சிதிலங்களின் நறுமணம்


“ஒ
ரு பாறைபோல் தவம்கிடந்து தன்மீது கொடிகளாலும் பறவைகளாலும் ஆசீர்வதிக்கப்படும் இயற்கை உலகத்தையே என் மனம் நாடுகிறது.”

அத்தர் தொகுப்பில் இடம்பெற்றுள்ள இந்த வரிகளின் வழியாக முகமது ரியாஸ் என்கிற புனைவு எழுத்தாளரை அடையாளம் காண்பது மிகவும் பொருத்தமானது. முகமது ரியாஸ் தனது அத்தர் தொகுப்பு வெளிவருவதற்கு முன்பே அனீஷா மரைக்காயர் என்கிற பெயரில் இலக்கியச் சூழலில் பலருக்கும் நண்பராக அறிமுகமானவர். “நண்பர்”  அனீஷா மரைக்காயருக்கும், “புனைவு எழுத்தாளர்” முகமது ரியாஸிக்குமான வித்தியாசம், மாணிக்கம் என்கிற ஆட்டோ டிரைவர் இதற்கு முன் பம்பாயில் பாட்ஷாவாக என்ன செய்துகொண்டு இருந்தார் என்று கேட்கும் அளவிற்கு வியப்பிற்குறியது.

என்னளவில் அத்தர் தொகுப்பை வாசித்தல் என்பது முகமது ரியாஸ் யார் என்கிற வியப்பின் நீட்சியாகவே தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக அவர் புனைவுலகம் என்னை சூழத்தொடங்கியபோது, மென்பொருள் நிறுவனத்தில் தகவல் அறிவியல் துறையில் பணிபுரியும் நண்பரோடு வேறொரு சந்தர்ப்பத்தில் நிகழ்ந்த உரையாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. தகவல் தொழில்நுட்பத் துறையில் “தகவல்… அறிவு… ஞானம்…” என்ற வரிசையை குறித்து நிகழ்ந்த அந்த உரையாடல் இப்படியாக நீண்டது. 

நம் அன்றாடம் தகவல்களால் சூழப்பட்டிருக்கிறது. பெறுவதும் கொடுப்பதுமாக நாம் பரிமாறிக்கொள்ளும் தகவல்களின் வழியாகவே நமக்குள் அறிவு திரண்டு எழுகிறது. தகவல்களிலிருந்து அறிவை நோக்கி நமக்குள் நிகழும் அகவயமாக பயணமானது தர்க்கங்கள் மிகுந்தது. அந்த பயணத்தில் நம் குரல் சற்று உரத்தே ஒலிக்கும். திரண்டு ஏழும் அந்த அறிவின் துணையோடு நாம் நம் வாழ்வில் ஞானத்தை நோக்கி நகர்கிறோம். வாழ்வின் தரிசனங்களை கண்டடையும் இந்தப் பயணமானது, அறிவைத் தேடும் தர்க்கங்கள் நிறைந்த பயணம்போல இல்லாமல் வெகு அமைதியானது. ஞானத்தை நோக்கிய இந்த பயணத்தின்போதான நம் மனநிலையில் நிதானம் கூடுகிறது. இன்று கணிணித்துறையிலும் தகவல்கள், தர்க்கங்கள், செயற்கை அறிவு ஆகியவற்றின் வழியாக உலகளாவிய தகவல் அமைவுகளை கண்டடையும் தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன. இந்த துறைகளில் ஈட்டிய அனுபவம் அந்த நண்பருக்கு ஒட்டுமொத்த மனித செயல்பாடுகளை ஆராய்ந்து அறியும் தொழில் நுட்பத்தில் பணிபுரியும் வாய்ப்பை வழங்கியிருந்தது. உலகளாவிய தகவல் அமைவுகளின் வழியாக மனித சிந்தனை முறைகளை கண்டறியும் அவர் ஆய்வுகள் அவரது தனிப்பட்ட வாழ்வின் சிந்திக்கும் முறைகளை எப்படி மாற்றியது என்று சொன்னார். ஒருவிதமான விலக்கத்தோடும், நிதானத்தோடும் அமைதியான ஒரு உலகத்திற்குள் தன்னை அந்தப் பணி எப்படி அழைத்துச் சென்றது என்று அந்த விவாதம் நீண்டது.

