கும் தண்டனை அது நிறைவேற்றப்படும் தருணத்தோடு முடிந்து போகிறது. சித்திரவதையை பரிந்துரைக்கும் நரகவாழ்வு உள்ளிட்ட தண்டனைகள் தீர்வுகளை முன்வைப்பதில்லை. மற்ற தண்டனைகளும், மன்னிப்பும் குற்றம் மீண்டும் நிகழ்த்தப்படாது எனும் எதிர்பார்ப்பை நோக்கி குற்றம் இழைத்தவர்களின் மனதை நகர்த்த முயற்சி செய்கின்றன.


ஒருவன் குற்றம் இழைக்கிறான். அதற்காக தண்டனை பெறுகிறான். நல்விளைவாக அந்த தண்டனை நிறைவேறுவதற்கு முன்பே மனம் திருந்துகிறான். அப்போது தெய்வீகத்தின் ஞான ஒளி அவன் மீது இறங்கியதாகக் கொண்டாடப்படுகிறான். இந்த கதை சுகமான ஒன்றாகத் தெரிகிறது. ஆனால், தஸ்தயேவ்ஸ்கி இந்தப் புள்ளியில் இருந்து முன்னும் பின்னுமாய் ஒரு உளவியல் நிபுணரைப் போல பயணிக்கிறார். 


ஒரு முனையில் தண்டனைகாலத்தில் மனம் திருந்தியவனுக்கு, அதற்குப் பிறகு நிறைவேற்றப்படும் தண்டனையையும், இன்னொரு முனையில் மன்னிகப்பட்டவன் இழைத்த குற்றத்தின் கொடூரத்தையும் நிறுத்தி, இந்த இரண்டு முனைகளுக்கு இடையே நிகழும் ஊசலாட்டத்தின் வழியே இந்த உலகம் எவ்வளவு அபத்தமானது என்கிறார்.  நிறுவனங்கள் முன்மொழியும் நித்தியமான வாழ்விற்கும் வன்மமும், குரோதமும், பகையுணர்வும், அன்பும், மன்னிப்பும் மிகுந்து வாழும் சாமானியர்களின் வாழ்விற்குமான இடைவெளியில் நின்றுகொண்டு, 


"நான் கடவுளை மறுக்கவில்லை. எனக்காக அவர் கொடுத்தனுப்பிய நுழைவுச் சீட்டை நான் மரியாதையோடு திருப்பித் கொடுக்கிறேன்! அவ்வளவுதான்!


என்கிறார்.


இந்தக் கேள்விகள் எல்லாம் அதற்குப் பின்னால் வரப்போகும், "மாபெரும் விசாரணை அதிகாரி" என்ற அத்தியாயத்தின் வழியாக,  பூமிக்கு இறங்கி வரப்போகும் கடவுளிடம் அவர் நிகழ்த்தப் போகும் விசாரணைக்கான முன்தயாரிப்பு. மனிதகுலம் இதுவரை எந்த நெறிமுறைகளுடன் வாழ விதிக்கப்பட்டதோ, எதை தன் சுதந்திரம் என்று கருதி வந்ததோ, அவை அனைத்தையும் தலைகீழாகக் கொட்டிக் கவிழ்க்கப்போகும் ஒரு விசாரணைக்காக! அந்த சுதந்திரத்தை கட்டிக்காக்கும் உரிமையைப் பெற்ற மத நிறுவனகளுக்கு ஆக்கவும் அழிக்கவும் கிடைத்த அதிகாரங்கள் குறித்த ஒரு விசாரணைக்காக! பசித்த ஒரு மனிதனின் சுந்ததிரமான வாழ்விற்காக அவனுக்கு வழங்கப்பட்ட 'தேவ அப்பம்' குறித்த ஒரு விசாரணைக்காக!


மந்தையாகிப் போன பலவீனமான மானுட சமூகத்தின் மீது நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் இவ்வுலகில், 


"சாத்தான் என்று எதுவும் கிடையாது என்பதால் மனிதன் தன் சாயலாக சாத்தானை உருவாக்கிக் கொண்டு விட்டான். அவன் கடவுளை உருவாக்கிக் கொண்டுவிட்டதை போல


என்று எழுதும் தஸ்தயேவ்ஸ்கியை இதுவரை வாசிக்காதவர்களுக்குக் கூட, இந்த முழு நாவலையும் அல்ல,  இந்த ஒரே ஒரு அத்தியாயத்தையேனும் வாசியுங்கள் என்று பரிந்துரைப்பேன். 


மேலும், கரமசோவ் சகோதர்கள் நாவலை வாசித்து முடித்ததும் என் முன் திரண்டு நிற்கும் கேள்விகளின் சாரத்திற்கும், மீதமிருக்கும் இந்த வாழ்வை வாழும் வழிமுறைக்கும் நான் அவரின் மொழியிலேயே பெயரிடுவேன்.


“எல்லாமே அனுமதிக்கப்பட்டவை!” 


Comments