நீ விரலை உயர்த்த… அனைத்தும் உயிர்க்கின்றன!
“ஏதோ மோகம்” பாடலின் தொடக்கத்தில் தண்ணீர் பொங்கி பெருக்கெடுத்து ஓடும் ஒரு காட்சி வரும். ஓரிரு வினாடிகள்தான். தண்ணீரின் ஓசை மெலிதாகப் பின்னணியில் கேட்கும். சென்னையில் நடந்த கச்சேரி என்று நினைக்கிறேன். அந்த தண்ணீரின் ஓசையை மீட்டுருவாக்கம் செய்ய, மேடையில் ஒரு பிளாஸ்டிக் வாளியில் தண்ணீர் எடுத்துவந்து, மைக்கை பக்கத்தில் வைத்து, ஒருவர் கைகளால் தண்ணீரை அள்ளி அள்ளி ஊற்றுவார்கள். இளையராஜா தன் இசைக்கச்சேரிகளில் இந்த நுணுக்கங்களை நிகழ்த்திக் காட்ட விரும்புவார்.
இசைக்கச்சேரி என்பது பாடல்களைக் கேட்க மட்டுமேயானது இல்லை. இசை எங்கிருந்து வருகிறது? என்று வடிவேலு ஒரு படத்தில் கேட்பாரே. அந்த மகத்துவமான சூட்சுமங்களை நேரெதிராக தரிசிப்பதற்காகவும்தான். அருண்மொழி புல்லாங்குழலில் ஒரு சங்கதியை இசைக்கிறார். இளையராஜா சட்டென திரும்பி அவரைப்பார்த்து மேலே தன் கையை உயர்த்துகிறார். அந்த நொடி மொத்த அரங்கமும் அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த சில அடிதூரத்தில் நெருக்கி அமர்ந்து கொண்டிருந்தது.
கச்சேரிகளின் மகத்துவம் என்பது நேர்த்தியில் மட்டும் இல்லை. சின்னச் சின்ன சறுக்கல்களிலும், அவற்றை அழகாக சமாளிப்பதிலும் கூடத்தான். ஒரு கச்சேரியில் ஸ்ரேயாகோஷல் “காற்றில் எந்தன் கீதம்…” பாடலில் வரும் “கண் தேடுதே..” என்ற வரியை மீண்டும் மீண்டும் “கண் தோடுதே..” என்று பாடுவார். கூட்டம் சலசலக்கும். ரசிகர்களின் முகபாவனைகள் மாறும். ஏதோ நடக்கிறது என்பது அவருக்குப் புரியும். கடைசியாக தவறை உணர்ந்து கொள்வார். அதே வரி கடைசியாய் பாடலில் இன்னொரு முறை வரும். லேசாக புன்னகைத்தபடி இளையராஜாவின் பக்கம் திரும்பி தலையை மன்னிப்பு கோருவது போல தாழ்த்திவிட்டு, “கண் தேடுதே..” என்று பாடுவார். அரங்கமே அதிரும்.
பால்கி இளையராஜாவின் பின்னணி இசை பற்றி பேசியது, நாசர் “தென்றல் வந்து தீண்டும்போது..” கம்போஸிங் நடந்த அனுபவத்தை பற்றி பேசியது, ஒரு பாடல் ஒரு இடத்தில் தடைபட்டு மீண்டும் பாடப்படுவது என எல்லாமே கச்சேரிகளின் மகத்துவமான தருணங்களே!
இன்றும் ஒரு பாடல் தடைபட்டது. அந்த இடத்தில் பாடலை நிறுத்தி, அப்பாடலின் இசை அடுக்குகளை தனித்தனியாக வாசிக்கச்சொன்னார். ஒவ்வொரு அடுக்கும் பிரத்யேகமான தனிப்பாடலாக இசைத்தது. அரங்கம் மீண்டும் அதிர்ந்தது. (அநேகமாக விஜய் டிவி இதை வைரல் ஆக்குவார்கள்.)