அவ்வாறே, அத்தர் மற்றும் புறப்பாடு கதைகளை வாசிக்கத் தொடங்கியபோது, மனிதனின் அகமனச் சிக்கல்களுக்கு ஆன்மீகத்தின் வழியாக தீர்வை தேடும் முகமது ரியாஸின் நிதானத்தையும், அவரது மனம் “அனீஷா மரைக்காயரின்” மனதிலிருந்து எப்படி தன்னை துண்டித்துக்கொண்டு புனைவுகளை எழுதுகிறது என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது. மேலும், அத்தர் தொகுப்பு முழுவதும் மெலிதாக இழையோடும் சூஃபி மார்க்கம் மற்றும் இஸ்லாம் ஞான மரபுகளின் வழியாக, லௌகீக உலகில் மனச்சிதைவுகளோடு உலவும் அவருடைய கதைமாந்தர்களோடு அவர் நிகழ்த்தும் நுட்பமான உரையாடலையும் புரிந்துகொள்ள முடிந்தது. அனுபவத்தின் வழியாகவும், பிற அறிதல்களில் வழியாகவும் தான் கண்டடைந்தவற்றை அசைபோட்டபடி மெய்ப்பொருளையும், ஞானத்தையும் நோக்கி நகர்தலின் பயணமென ரியாஸின் எழுத்தைப் புரிந்துகொள்ளலாம்.

தமிழ் இலக்கியத்தில் அத்தர் தொகுப்பிற்கான இடத்தை இரண்டு கூறுகளின் வழியே வகுத்துக்கொள்ளலாம். ஒன்று, அவர் கதைகள் நிகழும் இந்தியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நிலங்கள், இரண்டாவது, ஒரு புலத்திலிருந்து இன்னொரு புலத்திற்கு ஊடாடும் புலம் பெயரும் மனநிலை. இவ்விரு கூறுகளின் அடிப்படையில் இந்த தொகுப்பை புலம் பெயர் மனநிலையை பேசும் ஆசிய புனைவுலகில் ஒரு நல்ல அறிமுகம் என்று வகைபடுத்திக் கொள்ளலாம். இது கறாரான இலக்கிய வகைமை அல்ல. இத்தொகுப்பை புரிந்துகொள்வதற்கான ஒரு எளிய வழிமுறை மட்டுமே. மேலும், “புலம்பெயர் மனநிலை” என்பதைக் கூட, “ஒரு நிலத்திலிருந்து இன்னொரு நிலத்திற்கு புலம் பெயரும் மனநிலை” என்பதாக மட்டும் இல்லாமல், “ஒரு தன்னிலையிலிருந்து இன்னொரு தன்னிலைக்கு புலம் பெயர்தல்” எனவும் வரையறுத்துக் கொள்ளலாம். இந்த வகைமை அத்தர் தொகுப்பை ஒரு வாசகன் இன்னும் அணுக்கமாக நெருங்க  உதவலாம். இத்தொகுப்பை வாசிக்கும்போது, எனக்கு மார்கெரித் யூர்ஸ்னாரின் “கீழை நாட்டுக் கதைகள்” உள்ளிட்ட சில தொகுப்புகள் நினைவுக்கு வந்தன. வெவ்வேறு நிலங்களில், அந்தந்த நில எல்லைகளுக்குள் நிகழும் கதைகள் ஒருவகை என்றால், அத்தர் தொகுப்பு ஒரு நிலத்திலிருந்து இன்னொரு நிலத்துக்கு ஊடாடும் மனநிலையின் வழியாக  தனக்கான பிரத்யேகமான அடையாளத்தை வகுத்துக்கொள்கிறது.

மேலும், “கீழை நாட்டுக் கதைகள்” மற்றும் “அத்தர்” தொகுப்புகள் இரண்டிற்கும் ஒரு தற்செயலான ஒற்றுமை உண்டு. இரண்டு தொகுப்புகளிலும் கதைகளின் வரிசையில் கடைசியாக இடம் பெற்றுள்ள கதையின் கடைசி வரிகள் இப்படி முடிகிறது…

தொகுப்பு: அத்தர் - சிறுகதை :  புறப்பாடு:

“பொறுமைதான் பேரதிசயம். காத்திருப்பதுதான் மந்திரம். மண்ணைத் தொட்டால் பொன்னாகும், மிருகத்தை வருடினால் மனிதனாகும். என்றார் அத்தா!”

