மறுத்து நிகழ்ந்த அற்புதம்


மிகவும் கனமானதொரு
சிறு சொல்
வீடு

இதுதான் இளா தன் பேச்சின் துவக்கத்தில் எடுத்துக்கொண்ட கவிதை.

நான் அறிந்தவரை இளா தீவிர இலக்கிய வாசிப்பாளர் இல்லை. (இன்னும் நேர்மையாகச் சொன்னால் “வாசிப்பாளர்” கூட இல்லை). அவருக்கு மேடையை வசப்படுத்தும் கணீரென்ற குரல் கூட கிடையாது. திரையிசை மற்றும் பாடல்கள் தொடர்பான எழுத்துதான் அவரின் அடையாளம். இலக்கியம் சார்ந்த நிகழ்வில் மேடையேறுவது இதுதான் முதல் முறை.

வழக்கமான வார இறுதி கூடுகைகளில் மதுக்குப்பிகளுக்கு மத்தியில் ஒரு பரிதாபமான ஆர்மோனியப் பெட்டி போல உடன்வரப் பழகியதால், “நிகழ்ச்சி” என்பதைக் கூட இன்னும் கொஞ்சம் கூடுதலான நண்பர்களுடனான “கூடுகை” என்றே நினைத்துக் கொண்டார். “ஐயோ! மைக்கெல்லாம் வேற உண்டா?” என்று சத்தியமாகவே கேட்டார்.

நேற்று மேடையேறியதும் தொடக்கத்தில் அவர் குரல்கூட பெரிதாக மேலே எழவில்லை. வினோத் அவசரமாகச் பின்னால் சென்று மைக் வால்யூமை அட்ஜஸ்ட் செய்தார். பிரான்ஸிஸ் கவிதை வரிகளைப் போல் அதற்குப் பிறகுதான் நிகழ்ந்தது அற்புதம்!

ஒரு வாசகன் தன் ரசனை அடிப்படையில் பேசுவதாகவே திட்டம். ஆனால் ஒரு தேர்ந்தெடுத்த இலக்கியவாதியைப் போல அவர் ஒரு கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளைப் பகுத்துக்கொண்ட விதமும், பெரும்பாலும் குறுங்கவிதைகள் நிறைந்த தொகுப்பில் தென்படும் தொடர்ச்சிகளைக் கண்டடைந்த விதமும், மிக இயல்பான எள்ளலும், நண்பர்கள் சந்திப்பில் வெகு இயல்பாக உரையாடுவது போல கேட்பவர்களுடனான தொடர்பு ஒரு வினாடி கூட அறுந்துபோகாமல் உரையாடியதும் எதிர்பாராதவை!

செந்தூர மாம்பழ நிறத்தில்
அவள் உடை அணிந்திருக்கிறாள்
நான் மாம்பழங்களை
தோலோடு சுவைப்பதில்லை

என்ற கவிதையை மேடையில் வாசிக்கும் போது அவர் முகத்தில் சிறிய வெட்கம். அது அங்கிருந்து கவிதையை எழுதிய கவிஞருக்கு பரவ, அரங்கம் இரு ஆண்களின் வெட்கத்தை வெகுவாக ரசித்தது!

கொஞ்சம் கொஞ்சமாய்
எனக்குள் செயலாற்றுகிறது
கவிதையெனும் நஞ்சு

இது அவர் தன் உரையை நிறைவு செய்ய தேர்ந்தெடுத்த கவிதை. திரையிசை பாடல்கள் வழியே கவித்துவ நஞ்சு அவருக்குள் படர்ந்தே இருக்கிறது. ஒருவேளை தன் இலக்கிய வாசிப்பை இன்னும் தீவிரமாக்கினால் (இதை வாசிக்கும்போது “அடப்போங்க சார்!” என்று சிரிப்பார்) வேறொன்று நிகழும்!

ஒட்டுமொத்த நிகழ்வையும் வசப்படுத்தியது நீங்கள்தான் Elambarithi Kalyanakumar! ❤️

Comments