மலைவலம்



அதிகாலை 4:30 மணி. திருவண்ணாமலை கிழக்கு கோபுரத்திற்கு எதிரில் இருக்கும் பன்னீர் மரம் மழைச்சேற்றில் தன் அப்பழுக்கற்ற வெண்ணிற மலர்களை உதிர்த்திருந்தது. காற்றெங்கும் இன்மையின் நறுமணம். தேரடி வீதியில் இரும்பு அடுப்புகளில் கொட்டப்பட்ட கரி வெந்து தணிந்து செந்நிற பாளங்களாக மின்னிக் கொண்டிருந்தது. கங்குகளின் வெளிச்சத்தில் ஒரு பெரியவர் பெரிய வெந்நீர் பாய்லருக்கு திருநீறுப் பட்டை அடித்துக் கொண்டிருந்தார். சாலையோரம் காவியணிந்த மனிதர்களால் புலர்ந்து கொண்டிருந்தது.

கோவில் வாசலில் பூக்கடை விரித்திருந்த கிழவி பாவ புண்ணியங்களை முழங்களில் அளந்து கொண்டிருந்தாள். கொஞ்ச நேரம் அங்கு வருபவர்களை கவனித்தவாறு நின்றிருந்தேன். “கிரிவலப்பாதை எப்படிப் போகணும்?” என்று கேட்பவர் அனைவரது முகங்களுக்கு முன்பும் புன்சிரிப்போடு தேங்காய், பழத்தட்டை நீட்டிக்கொண்டிருந்தாள். “பூதனாராயணர், இரட்டை பிள்ளையாரை வணங்கி..” என கிளிப்பிள்ளை போல் அலுக்காமல் ஒவ்வொரு முறையும் வழி சொல்லத் துவங்கினார். அடிக்கடி என்னை மேலிருந்து கீழாகப் பார்த்தவர், நான் நகரத்துவங்கியதும், “செருப்பு காலோடவா போறீங்க?” என்றார். மலைவலம் செல்லும் பாதையெங்கும் பூமியில்  லிங்கங்கள் புதைந்து இருப்பதாய் நம்பிக்கை.

தமிழும், தெலுங்கும் கலந்த குரல்கள். அகன்ற இருவழிச்சாலை. சாலையோரம் இடது புறமெங்கும் யாசகம் கேட்டபடி காவியணிந்த மனிதர்கள். ஊனமுற்றவர்கள். தெரு நாய்கள். மலையை மறைத்தபடி எழுந்து நிற்கும் பகட்டான ஆசிரமங்கள்.அஷ்ட லிங்கங்கள். “எதற்கும் எதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என்ற சமயவேலின் வரிகள் நினைவுக்கு வந்தன. எதிர்படும் ஒவ்வொரு முகத்திலும் எனக்குச் சொல்ல ஏதோ ஒன்று இருந்தது. கவனக் குவிப்புகளில் இருந்து விடுபடும் எத்தனமற்ற புதிர்கள். மூன்று மணிநேர நடைக்குப் பின் மீண்டும் பூக்கடை பாட்டியிடமே வந்து நின்றேன். அதே மலர்ச்சியோடு தேங்காய்ப் பழத்தட்டை நீட்டினாள். உடையைத் தளர்த்தி செருப்பை மறைத்துக் கொண்டேன்.

கோபுர வாசலை பரபரப்பு சூழ்ந்திருந்தது. புதிதாக கடைகள் முளைத்திருந்தன. நுழைவாயிலில் சாதுக்களுக்கு மத்தியில் சிலைகள் போல திருநங்கைகள் நின்றுகொண்டிருந்தனர். அதிகாலைப் பொலிவுடன், நேர்த்தியாய் அலங்கரித்து, மஞ்சளும், குங்குமமுமாய் நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவர் தன் கம்பீரமான குரலால் சிவனைப் பாடினார். பின்னர் இடதுகையால் இடுப்பில் செருகியிருந்த முந்தானை சரிசெய்தவாறு வலதுகையை நீட்டினார்.

இத்தனை நாளாய் மதுவிடுதிகளுக்கும், கோயில்களுக்குமாய் ஏன் அலைந்து கொண்டிருக்கிறேன் என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. வெகு நேரம் நுழைவாயிலுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தேன். திருநங்கை பாடிய பாடலின் சொற்கள் மனதிற்குள் இழைந்து கொண்டிருந்தது. சாஷ்டாங்கமாய் கண்ணீரோடு தரையில் விழுந்து வணங்கும் ஒவ்வொருவருக்கும் என் வாழ்விலிருந்து ஏதோவொன்றை கொடுக்கவேண்டும் போல் இருந்தது. வயதான தம்பதிகள் ஒருவர் கையை ஒருவர் தாங்கிப் பிடித்தவாறு படியேறினர். மனம் தேடும் இன்மை தூரத்தில் மயங்கிக் திரிவதுபோல் இருந்தது.

நண்பர்கள் இணைந்துகொள்ள மீண்டும் ஒருமுறை மலைவலப் பாதையில் பயணித்தோம். ஆசிரமங்களுக்குள் நுழைந்தோம். அமைதியின் பகட்டு அந்நியமாய் இருந்தது. வழவழப்பான தளத்தில் சொற்கள் இறந்துகிடந்தன. காற்றெங்கும் ஏதோ அழுத்தம். மனம் நிறைவின்மையில் நெளிந்தது. 