தொகுப்பு: கீழை நாட்டுக் கதைகள் - சிறுகதை: தலை வெட்டப்பட்ட காளி:

“சாசுவதாமாக இருந்துதான் ஆகவேண்டும் என்றில்லாத ஆவேசமே! பொறுமையை கடைபிடி!”

இது முற்றிலும் தற்செயலானதே! எனினும், ஆன்மீக விடைதேடும் ஆசிய புனைவுகளின் தென்படும்  அமைதிக்கான ஒரு முக்கிய அம்சமும் இந்த வரிகளில் உண்டு.

அத்தர் தொகுப்பில் உள்ள கதைகளின் கட்டமைப்பு சுவாரசியமானது. இந்தக் கதைகளில் தென்படும் மூன்று நுட்பமான அடுக்குகளின் வழியாக முகமது ரியாஸின் பலங்களையும், இன்னும் பலம்பெற வேண்டிய அம்சங்களையும் பகுத்து அறிய முடிகிறது.

முதல் அடுக்கு, இக்கதைகள் நிகழும் நிலம் அல்லது நிலங்களின் தொகுப்பினால் ஆனது. நிலமே அத்தர் தொகுப்பின் கதைகளின் அடிப்படை கட்டமைப்பாக இருக்கிறது. நிலங்களை எழுதுவதன் சவாலை முகமது ரியாஸை ஏற்றுக்கொண்டு அதை பெருமளவில் வெற்றிகரமாக இந்தத் தொகுப்பு முழுவதும் சாத்தியப்படுத்தியும் இருக்கிறார். நிலங்களை எழுதுவதன் அடிப்படை, ஒரு படைப்பை வாசிக்கும் வாசகன் தானே அந்த நிலத்தில் சஞ்சரிப்பதாக நம்பவைக்கப்படுவதில் தொடங்குகிறது. ஜியாங் ரோங்கின் “ஓநாய் குலச்சின்னம்” போன்ற நாவல்களை எந்த பக்கத்தை வாசிக்கத் தொடங்கினாலும், அடுத்தடுத்து சில பக்கங்களை கடப்பதற்குள் வாசகனின் மனம் மங்கோலிய மேய்ச்சல் நிலத்திற்குள் சஞ்சரித்துவிடுகிறது. ஒலோன்புலாக் மேய்ச்சல் நிலக்காட்சிகள், பனிப்பொழிவு, வளர்ந்து நிற்கும் புல்வெளி, நேர்த்தியான திட்டமிடலுடன் நெருங்கிவரும் ஓநாய்கள், மான்கள், குதிரைகள் என நாடோடி சமூகத்தின் வாழ்வியல் காட்சிகள் நம்மை சூழ்ந்துகொள்கின்றன.

வாசகனின் மனம் இப்படி நம்பத்துவங்குவது அத்தகைய பிரதிகளில் இடம்பெறும் நில அடையாளங்களாலோ அல்லது புவியியல் தரவுகளாலோ மட்டும் அல்ல. அவற்றை நுட்பமாக கதையாடலில் பின்னும் சூட்சுமங்களாலும்தான். சரளமான மொழியும், நேர்த்தியான தகவல்களைத் தேடும் உழைப்பும், அதனை புனைவாக்கும் கலையும் சேர்ந்தே வாசகனுக்குள் அத்தகைய நம்பிக்கையை ஒரு புனைவு எழுத்தாளரால் கிளர்த்த முடிகிறது. அவ்வகையில், அத்தர் தொகுப்பின் முளரி சிறுகதையில் இடம்பெறும் பழங்குடியினரின் வாழ்விடத்தைத் நோக்கிய பயணக் காட்சிகளும், செந்தாழை கதையில் இடம்பெறும் இரண்டாம் உலகப்போர் காலத்து நிலக்காட்சிகளையும் இங்கே உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இன்னும் குறிப்பாக, செந்தாழை சிறுகதையில் இடம்பெறும் அன்னாசி கிடங்கில் வேலை செய்பவனைப் பற்றி  ஒரு சிறிய காட்சி. அக்காட்சியில் இடம்பெறும் அன்னாசி சாகுபடி முறை, தட்பவெட்பம், நிலக்காட்சிகள், வணிகம் என நுட்பமான சித்திரங்கள் வழியாக அந்தக் காட்சியின் நம்பகத்தன்மையை ஒரு வலைப்பின்னலைப் போல முகமது ரியாஸ் கட்டியெழுப்புகிறார்.

