ப்ரியமான தொலைவு

சிலரிடம் மட்டுமே மிகவும் அருகில் நெருங்க முடியாதபடி ஒரு இணக்கம் தோன்றும்.

கல்யாண்ஜி-யின் முகநூல் நட்பு வட்டம் என்பது “நந்தியாவட்டை மரங்கள் சூழ, அதிகாலை நேரத்தில், பழந்திண்ணை ஒன்றில் நண்பர்களுடன் உட்கார்ந்திருப்பது போல” என என் மனதில் ஒரு சித்திரம் உண்டு. முதல் முறையாக அவருக்கு நட்பு அழைப்பு விடுத்தபோது கொஞ்சம் வெட்கமாக இருந்தது. கொடுத்த அரைமணி நேரத்தில் திரும்பப் பெற்றுவிட்டேன். அதற்குப் பிறகு அவர் கவிதைகள் குறித்து ஒரு பதிவு எழுதியபோது மீண்டும் அழைப்பு விடுத்து, அதையும் அடுத்த அரைமணி நேரத்தில் திரும்பப் பெற்றுவிட்டேன்.

சென்றமுறை இந்தியா செல்வதற்கு முன்பே சாம்ராஜ், இசை, லிபி, வரதன், சாம்சன் புடைசூழ கல்யாண்ஜி-யை சந்திப்போம் என ஒரு திட்டம் இருந்தது. விமானத்தின் இருக்கைக்கு பின்னால் அப்போதே நந்தியாவட்டை கிளைத்து எழுந்தது.

மதுரையில் நண்பர்கள் சந்திப்பு. அங்கிருந்து மறுநாள் காலை கிளம்பினோம். காரில் வழக்கமான சென்சார் செய்யப்படாத உக்கிரமான நினைவலைகள். எனக்கோ முதுகுக்குப் பின்னால் நந்தியாவட்டையின் கிளை துருத்திக்கொண்டே இருந்தது. காருக்குள் அந்தத் திண்ணையின் சித்திரம் குறித்து பேசலாம் என்று நினைத்தபோது “நீயென்ன பெரிய கல்யாண்ஜி-யா?” என்று காருக்குள் யாரோ சிரிப்பது போல இருந்தது.

வழியெங்கும் கேட்டுக்கொண்டிருந்த BGM அவர் வீட்டு வாசலுக்கு வந்ததும் நின்று போனது. அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று போடப்பட்டிருந்த ஒப்பந்தம் மேலும் சூழலை மிருதுவாக்கியது. வெள்ளை உடையில் புன்னகையுடன் வாசலுக்கு வந்தார். அறிந்தவர்களை கண்டதும் புன்னகைக்கு வரிசையாய் பற்கள் முளைத்தன. தயங்கித் தயங்கி அவருக்கு அருகில் சென்றேன்.

இசை “இவர் செந்தில். சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கிறார்.” என்று அறிமுகம் செய்தபோது, மிகச்சரியாக யாரோ அவருக்குப் பின்னாலிருந்து அழைக்க, அந்த அறிமுகமும் கவனிக்கப்படாமல் காற்றில் கரைந்துபோனது. ஆசிரியரை சுற்றி மாணவர்கள் அமர்வது போல அமர்ந்தது கொண்டோம். சிரிப்பும், நினைவலைகளுமாய் நேரம் நகர்ந்து கொண்டிருந்தது.

எனக்கு மட்டும் அவரிடம் எதுவும் பேசவோ, கேட்கவோ தோன்றவே இல்லை. ஒருவார்த்தை கூட. அவரை பார்த்துக்கொண்டே இருந்தேன். ப்ரியமானவர்களின் கரங்களை அடிக்கடி பிடித்துக் கொண்டார். தோளை தொட்டு தன்னோடு இறுக்கிக் கொண்டார். நான் அவருக்கு எட்டாத தூரத்தில் அமர்ந்திருந்தேன்.

வரவேற்பறையிலிருந்து அவர் அறையைக் கடந்து கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று யாரோ சொல்ல, அதை ஒரு காரணமாக்கிக் கொண்டு அவர் அறையில் சென்று கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தேன். சின்ன புத்தக அலமாரி. அதற்குப் பக்கத்தில் இருந்த இருக்கை. “இங்கிருந்துதானே.. “ என்று தோன்றியது. மீண்டும் வரவேற்பறைக்கு வந்ததும் புகைப்படம் எடுத்தோம். அப்போதும் அவரோடு தனியாக நின்று ஒரு படம் எடுத்துக்கொள்ளக்கூட மனம் எழவில்லை.

விடைபெற்று வாசலுக்கு வந்தோம். கேட்டை பிடித்துக்கொண்டு எங்களை பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார். மூவாயிரம் கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து வந்தும், அந்த சில அடி தூரத்தில் நின்று அவரைப் பார்ப்பது ஏனோ அத்தனை பரவசமாக இருந்தது. இதற்குத்தான் இந்த மொத்தப் பயணமும் என்று தோன்றியது. அவசரவசரமாக மொபைலில் அந்தத் தொலைவிலிருந்து அவரை படம் எடுத்தேன். நண்பர்களுக்கு அந்தப் படத்தை பகிர்ந்தேன்.

அன்று அவர் வீட்டில் எடுத்த படங்களை பதிவிட்டு வீடு நிரம்பிக் கிடந்தது. நான் நிரம்பி இருக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

முன்போரு நாளில் அலரில் அவருடைய “குழந்தைகள் பூங்கா” காணொளி வெளிவந்ததை தன் பக்கத்தில் பகிர்ந்து “நன்றி அலர் குழுமம்” என்று குறிப்பிட்டிருந்தார். அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த அலர் குழுமம் அன்று ஒரு பழந்திண்ணையாய் இருந்தது. நந்தியாவட்டை மரங்கள் சூழ அங்கே மூன்று பேர் அமர்ந்திருந்தோம்.

குழுமம் என்பது கொஞ்சம் தொலைவுதான் என்றாலும், அவரோடு அவ்வளவு நெருக்கமாக, அம்மூவரில் ஒருவராக நானும் அமர்ந்திருந்தேன்!

பிறந்தநாள் வாழ்த்துகள் சார்! ❤️

Comments