கற்றலெனும் சமூகச் செயல்பாடு
கல்வி என்பது தனிமனிதனின் திறனை மேம்படுத்தும் கருவி மட்டுமே இல்லை. சமூகத்தை மேம்படுத்தும் கூட்டுச் செயல்பாடு. அதனால்தான் சமூக நீதிக்கான உள்ளீடுகள் இல்லாமல் கல்வி குறித்து பேச முடிவதில்லை.
இன்று பணிப்பெண்கள் குறித்த நீயா நானா நிகழ்வில் ஒரு MA B.Ed படித்த ஆசிரியையின் பேச்சு கடும் அதிர்ச்சியைத் தந்தது. MA ஆங்கில இலக்கியம் பயின்றிருக்கிறார். B.Ed முடித்து ஆசிரியராக இருக்கிறார். தன் பேச்சில் இருக்கும் வன்மமோ, தீண்டாமை மற்றும் வர்கப்பாகுபாடுகள் குறித்தோ அவருக்கு எவ்வித பிரக்ஞையும் இல்லை. தன் நிலைப்பாட்டில் எவ்வித தவறும் இல்லை என்ற தோரணையில் சிரித்தபடி விஷத்தைக் கக்கிக்கொண்டு இருந்தார்.
இலக்கியம் பயின்றதும், ஆசிரியர் பணியும் அவருக்கு என்ன கொடுத்தது என்பது ஒருபுறம் இருந்தாலும், அவர் தன் மாணவர்களுக்கு எவ்வகையான சமூகப்புரிதலை போதிப்பார் என்று நினைத்தால் பதறுகிறது. நெறியாளர் பலமுறை முயன்றும் அவருக்குத் தன்னுடைய பேச்சின் சாரம் குறித்து எந்தப் புரிதலும் ஏற்படவில்லை. மீண்டும் மீண்டும் ஏதோ நகைச்சுவையாய் அவர் பேச்சை எல்லோரும் ரசிப்பதைப் போன்ற மனநிலையிலேயே பேசிக்கொண்டிருந்தார்.
கல்வியைத் தனித்திறனாகவும், வேலைவாய்ப்பை வழங்கும் கருவியாக மட்டுமே பார்க்கப் பழகுவதின் பின்விளைவுகள் இவை. கல்வி கற்றால் சமூகம் மாறிவிடும் என்பது பொருளாதார பலன்களை நோக்கமாகக் கொண்ட ஒரு வழிப்பாதையல்ல. கூட்டுச் சமூகத்தில் தன்னை ஒரு அலகாக உணர்வதும், அந்த சமூக மேம்பாட்டிற்கான பங்களிப்பை திரும்பத்தருவதையும் உள்ளடக்கிய இருவழிப்பாதை.
வீட்டில் பணி செய்பவர்களுக்கு இன்றும் தனித்தட்டு், விடுமுறை இல்லாத தொடர் வேலை என்பதெல்லாம் அதிர்ச்சியைத் தரவில்லை. “இப்பல்லாம் யாரு சார்…” வகையறாக்கள் பார்த்துத் தெளிந்துகொள்ளலாம்.
மற்றபடி ஆண்கள் என்ற perspective இல்லாமல் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்து. ஒருவேளை ஆண்களை உள்ளடக்கிய விவாதமாக இருந்திருந்தால் பாலின வன்முறை, ஆண்களின் பங்களிப்பு என இன்னும் சில தரப்புகள் பேசப்பட்டிருக்கலாம்.
நீயா நானா குறித்து எனக்கு தனிப்பட்ட விமர்சனங்கள் உண்டு. ஆனால் சமூக நீதிகுறித்த தேடல் கொண்ட தமிழ்ச் சூழலில் இம்மாதிரியான விவாதங்கள் முன்னெடுப்பதற்காக நிச்சயம் அக்குழுவை பாராட்டலாம்!



சிறப்பு
ReplyDelete