இளையராஜா உடலாக தளர்ந்துவிட்டார். 3-4 பாடல்கள்தான் பாடுகிறார். அதிலும் மூச்சை இழுத்துப் பிடித்து பாடவே சிரமப்படுகிறார். SPBயும், மலேசியா வாசுதேவனும் இனி வரப்போவதில்லை. யேசுதாஸ், ஜானகி மேடைகளுக்கு வருவதில்லை. இம்முறை சித்ராவும் இல்லை. SPBக்கு பதில் சரண், மலேசியா வாசுதேவனுக்கு யுகேந்திரன், யேசுதாஸ்க்கு மதுபாலகிருஷ்ணன் என பழகிக்கொள்வது எளிதானதில்லை. தவிர, புதியவர்கள் நன்றாகவே பாடினாலும் மனதிற்குள் புதைந்திருக்கும் ஏதோவொன்று எழுந்துவந்து இது அதில்லை என்கிறது. இளையநிலா பாடலை சரண் பாடினார். பின்னர் “இப்போது அதே பாடலை யேசுதாஸ் பாடினால் எப்படியிருக்கும்” என்றபடி இளையராஜா மதுபால கிருஷ்ணனை அழைத்தார். மதுவும் யேசுதாஸை நெருங்க முயன்றார். பாடி முடித்ததும் இளையராவுக்குள் இருக்கும் ரசிகன் விழித்துக்கொள்ள, “இது மதுபாலகிருஷ்ணன். யேசுதாஸ் இல்லை” என்றார். அவருக்கே அதுதான் கதி. ஒரே ஒருமுறை “பாலசுப்ரமணியன்” என்ற பெயரை இளையராஜா உச்சரிக்க அரங்கம் நெடுநேரம் ஆர்ப்பரித்து அஞ்சலி செலுத்தி தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டது. சின்னச் சின்ன தொழில்நுட்பச் சிக்கல்கள். பாடல்களுக்கு இடையில் நடக்கும் சின்ன சின்ன மேஜிக் மொமண்ட்ஸ் குறைந்து, அடுத்தடுத்து இடைவெளியில்லாமல் பாடல்களை பாடுகிறார்கள். 6 மணி நேரம் வரை கூட நீளும் கச்சேரிகள் சுருங்கி இப்போது சரியாக 4 மணி நேரம் மட்டுமே.
இவ்வளவுக்கு மத்தியிலும் இளையராஜா தன் விரலை உயர்த்தும் போதெல்லாம் மேஜிக் நிகழ்கிறது. முதல் பாடலில் பற்றிக் கொள்ளும் பரவசத்தின் கொதிநிலை கடைசிவரை அடங்கவேயில்லை. “எஞ்சோடி மஞ்சக்குருவி…” க்கு இருக்கையிலிருந்து சில அடிகள்
எகிறிக் குதிக்கும் மனம், அடுத்த நொடியே இடைவெளி இன்றி, “தென்பாண்டிச் சீமையிலே…” எனத்தொடங்கும் போது சுருண்டு கலங்கிப்போகிறது. (இளையராஜா முகமும் கலங்கியிருந்தது.)
பலமுறை திட்டமிட்டு நடக்காமல் போன ஒன்று இன்று நடந்தது. சொற்ப இடைவெளி. அந்த கருத்த உருவம், வெளீரென்ற உடையில், தோளில் பச்சை நிற துண்டை போர்த்தியபடி மேகத்தைப்போல மேடையை நோக்கி நகர்ந்து சென்றது. முதல் முறையாக நேரில் பார்க்கிறேன். மூளைக்குள் மின்சாரக்கம்பிகளை செலுத்தியது போல இருந்தது. கைக்கு எட்டும் தூரமாக இருந்திருந்தால், அதன் கழுத்தைப் பிடித்து, “இன்னும் எத்தனை பேரின் ஆயுளை நீ தின்னு தீக்கப்போற..” என்று கேட்டிருப்பேன்.



Comments
Post a Comment