பாராகர் - நதிக்கு அப்பால் ஒரு நாகரீகம்



சிக்கிமையும் மேற்குவங்கத்தையும் வகுக்கும் எல்லைக் கோடாக பெரும்பாலான பகுதிகளில் நெடும் மலைத்தொடர்களுக்கு இடையே டீஸ்டா நதியே ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டிருக்கிறது. மேற்குவங்க எல்லைக்கு உட்பட்ட ஊட்லபாரிக்கு அருகேயுள்ள பாராகர் கிராமத்திற்குள் நுழைய இருநூறு மீட்டர் நீளமுள்ள டீஸ்டா நதியின் குறுக்கே நடந்து கடப்பது ஒன்றே வழி. பாராகர் நேபாள பழங்குடியினர் வசிக்கும் குக்கிராமம்.

அன்றாடங்களுக்கு கிராமத்திலிருந்து வெளியே செல்பவர்கள், பள்ளிக்குப் போகும் குழந்தைகள், மருத்துவம், அவசரம் என எல்லாவற்றிற்கும் டீஸ்டாவை கடப்பதே வழி. நிதியெங்கும் நிறைந்து கிடக்கும் சரளைக்கற்களை உடைத்து அள்ளிச்செல்லும் குவாரிதான் நுழைவு வாயில். மழை அடிக்கடி பெய்கிறது. முழங்காலுக்கு மேல் நதியின் நீர்மட்டம் உயரும்போதெல்லாம் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. தவிர்க்க இயலாத நேரங்களில் கல்குவாரியில் நிற்கும் பொக்லைன்களை படகுகளாய் பயன்படுத்துகின்றனர்.

சமீபத்தில் உள்ளூர் எம்எல்ஏ உதவியுடன் மூங்கில் பாலம் அமைக்க முயற்சி நடந்துள்ளது. முதல்நாள் மகிழ்ச்சியாக பாலத்தின் மீது ஏறி படமெடுத்தபடி கடந்திருக்கின்றனர். பாலத்தின் ஆயுள் அன்றே முடிந்துவிட்டது.

தற்போது இருபது சொச்சம் வீடுகள் இருக்கின்றன. ஒரு சிறிய ஷிவ் மந்திர். ஆளற்ற நிழற்குடை. பாராகர் என்பதன் பெயர்க்காரணம் பன்னிரண்டு வீடுகள் உள்ள கிராமம் என்றனர். பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கும் வீடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பெயர்கள். டீஸ்டா நதி, நதிக்கரையை ஒட்டிய வீடுகள், மறுபக்கம் வயல்கள், அதன் பின் காடுகள், மலைத்தொடர்கள்.

நெல்லும், பாக்கும் பிராதான விவசாயம். ஒவ்வொரு வீட்டிற்கு பின்பும் பன்றிக் கொட்டில்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் பன்றி இறைச்சி விற்பனை. வாத்து, ஆடு, கோழி, மற்றும் மாடுகள் வளர்க்கின்றன. ஒரு பக்கம் ராணுத்தில் சேர்வதை இலட்சியமாகவும், மறுபக்கம் மிகவும் இளவயதிலேயே, மதுவும், கஞ்சாவும், மேற்கத்திய கலாச்சார பாதிப்புகளும் கொண்ட இளைய தலைமுறை.

சுற்றுப்புற நகர்களிருந்தும், கிராமங்களிலிருந்தும் சென்னைக்கும், பெங்களூருவிற்கும் கூலித் தொழிலாளிகாளாய் சென்று வருகின்றனர். இங்கு நேபாளிகள் என்றால் பரவலாக நினைக்குவரும் கூர்க்காக்கள் என்ற பொது அடையாளம் எல்லாம் அவர்களிடம் தென்னிந்தியர்கள் குறித்து இல்லை. பெங்களூருவில் பணிபுரிந்தவர்கள் கூட அழகாக தமிழ் பேசுகிறார்கள். பொதுவழக்கில் நேபாள மொழியும், ஹிந்தியும். மிகுந்த வாஞ்சையோடு சமூக உறவுகொள்வதை விரும்புகின்றனர்.

