பிரக்ஞையில் இல்லாத சொல்



நேற்று Pavithra Pandiyaraju எழுதிய ஒரு கவிதையின் முதல் சில வரிகளை வாசித்தேன்.

என் பிரக்ஞையில் 
இல்லாத
சொல்லைக் கொண்டு 
உனக்கு கடிதம் 
எழுத வேண்டும்.
என் மரணத்தை 
அறிவிக்கும் 
அந்த கடிதம்…

அதற்குப் பிறகு சில வரிகள் இருந்தன. ஆனால் மனம் ஏனோ அங்கேயே நின்றுவிட்டது.

யாராலும் எழுதிவிட முடியாத ஒன்றை நான் எழுதுவேன் என்கிற தவிப்பை நிறைய நண்பர்களிடம் பார்த்திருக்கிறேன். அது தன்னுடைய எழுத்தை தனித்துவப்படுத்த எத்தனிக்கும் ஒரு துடிப்பு மட்டுமே. மற்றபடி எழுதுவது என்னளவில் ஏற்கனவே மனதில் புதைந்துகிடக்கும் ஏதோவொன்றின் சாயலை பிரக்ஞை பூர்வமான வெளிப்படுத்துவது.

அப்படியென்றால் பிரக்ஞையில் இல்லாத சொல் எப்படிச் சாத்தியம் என்ற கேள்வியில் மனம் ஸ்தம்பித்து நின்றுவிட்டது. அப்படி ஒன்று சாத்தியமே இல்லை. ஆனால் கவிதை அதற்கு இடம் தருகிறது. இதனால்தான் கவிதை கலைவடிவங்களில் உட்சம் பெறுகிறது.

என் மரணத்தை அறிவிக்கும் அந்த கடிதம் என்கிற அடுத்த வரியில் உணர்வுகள் தளர்ந்து சொற்கள் நழுவும் ஒருவித மயக்க நிலைக்கு கவிதை நகர்கிறது. அங்கு சொல் என்பது ஒரு உணர்வு நிலை. ஒருவேளை அந்த உணர்வுநிலையை மொழியில் சாத்தியப்படுத்த முடியும் எனில் அது பிரக்ஞையில் இல்லாத சொல்லாக இருக்கலாம்.

இப்படித்தான் சாத்தியங்கள் அற்றவைகளின் சாத்தியங்களை, அவற்றின் முன் நாம் நம்மை இழக்கும் தருணங்களை மிகத் துல்லியமாக கவிதையில் சொல்லவிட முடிகிறது.

வார்த்தைகளுக்கு எட்டாத தருணங்களில் கவிதை தொடங்குகிறது. பிரக்ஞை பூர்வமாக அதை தன்னை நோக்கி இழுத்துவரவே கவிஞர்கள் முயற்சி செய்கின்றனர். எவ்வளவு அழகான தவிப்பு இது!

கவிதையை முடிக்கும்
ஒவ்வொரு தருணத்திலும்
இப்படித்தான் ஆகிறது.
மாபெரும் மெளனம்
என்மீது கவிகிறது.
வார்த்தைகளைப் பயன்படுத்த
ஏன் எண்ணினேன் என்ற
தவிப்பே எஞ்சுகிறது

என்று ரூமி சொல்வது இந்த தவிப்பைத்தானே! ❤️

Comments