டெசிபல் மிகு அயலி
டெசிபல் மிகு அயலி
குடிநீர் தொட்டியில் மலம் கலக்கும் இன்றைய சமூகச் சூழலில் முற்போக்கு பேசும் கலைப்படைப்புகளின் தேவையை குறைத்து மதிப்பிட முடியாது. அவ்வகையில் அயலி சொல்லும் செய்தி தேவைதான். நல்ல கதைக்களம். கதை நிகழும் காலத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்ட சில அசலான கதாப்பாத்திரங்கள். இவ்வளவும் இருந்தும், அயலி கலைப்படைப்பாக சறுக்குகிறது.
அழகாகவும், அழுத்தமாகவும் வரும் தருணங்களுக்கு இடையிடையே, தொலைக்காட்சி சீரியல் பாணி காட்சிகள் மற்றும் பிற்பகுதியில் மிகையாக எழுந்து நிற்கும் வசனங்கள் என ஓரிரு எபிசோடுகளை கடப்பதற்குள் களைப்பாகிவிடுகிறது.
முற்போக்கு பேசும் படங்களில் உரையாடலுக்கு வலுவற்ற எதிர் தரப்பை சித்தரிக்கும் போக்கு அலுப்பூட்டுகிறது. மொத்த ஊரிலும் முற்போக்கு பேசும் ஆண்கள் இரண்டே பேர். ஒருவன் திருடன். மற்றொருவனுக்கு வாய் பேச வராது. மற்றொருபுறம் ஊர் முழுவதும் முற்போக்கு வசனங்கள் பேசும் பெண்கள்.
‘உரக்க’ பேசிக்கொண்டிருந்த இடத்திலிருந்து திரைமொழி எவ்வளவோ தூரம் கடந்து வந்துவிட்டது. ‘சொல்லுவதற்கு’ தேவைப்படாத வசனங்கள் கலை வடிவத்தில் வழக்கொழிந்து வருகின்றன.
ஊர் கட்டுப்பாடுகளை மீறி முதல் முறையாக தன் மகளை பரிட்சைக்கு வெளியூர் அழைத்துப் போகும் அம்மாவிற்கு, பேருந்துப் பயணமும், செல்லும் வழியும் கூட புதிதுபோல் இருக்கிறது. அம்மா குழந்தை போல் தலையை நீட்டி வேடிக்கை பார்க்கத் துவங்குகிறாள். மகள் பெருமிதத்தோடு ஜன்னலோர இருக்கையை அம்மாவுக்குத் தருகிறாள். அம்மாவின் முகபாவங்களின் வழியாகவே கவிதை போல காட்சி விரிகிறது. இருந்தும் “இதல்லாம் புதுசுதான்…” என்று வசனம் ‘பேசுகிறது’. இது பரவாயில்லைதான்.
இன்னொரு காட்சி. ஒரு வீட்டு வாசலில் தந்தை தன் மகனுக்கு (ஐந்து வயதிருக்கலாம்) சோறூட்டுகிறார். உனக்கு என்ன வேண்டும் என கேட்கும் அப்பாவுக்கு, மகன் அக்காவை பள்ளிக்கூடம் அனுப்பச் சொல்லி கேட்கிறான். (?!?) அதற்கு தந்தை அந்த பொடியனுக்கு நம் ஊர் கட்டுப்பாடு, பண்பாடு, பழக்கம் வழக்கம் என வகுப்பெடுக்கத் துவங்குகிறார். அதைப் பார்க்கும் இன்னொருவர், “என்னடா புள்ளைக்கு பீய ஊட்டிட்டு இருக்க?” என்கிறார். இங்கேயே உரையாடல் சிறுவனுக்குப் புரியும் மொழியிலிருந்து இரண்டு பெரியவர்கள் புரிந்துகொள்ளும் மொழிக்கு மாறிவிடுகிறது. அதன் பிறகும் சிறுவன் அப்பாவைப் பார்த்து “அப்பா.. வாயக் கழுவுப்பா நாறுது” என்று பிற்போக்கைச் சாடும் வசனம் பேசுகிறான்.
தனக்கு தந்தையின் வழியே சீர்கேடான கலாச்சாரமும், பழக்க வழக்கமும் ஊட்டப்படுகிறது என்பது அந்த ஐந்து வயது சிறுவனுக்குப் புரிந்து தன் அப்பாவின் செயலை தானும் மறைமுகமாக சாடுவது போல ஒரு வசனம். இவ்வளவு தெளிவாகப் புரிந்துகொள்ளும் பிள்ளைகள் இருக்கும் ஊரிலா ஆண்கள் அவ்வளவுபேரும் கூமுட்டைகளாக இருக்கின்றனர் என்று நினைத்தால் விழிபிதுங்குகிறது.
இப்படியாக இயல்பாக தொடங்கும் எபிசோடுகள் போகப் போகப் புரட்சிகர டோனுக்கு மாறிவிடுகின்றன. ஒரு கட்டத்தில் கேமராவில் தென்படும் பெரும்பாலான பெண்களும் மாறி மாறி புரட்சிகர வசனங்களை பேசத் தொடங்கிவிடுகின்றனர். கடைசி எபிசோடில் முன்வரிசையில் சிறுமிகள், பின் வரிசையில் பெரியவர்கள் என வரிசையாக நிற்கும் பெண்கள் மாறி மாறி ஆளுக்கு ஒரு வசனம் பேசும்போது முற்றிலும் தொலைக்காட்சி சீரியல் காட்சி போல் மாறிவிடுகிறது.
சிக்கனமாய், கச்சிதமாய் வசனங்கள் பொருந்தும் இடங்களும் உண்டு.
பிற்போக்கான சூழல்களிலெல்லாம் “எல்லாம் உன் நல்லதுக்குத்தான்” என வழிநடத்தும் அம்மாவின் முன்பாக கள்ளச்சாராயத்திற்கு தன் கணவனை பறிகொடுத்துவிட்டு நிற்கும் சிறுமி, “இப்ப நான் என்ன செய்யனும்மா?” என்று கேட்கிறாள். சிக்கனமாய், இறந்த கால நிகழ்வுகளை பட்டியல் போடாமல், வரும் இந்த வசனம் எத்தனையோ கேள்விகளை எழுப்புகிறது. எத்தனையோ கேள்விகளுக்கு பதில் சொல்லிவிடுகிறது.
ஒரு காட்சியின் வழியாகத் தான் உணர்த்த விரும்புவதை ரசிகன் புரிந்துகொள்வான் என்று நம்பும் படைப்பாளி தேவைக்கு மிகையான அதிர்வுகளை அனுமதிப்பதில்லை. இது ரசிகனும் கலைஞனும் கலாரசனையின் வழியே தங்கள் முதிர்ச்சியை பரஸ்பரம் புரிந்துகொள்ளும் புள்ளி.
அயலி தான் சொல்ல வந்ததை சொல்கிறாள். ஆனால் அதையே மிகையான டெசிபல்களில் ‘உரக்கச்’ சொல்கிறாள்.



Comments
Post a Comment