அந்தகாரம்


ரவு 8:45. 

இடைமருதூர் சிவன் சந்நிதியை அர்த்தஜாம பூஜைக்கான பிரத்யேகமான அமைதி சூழ்ந்திருந்தது. கற்சுவர்கள் எங்கும் வேண்டுதல்களின் தடயங்கள். காற்றெங்கும் புகை மற்றும் பிசுபிசுப்பின் மணம். அகல் விளக்குகளின் சுடர்கள் தயங்கிக் தயங்கி அசைந்து கொண்டிருந்தன. பித்துநிலையில் மனிதர்கள். 

எனக்கு முன்னால் கற்பக்கிரக வாசல் திண்டில் தலை சாய்ந்து அமர்திருந்த அந்த நடுத்தர வயதுப் பெண்மணி ஏதோ முணுமுணுத்தபடியிருந்தார். அபிஷேகத்திற்காக சில்வர் தூக்குச் சட்டியில் கொண்டுவந்திருந்த பாலை இலைகளை முடைந்து மூடியிருந்தார். கீழ் முதுகில் முடிந்திருந்த பாதி நரைத்த கூந்தலின் முனையில் பழுத்து வெம்பிய முல்லையும், தளர்ந்த மரிக்கொழுந்தும் தரையில் பட்டும் படாமலும் அசைந்து கொண்டிருந்தது. சில நொடிகளுக்கு ஒரு முறை அனிச்சையாய் பாத்திரத்தின் வாயை வலதுகை விரல்களால் தொட்டு வணங்கியபடி இருந்தார். 

கற்பக்கிரகத்தினுள் பிரதான பூசாரிக்காகக் காத்திருந்த  மற்றொரு பூசாரி அந்தப் பெண்மணியை ஆறுதலாய்ப் பார்த்து “ஆயிடுச்சா?” என்றார். ஆசுவாசமாக அவரைப் பார்த்து அந்தப்பெண்மணி பதிலுக்கு புன்னகைத்திருக்க வேண்டும். பின்னால் இருந்த எனக்கு அவர் உடல்மொழி அப்படித்தான் இருந்தது. 

பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பனின் மகன், “எனக்கும் கடவுள் இருக்காரா இல்லையான்னு சந்தேகம் இருக்கு மாமா” என்று காதில் கிசுகிசுத்தான். 

சில வினாடி அமைதிக்குப் பிறகு, “நாலு நாளா அப்படியேதான் இருக்கு. மகாலிங்கம் பார்த்துக்குவான்” என்று ஈனஸ்வரத்தில் முனகியபடி, தன் மெலிந்த விரல்களை காற்றில் விரித்து தலைக்கு மேல் உயர்த்தினார். பக்கத்தில் மேற்சட்டை அணியாமல் உடலெங்கும் திருநீரு பூசியபடி உட்கார்ந்திருந்த பெரியவர், பெருங்குரலெடுத்து திருப்புகழ் பாடத் துவங்கினார். மரிக்கொழுந்து தரையில் இறங்கிப் பெருந்துயரில் புரண்டது.

இயற்கையும், அறிவியலும் ஒருவேளை இந்தப்பெண்மணியை கைவிட்டிருக்கலாம். இப்போது இந்த மெலிந்த விரல்களிடம் “கொடும் உண்மையைக் பற்றிக்கொள்ளுங்கள்” என சுலபமாய்க் சொல்லிவிட முடியாதே! இதோ என் அறிவு என்னை எச்சரித்துக் கொண்டே இருக்கிறது. என் இருப்பை எனக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. எனக்கு தன்னுனர்விலிருந்து வெளியேற கடும் பயிற்சி தேவை. ஆனால் இந்த பித்து அநாயாசமாய் ஒரு பெண்மணியை அவளுக்குள்ளிருந்து தூக்கி வீசுகிறதே! ஏதேதோ வார்த்தைகளால் நண்பனின் மகனுக்கு புரியவைக்க முயன்றேன். 

பூசாரி சுவர்களுக்கே கேட்காத தொனியில் மணியசைத்து மூலவருக்கு பூஜைகளைத் தொடங்கினார். பெரிய மரக்ககதவுகள் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டன. பித்துகொண்ட மனிதர்கள் அமைதியாய் பூசாரியை பின்தொடர்ந்தனர்.

உற்வச மூர்த்தி பள்ளியறைக்கு சென்றார். காற்றில்  மலர்களோடு, ஏலக்காய் மற்றும் இலவங்க மணம் விரவியிருந்தது.  சிவன் சந்நிதியில் உடல் தளர்ந்து உட்கார்ந்திருந்த அந்தப் பெண்மணியைப் பார்த்தேன். உற்சவ மூர்த்தியின் சந்நிதி கடைசி படிக்கட்டில் நின்றுகொண்டிருந்தார். கண்களில் பரிபூரண ஒளிக்கீற்று! சட்டென மனதை இளகச்செய்யும் இரக்கம்.

பூசாரி நெய்வேய்திய பாத்திரத்தைத் திறந்து மூடினார். சொற்பான விளக்கு வெளச்சத்தில் பள்ளியறை ஒளிர்ந்தது. நித்திரையும், கனவுகளும் இரவை சூழத்துவங்கின. கையில் வெற்றுத் தூக்குச் சட்டியுடன் நின்றிருந்த அந்தப் பெண்மணி தன் அதிமதுரக் குரலில் தாலாட்டுப் பாடத் துவங்கினார்.  

உலகத்தின் எல்லா துயரங்களையும் செரித்துவிடும் உன்னதமான குரல். வேறெதுவும் கேட்கவில்லை. அவர் நகர்ந்ததும் அவர் நின்ற இடத்தை வெகுநேரமாய் பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னர், நண்பனின் மகன் கழுத்தை அணைத்தபடி வெளியேறினேன். 

அந்தகாரம் சூழ்ந்திருந்தது.

Comments