நிலங்களுக்கு அடுத்த அடுக்காக அத்தர் தொகுப்பில் இடம்பெறுவது அந்தந்த நிலங்களுக்கே உரித்தான வட்டார வழக்குகள், தொழில், மதம், மெய்ஞான மரபுகள் மற்றும் நம்பிக்கைகள் போன்றவற்றை உள்ளிட்ட கலாச்சார மற்றும் பண்பாட்டு பின்னணிகள். முக்கியமான இஸ்லாமிய வாழ்வியல் பின்னணிகளும், சூஃபி மார்க்கமும் இத்தொகுப்பிற்கு தனித்த அடையாளங்களை வழங்குகின்றன.

இத்தொகுப்பில் இடம்பெறும் அத்தர் சிறுகதையில் “அத்தர்” ஒரு கனிந்த தொன்ம மனதின் குறியீடு என்றால், “அப்துல் கரீம் பெர்ப்யூம்” பொருள்மயமாகிவரும்  மனச்சிதைவின் குறியீடாக வருகிறது. நிலமும், தொழிலும், அதன் வழியே பண்படும் வாழ்வும் இந்த இரண்டு முனைகளையும் இணைக்கின்றன. தொழிலை தன் அகவாழ்வின் பகுதியாகவே கொண்ட மனம் இவ்விரண்டு முனைகளுக்கும் இடையில் நறுமணம் கமழ ஊடாடுகிறது. ஒரு புனைவு கொஞ்சம் கொஞ்சமாக வாழ்வின் தரிசனத்தை நோக்கி விரிந்துகொண்டே செல்கிறது.

மேலும், ஷாகிபா சவுண்ட் சர்வீஸ் கதையின் பின்புலமாக வரும் எளிய இஸ்லாமிய வாழ்வை எழுதும்போது தன் மொழியின் இலகுத்தன்மையை நெகிழ்த்திக் கொள்ளும் முகமது ரியாஸ், ஆன்மீகத் தேடலை நோக்கி நகரும் அத்தர், புறப்பாடு போன்ற கதைகளை எழுதும்போது தன் மொழியின் செறிவை கூட்டிக்கொள்கிறார்.

“எத்தனை இஸ்மாயில்கள்! இஸ்மாயிலைப் போல் எத்தனை பிள்ளைகள். படச்சவனே! பயணம் போற எல்லா பிள்ளைகளையும் நீயே கார்மானம் செய்யி” எனும் உம்மாவின் வேண்டுதலும், “முதலில் உன் குடுப்பத்திடம் நல்ல பெயரெடு. துறவு என்பது ஒரு வழியல்ல. உலகைத் துறந்து உண்மையைக் காண்பதும், உண்மையைக் கண்டதும் உலகிற்கே திரும்புவதுமாய் இருவழிப்பாதை அது” எனும் அத்தாவின் குரலும் எதிரெதிர் திசைகளிலிருந்து வந்துசேரும் புள்ளியைத்தான் அத்தர் கண்டடைய முயற்சி செய்கிறது.

