India: The Modi Question

 


வீதிகளில் நிகழும் மதக்கலவரக் காட்சிகளில் தொடங்கும் இந்த ஆவணப்படம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித்தவிக்கும் இன்றைய சர்வதேச அரசியல் சூழலில், தனிமனித உரிமை ஏன் பெரிதாக பொருட்படுத்தத் தக்க ஒன்றாக இல்லை என்ற இடத்தை வந்தடைகிறது.

“இன்று அதிகாரம் ஒற்றை மனிதனின் கைகளில் இருக்கிறது. ஒருவேளை வரும் தேர்தலிலும், அதற்கு அடுத்த தேர்தலிலும் வெற்றிபெறும் பட்சத்தில், இன்றைய இளம் தலைமுறைக்கு இது மட்டுமே அவர்கள் அறிந்த இந்தியாவாக இருக்கும்..”  என்ற செய்திக்குப் பிறகு, மோடி இரண்டு கரங்களையும் தலைக்கு மேல் உயர்த்தி “ஹர ஹர மகாதேவ்” என்று முழங்குவதுடன் முடிவடைகிறது.

சாதாரண வீதிகளில் சிறுபான்மைக்கு எதிரான மத வெறுப்புணர்வு பிரச்சாரங்களில் தொடங்கி, கோத்ரா ரயில் எரிப்பின் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்ட குஜராத் கலவரங்கள், மாட்டிறைச்சிக்காக நிகழ்த்தப்பட்ட மரணங்கள், கஷ்மீர் இணைப்பு, NRC/CAA, ராமர் கோயில் என நீளும் வரலாற்றுத் தொடர்ச்சியையும், ஒரு தேசத்தில் தன்னை சர்வ அதிகாரம் பொருந்திய இடத்தில் நிலை நிறுத்திக் கொண்டதன் பின்னணியில் தொக்கி நிற்கும் கேள்விகளை “The Modi Question” தொகுத்து வழங்குகிறது.

அரசு அதிகாரம் எப்படி தனிமனிதர்களால் வளைக்கப்பட்டது, கருத்து சுதந்திரம் எவ்வாறு நசுக்கப்பட்டன என்பன போன்றவை ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே, மற்றொருபுறம் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் தேர்தல் அரசியலின் வழியாக தன்னை பலப்படுத்திக் கொண்டது எப்படி என்கிற முரணையும் இந்த ஆவணப்படம் கேள்விக்கு உட்படுத்துகிறது.

குஜராத் மதக்கலவரங்களுக்குப் பிறகு கடுமையான முகத்தோடு மோடி மீடியாவை எதிர்கொண்டது நேரடியான நிகழ்வு. அதன்பின் இருக்கும் வன்மத்தை நேரடியாகவே புரிந்துகொள்ளலாம். அதேவேளை, மேடைகளில் ஒருபுறம் இந்துத்துவ கோஷங்களையும், மறுபுறம் தேசபக்தி கோஷங்களையும் சேர்த்து முன்னெடுக்கும் ஆபத்தை புரிந்துகொள்வதில்தான் இன்றுவரை சிக்கல்கள் நிகழ்கின்றன. 

தேசிபக்தி என்பது பெரும் கூட்டுச்சொல். சமத்துவம், சகோரத்துவம் என சகமனிதனோடு பகிர்ந்துகொள்ளும் மனதநேய பண்புகளிலிருந்து எழுந்து வரும் தொகுப்பு உணர்வு. ஒருபக்கம் “ஜெய் ஶ்ரீராம்” என காவியை ஏந்தி கோஷமிட்டபடி மறுபக்கம் “பாரத் மாதாக்கீ ஜே!” என தேசியக் கொடியை ஏந்தி கோஷமிடும்போது எழும் கோபம், ஒரு மதத்திற்கு எதிரான அல்லது தேசத்திற்கெதிரான உணர்வு அல்ல. சமத்துவமும், சகோதரத்துவமும் மழுங்கிப்போய் புழுத்துப்போன மனங்களுக்கு எதிரான உணர்வு!

அந்த உணர்வையே India: The Modi Question அழுத்தமாக பதிவுசெய்கிறது.

Comments