மெத்தையோ, பாயோ, நாற்காலியோ அதன் மீது தடித்த கம்பளியை விரித்து அமரச் சொல்வதையே விருந்தினர்களுக்குத் தரும் மரியாதையாகக் கருதுகின்றனர். விரிப்பை விட்டு உடல் கொஞ்சம்வெளியேறினாலே, அவசர அவசரமாய் வந்து விரிப்பை சரிசெய்கின்றனர். (சிங்கப்பூரிலிருந்து வங்கதேசம் செல்லும் தொழிலாளிகள் புசுபுசுவென தடித்த கம்பளி விரிப்புகளை பெரிய பெட்டிகள்போல மடித்து எடுத்துச் செல்வது வெகு இயல்பான ஒன்று என்பது கூடுதல் தகவல்).

ஆண் அதிகாரம் பெற்றவராக இருந்தாலும், குடும்பம் மற்றும் சமூக அமைப்புகளின் அதிகம் இறுக்கம் நிலவவில்லை.

பீடிக்கிழவி என்று அழைக்கப்படும் தில்ரூபா கிழவிக்கு வயது என்பதுக்கும் அதிகம். இடுப்பில் ஒரு பையில் யானைகளை விரட்ட வெடிகளை வைத்திருக்கிறார். இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்கிறார். வெகு இயல்பாக யானைகள் வயல்களுக்குள் நுழைகின்றன. அசால்ட்டாக யானைகளை நோக்கி முன்னேறியபடி வெடிகளை எறிந்தும், கூச்சல் போட்டும் தில்ரூபா யானைகளை விரட்டுகிறார். கூடவே சிறுவர்கள் வரப்புகளில் ஓடி கவண்களைக் கொண்டு யானைகளின் மீது கல்லெறிந்து விரட்டுகின்றனர்.

நாங்கள் சென்றது நேபாளிகளின் தஷைன் (ஒன்பது இரவுகள்) பண்டிகையின் கடைசி நாட்கள். வங்காள துர்கோத்ஸவாவுடன் கொடுக்கல்வாங்கல்கள் இருந்தாலும், தஷைன் சற்று தனித்தே தெரிகிறது. மேற்குவங்க வீதிகளில் கடைசி ஐந்து நாட்கள் பொதுவெளியில் நடைபெறும் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் நிறைவடைந்து, வீதியோரங்களில்அமைக்கப்பட்ட பந்தல்கள் வெறிச்சோடிக் கிடந்தன. துர்கையின் செங்கொடிகள் மழையில் நனைந்து சோர்வுற்று துவண்டு கிடந்தன. பந்தல் தடுப்புகளின் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் கைகூப்பி சிரித்துக் கொண்டிருந்தனர். அரிசியும், தயிரும், செந்தூரமும் குழைத்து நெற்றியில் பெரிய திலமிட்டபடி உலவிக் கொண்டிருக்கும் நேபாளிகள் வழியாகவே தஷைன் கொண்டாட்டம் தன் இறுதிகட்ட உற்சாகத்தை தக்கவைத்துக் கொண்டிருந்தது.

தஷைன் பண்டிகை, துர்கா பூஜை, நவராத்திரி, தசரா என வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டாலும் தாத்பர்யம் ஒன்றுதான். தீமை நன்மையை வெற்றிகொள்வது. மகிஷாசுர வதம், ராவண வதம் என இடத்திற்கு இடம் நம்பிக்கைகள் வேறுபடுகின்றன. தஷைன் மூதாதையர் வழிபாடு, துர்சக்திகளை களைதல் என தன் தொன்மைகளை இணைத்துக் கொள்கிறது. அவ்வளவுதான் வேறுபாடு.

எங்களை தடித்த விரிப்பில் அமரச் செய்தார்கள். புனித நீரில் முளைவிட்ட (பார்லி விதைகள்) ஜமாரா புற்கள். ஒரு கிண்ணத்தில் டிகா எனப்படும் அரிசியும், தயிரும், செந்தூரமும் கலந்த கலவை. ஒரு ஆதிகிழவி ஜமாரக்களில் புனித நீரை அள்ளித் தெளித்து எங்களை ஆசீர்வதித்தாள். எங்கள் நெற்றியில் திலகமிட்டாள்.

கடைசியாக...

மதுபானங்கள் விலை குறைவு. நிச்சயம் டாஸ்மாக் சரக்கைப் போல விஷமாக இல்லை. வீட்டிலேயே அருமையான சாராயம் காய்ச்சுகின்றனர்.

Comments