அப்துல் கலாம்களும் புரோட்டா மாஸ்டர்களும்…


“படிச்சு முடிச்சு என்னவாகனும் ஆசைப்படுற?” என்ற கேள்விக்கு “டாக்டராகனும்” என்ற பதில் சலித்துவிட்டது. எனக்கும் “இன்ஜினியர்” ஆகவேண்டும் என்று விருப்பம் இருந்தது. BE படிக்க வாய்ப்பில்லாமல், B.Sc Chemistry படித்தபோது, “கெமிக்கல் இன்ஜினியர்” ஆகிவிடலாம் என்று திட்டத்தை மாற்றிக்கொண்டேன். பின்னாளில் சம்பந்தம் இல்லாமல் MCA முடித்து BPO க்குள் நுழைந்து ஒரு நேர்காணலில், “Team Lead” ஆக தேர்வானதும், HRரிடம் “சாப்வேர் இன்ஜினியர்” என்ற டைட்டில் போதும் என்று பேச்சுவார்த்தையை துவங்கினேன். 

இடையிடையே அறைகுறையாக கற்றுக்கொண்ட டெய்லர் இன்ஜினியர், டிரைவிங் இன்ஜினியர், டீ மாஸ்டர் இன்ஜினியர், லாட்டரி சீட்டு ஏஜண்ட் இன்ஜினியர் எல்லாம்  பெரிதாக ஒர்க்அவுட் ஆகவில்லை.

மகளிடம் “நீயாவது…” என்று தொடங்கினாலே.. “வாய்ப்பில்லை…” என்று பேரண்டல் இன்ஜினியரிங் கனவை முடித்து வைத்து விடுகிறாள்.

பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரன்டாம் வகுப்பு முடிவுகள் வரும்போது ஓரளவு நல்ல மார்க் வாங்கி பாஸ் பண்ணிட்டா போதும் என்று குமட்டில் குத்தி முட்டுச் சந்துக்குள் நிறுத்தப்போகும் எளிய உண்மைக்கு முன்னால் இன்றும்  தாக்குப்பிடிக்கும் “டாக்டர் ஒன்லி” கனவுகளை நினைத்தால் தலைசுற்றுகிறது.

ஹப்போதட்டிகலாக திடீரென்று பரிட்சை எழுதும் எல்லோரும் டாக்டர்களாகிவி்ட்டாலோ அல்லது அப்துல்கலாம் ஆகி  ராக்கெட் தயாரிக்கவோ சென்றுவிட்டால் அடுத்தடுத்த பேட்ஜ் மாணவர்களை யார் பேட்டி எடுப்பது? ஒருவேளை புரோட்டா மாஸ்டரோ, பிரியாணி மாஸ்டரோ இல்லாத உலகமாக மாறிவிட்டால் சலிப்பூட்டும் இவ்வுலகில் எப்படி காலம் தள்ளுவது?

சமீபத்தில் ஒரு தம்பி அவருக்கு தெரிந்த ஒரு பையனுக்கு சிங்கப்பூரில் “எதாச்சும் ஒரு வேலை வாங்கனும்ணே” என்றார். அந்த பையன் அப்பாவின் காசில் பல லட்சங்கள் செலவு செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு,  பல அரியர்களை வைத்து இனி படித்து பாஸாக வழியே இல்லை என்பதால், தற்போது மாற்றுவழி தேடிக்கொண்டிருக்கிறார்.

நீயா நானா வைரல் அப்பாவி அப்பா தன் மகள் டாக்டராக விரும்புவதாகச் சொன்னார். ஆறுதலான விஷயம் என்னவென்றால், “அது அவள் விருப்பம்” என்றார்.  நல்லவேளை “நான் அவளை டாக்டர் ஆக்கவேண்டும்” என்று சொல்லவில்லை. தன் இயலாமையை பிள்ளைகள் மீது திணிக்காமல், அதேவேளை பிள்ளைக்கு பக்கத்தில் நிற்பதும், அவர்கள் தெரிவுகளின் வழியே பெருமிதம் கொள்வதும் சைக்கலாஜிக்கலாக சுலபமானதல்ல. குறிப்பாக வாழ்வில் சுலபமாக வெற்றி பெறுபவர்களைவிட, இடர்களையும், தோல்விகளையும் சந்தித்தவர்கள் இந்த இடத்தை இன்னும் தெளிவாக கையாளும் பக்குவம் கொண்டவர்களாக இருக்கின்றனர். 

முந்தைய வாரம் MA B.Ed டீச்சர் கன்டன்ட் ஆகிவிட்டதால், இந்த வாரம் ஸ்ட்ரெச்சரில் ஏற்றப்பட்ட பெண்மணியை சீக்கிரம் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டுகிறேன். சோஷியல் சயின்ஸ் பாடம் இரண்டாவது வாரமா? போரடிக்கிறது.


Comments