பின்னர் அங்கிருந்து கிளம்பி வேடியப்பன் ஆலயம் சென்றோம். சாலையோரத்தில் அன்னதானம் வழங்கிக் கொண்டிருந்தனர். பரபரப்பான மலையடிவார கிரிவலப் பாதையிலிருந்து ஆளற்ற ஒற்றையடிப் பாதை இலைகளற்ற கிளைபோல பிரிந்து சென்றது. வலதுபுறம் கருங்கற்கள் பதிந்த தூர்ந்தபோன நீர்நிலை. வழியெங்கும் வினோதமான மண்புழு குவியல் போல பூச்சிகள். மயில்கள் தூரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. மலைக்காட்டின் நுழைவுவாயிலை போல மரங்கள்  பாதையெங்கும் வளைந்து சூழத் துவங்கின. பசுங்கிளைகளுக்கு உள்ளே இரண்டு பெரிய சுடுமண் குதிரைகள். அருகே சிறு கல் வளைவுடன் கூடிய மண்டபம்.

மலைத்தலைவன் காடன் வேடியப்பபன், வில்லேந்திய அம்மை வேட்டை நாய்கள் புடைசூழ நின்றிருந்தார். புராதான பசும் மணம். கறுத்த உடல்களைச் சுற்றியிருந்த மஞ்சளும், சிவப்பும்  கலந்த  நூலாடைகள்  வெயில் சூழ மின்னியது. திடீரென்று எங்கிருந்தோ வந்த பூசாரி “பூஜை செய்யணுமா?” என்று கேட்டபோதே நாங்கள் வெறும் கைகளுடன் வந்ததை உணர்ந்தோம்.

திருநீறை அள்ளித்தந்தார். அருகிலிருந்த குடிலுக்கு பக்கத்தில் இருந்த கல் விரிப்பில் அமர்ந்தோம். மயில்கள் அருகாமையை பொறுட்படுத்தாமல் மேய்ந்து கொண்டிருந்தன்.

“மலையில சித்தர்கள் இருக்காங்களாமே? பார்த்திருக்கீங்களா?” நண்பரின் கேள்வி அவர் முகத்தில் சின்ன நகைப்பு வரவழைத்தது.

“யார் சித்தர் என்று யாருக்குத் தெரியும்” என்றார். எவ்வளவு கச்சிதமான பதில். கேரளத்திலிருந்து சன்யாசம் பெற வந்திருந்தார். பக்கத்தில் உள்ள காடெல்லாம் எந்தந்த சாமியார்களுக்குச் சொந்தம் என்று சொன்னார். தூரத்தில் அவருடைய காவி உடைகள் காற்றில் படபடத்தது. சற்று நேரம் கல் மேடையிலேயே அமர்ந்திருந்தோம். அங்கு நிலவிய அமைதி சலனங்களை ஒவ்வொன்றாக விடுவித்தது. வந்ததற்கான காரணம் நிறைவேறியது போல இருந்தது. நன்றி சொல்லிவிட்டு கிளம்பினோம். சாலைக்குள் நுழைந்ததும் மீண்டும் மலை உச்சியை கவனித்தேன். மேகம் மணிமுடியைப் போல சூழ்ந்திருந்தது. வேட்டை நாய்களும், காவல் காக்கும் வேடியப்பன் முகமும், வில்லேந்திய அம்மையின் முகமும் நினைவில் தங்கியிருந்தன. ஒன்றை மற்றொன்றால் சமன் செய்தபடி காலம் நகர்ந்து கொண்டிருந்தது. இந்த சமநிலையின் உள்அர்த்தங்களை புரிந்துகொள்வது அத்தனை சுலபமானதாக இல்லை.

நெடு நேரமாய் மலையுச்சியை பார்த்தவாறு பயணம் தொடர்ந்தது. அந்த மலையின் முகங்களைப் போலவே வாழ்வதன் பொருள் மாறிக் கொண்டேயிருக்கிறது. மலையிலிருந்து தடதடவென இறங்கிவரும் ஏதோவொன்றைப் போலவே கீழ்மைகளும், பற்றுதலும் வாழ்நாள் முழுவதும் துரத்திக் கொண்டேயிருக்கின்றன. குழம்பித் தவிக்கும் நாட்களில் போதாமைதான் ஊற்றைப்போல் பெருகிறது. துன்புறும் போதும், மன்னிப்புக் கேட்கும்போதும் தெளிந்த நீரைப் போலவும் காற்றைப் போலவும் தன்னை உணரும் மனம் தற்காலிகமாய் மட்டுமே கீழ்மைகளைக் களைகிறது. மீண்டும் மீண்டும் போதாமையே நேசமாகவும், பகையாகவும் வெவ்வேறு முகங்களை அணிந்துகொள்கிறது. பலநேரங்களில் பலவீனமாக தன்னை வைத்துக்கொள்ளவே மனம் விரும்புகிறது. பொருளற்று சரிந்து விழும் நேரங்களில் ஆதரவாய் நீளும் ஒரு சிறு சொல்லோ, ஒரு சிறு அன்பின் வெளிச்சமோ வாழப் போதுமானதாக இருக்கிறது. ஆனாலும் இந்த பித்தை ஒரு போதும் வார்த்தைகளால் முற்றிலும் விளக்கிச் சொல்லிவிட முடியாது என்றே தோன்றியது. 

தீயின் ஆதூரம்போல் அந்த பித்திற்கு உண்மையாய் இரு என்று ஆயிரம் முறை சொல்லிக் கொண்டேன்!


Comments