நிலம், நாட்டாரியல், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு பின்னணிகளுக்கு அடுத்த அடுக்கு கதை மாந்தர்களின் வாழ்வியல், உளவியல் கூறுகளை உள்ளடக்கியதாக உள்ளது. அத்தர் தொகுப்பின் கதைகளின் வழியாக எழுத்தாளர் வாசகனுக்கு கடத்த எத்தனிக்கும் ஒன்று இந்த அடுக்கில்தான் பிரதானமாக நிகழ்கிறது. முன்பு குறிப்பட்ட புலம் பெயரும் ஊடாட்டத்தை, இரட்டை மனநிலையை, உம்மாவின் துப்பட்டி, புறப்பாடு, சேஞ் ஆலி மற்றும் அத்தர்  போன்ற கதைகளின் கதைமாந்தர்களின் உளவியல் வழியாக வாசித்துணர முடிகிறது. தேடல்களும், ஏமாற்றங்களும், காதலும், வலியும், நினைவேக்கமுமாய் “கதைகள் நிகழ்வது” இந்த அடுக்கில்தான்.

சமையல் தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட ஒரு கதாப்பாத்திரம் பேசும் வசனத்தை தன் முதல் சிறுகதையில்…

“பயப்படாதே இஸ்மாயிலு! உன் உம்மா பயப்படுவதுபோல இந்த தீ யாரையும் அழிச்சிடாது. மற்றவர்களை வாழவைக்கிற நெருப்பு. பசியாளிகளோட நெருப்ப பசியாற்றும் நெருப்பு”

என்று எழுதும் ரியாஸ், அப்படி எழுதிய தன்னை முற்றாக அழித்துக்கொண்டு கடைசி கதையில்…

“தொழில் தெரியாமல் சாப்பாட்டுக் கடையில் இறங்குவது தன்னைத்தானே பலிகொடுப்பது போலன்றி வேறதுவுமில்லை.”

என்று எழுதுகிறார். ஒரே நெருப்பு ஒரு இடத்தில் பசியை ஆற்றும் குளிராகவும், இன்னொரு இடத்தில் ஆளை விழுங்கும் சிதையாகவும் நுட்பமாக உருக்கொள்கிறது.

ஒருபக்கம் அத்தர், புறப்பாடு போன்ற கதைகள் மனித மனதின் அசாதாரணங்களை தொட முயற்சி செய்தாலும், மறுபக்கம், சக மனிதனின் மீதான நம்பிக்கையை பேசுவதாய் முடியும் “சேஞ் ஆலி” கதைகள் இந்த அடுக்கில் வலுவற்றுச் சறுக்குகின்றன. வலுவான கட்டமையின் மீது நிழந்துகொண்டிருகும் சில கதைகளை “பஞ்ச் டயலாக்” போல வரும் கடைசி வரியின் மீது தூக்கி நிறுத்துவதும் இந்த அடுக்கில்தான் நிகழ்கிறது. தன் கதைகளின் மொழியாக, கதாப்பாத்திரங்களாக, தன்னையே பிரதிகளாக உடைத்துக்கொண்டு எழுதும் முகமது ரியாஸிக்கு இத்தகைய விளையாட்டுக்கள் உபரிகள்.

செந்தாழை கதையில் யானையை வசியப்படுத்துதல் பற்றிய உரையாடலில் ஒரு வரி இப்படித் தொடங்குகிறது.

“யானைக்கு முன் ஒரு உண்மையுண்டு. தான் யானையென்று தன்னையறிவது. அது தெரிந்துவிட்டால் எந்த மந்திரமும் யானையைக் கட்டுப்படுத்த முடியாது.”

ரியாஸ் தமிழ் எழுத்தாளர்.

அவர் ஆசியப் புனைவுகளை எழுதுகிறார்.

சிங்கப்பூரில் வசிக்கிறார்.

எனினும்...

அவர் இன்னும் எழுதவேண்டியது இந்த எல்லைகளுக்கும், இந்த அடையாளங்களுக்கு அப்பாற்பட்டது

அவர் ஒருபோதும் “தமிழக” அல்லது “சிங்கப்பூர்” போன்ற அடையாளங்களுக்குள் சிக்கிக்கொள்ளாமல் பறந்துவிரிந்த இலக்கிய உலகில் தன்னையறிந்த யானையைப் போல பயணிப்பார் என்று நம்புகிறேன்.

(சிங்கப்பூரில் நடைபெற்ற அத்தர் நூல் வெளியீட்டு நிகழ்வில் பேசிய உரையின் அடிப்படையில் எழுதியது) 

நன்றி : சிராங்கூன் டைம்ஸ் 

Comments