சிங்கப்பூர் இலக்கியமும், நில அடையாள மதிப்பீடுகளும்!


ன்றைய சிங்கப்பூர் நவீன இலக்கியச் சூழலில் புலம்பெயர் புனைவு எழுத்தாளர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு கேள்வி, “புனைவின் கருப்பொருள் சிங்கப்பூர் பற்றியதா?” என்பதே! இது புனைவுக் களத்தின் நிலத்தைக் குறித்து கேட்கப்படும் கேள்வி என மேலோட்டமாகப் புரிந்துகொள்தில் சிக்கல்கள் இருக்கின்றன. சிங்கப்பூர் இலக்கிய அமைப்புகள் மற்றும் இங்கு வழங்கப்படும் விருதுகள் வழியாக உருவாகும் எதிர்பார்ப்புகளுக்கும் இந்த கேள்வியில் பங்குண்டு. மேலும், இலக்கியத்தைத் “தரநிர்ணயம்” செய்யும் நோக்கில் இந்தக் கேள்வி எழுப்பப்படும்போது, அது புதிதாக எழுதவருபவர்களின் கழுத்தில் “இதை எழுது” என்று கத்தியை வைக்கத் தொடங்குகிறது.

விளைவாக, அகத்திலிருந்து எழும் ஒரு காதலுணர்வைக்கூட, “சிட்டிஹால் MRT-யில் காதல் பூத்தது” என நில அடையாளத்தைக் கொண்டு வன்புணர்வு செய்யும் போக்கிற்கு வழிசெய்துவிடுகிறது. இப்படிச் சொல்வது சிங்கப்பூரில் எழுதப்படும் புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புகளை குறைத்து மதிப்பிடும் நோக்கத்தில் அல்ல. இங்கும் நிலம், தொன்மங்கள், கலாச்சாரம் மற்றும் நாட்டாரியல் பின்புலங்களோடும் எழுதப்படுகின்றன. ஆனால், அதேவேளை நிலவியலின் அடிப்படையில் எழுதுவது ஒரு புற அழுத்தமாக முன்வைக்கப்படுகிறதா என்ற கேள்வியும் தவிர்க்க முடியாத ஒன்றாவே இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஷோபாசக்தி சிங்கப்பூர் வந்திருந்தபோது “ஏன் ஈழத்திலிருந்து வரும் இலக்கியங்கள் போர் பற்றியதாகவே இருக்கின்றன?” என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அவர் மெலிதாக சிரித்துக்கொண்டே “என்ன நடக்கிறதோ அதைப்பற்றிதானே எழுதுகிறார்கள்” என்றார். இது எழுத்தாளனின் தன்னுணர்வு எனும் அடிப்படையில் மட்டுமே புரிந்து கொள்ளவேண்டிய பதில். மற்றொன்று, ஜெயமோகன் ஒரு கட்டுரையில், எழுத்தாளர் தன் எழுத்திலிருந்து தன்னிலை விலக்கம் பெறுவதைக் குறித்து எழுதிருப்பார். இந்தக் கூற்றை ஒரு படைப்பு தன்னுணர்விலிருந்து பொதுவுணர்வை நோக்கி நகர்தல் என நான் புரிந்துகொள்கிறேன். இந்த இரண்டு பண்புகளும் எதிரெதிராகத் தோன்றினாலும், இரண்டும் தன்னளவில் முற்றிலும் இயைந்து பயணிப்பவையே.

புலம்பெயர்ந்த ஓர் எழுத்தாளர், பிறந்த நிலத்தின் வாழ்வியலை எழுவதும், நினைவேக்கத்  (nostalgia) தன்மையுடன் பிரிவு, கையறு நிலை ஆகியவற்றை எழுவதுகூடத் தன்னுணர்வின் வெளிப்பாடே! இங்கு தன்னுணர்வு என்பது “தான்” என்கிற அகநிலை உணர்வாக இல்லாமல், புலம்பெயர் தாக்கத்திற்கு உட்பட்ட தன் அகம் அத்தகைய பொதுவுணர்வின் பிரதிநிதியாக உணர்வதைக் குறிக்கிறது. அந்த அளவில் ஒரு எழுத்தாளர் தன் எழுத்திலிருந்து தானே “விலக்கம்” கொள்வதாக நான் புரிந்துகொள்கிறேன்.

புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகளை நிலத்தின் அடிப்படையில் வகைப்படுத்த முயற்சிப்பதும், புலம் பெயர்ந்தவர்கள் தன்னுடைய “புகுந்த நிலம்” பற்றி எழுதவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் புரிந்துகொள்ளக் கூடியவையே. புலம்பெயர் நிலத்தில் வசித்தபடி தாய்நிலத்தின் பின்னணியில் எழுதப்படும் பிரதிகளை இவ்வாறு நிலநிர்ணயம் வேண்டுமானால் செய்யலாம், தரநிர்ணயம் செய்வது அபத்தமானது. உதாரணத்திற்கு ஈழ எழுத்தாளர்களான அ.முத்துலிங்கம், ஷோபாசக்தி போன்றவர்களின் படைப்புகளை அவர்கள் புலம்பெயர்ந்து வாழும் கனடா, பிரான்ஸ் ஆகிய நிலப்பரப்புகளின் அடிப்படையில் தரநிர்ணயம் செய்வது எவ்வகையில் சரியாகும்?

ஒரு விதத்தில் நிலம் என்பதே அகவயமாக ஒரு பண்புதான். பழந்தமிழ் இலக்கியத்தில் நிலவியல் என்பது பிரதானமாகப் பண்புகளின் அடிப்படையிலான பகுப்பே. அதனால்தான் பாலை எனும் திணை தனித்த நிலமாக இல்லாமல் பிற திணைப்பண்புகளின் திரிபாக உருப்பெறுகிறது. குறிஞ்சியும் முல்லையும் மருதமும் நெய்தலும் தத்தமது பண்புகளிலிருந்து அகவயமாகத் திரிவதுதான் பாலை என்ற கருத்து உண்டு. அந்த அடிப்படையில்தான் இருவேறு நிலங்களுக்குள் ஊடாடும் “பொருள்வயின் பிரிவு” நம் மரபில் முக்கியத்துவம் பெறுகிறது. குறிஞ்சியிலிருந்து முல்லைக்கு இடம்பெயர்பவரை “நீ முல்லை நிலத்தை எழுது” என்று இலக்கியம் சிரச்சேதம் செய்வதில்லை.

புலம்பெயர்ந்த நிலத்தைப் புனைவுக் களனாக்குவது எழுத்தின் சாத்தியங்களை விரிவாக்கக்கூடும். ஓர் எழுத்தாளர் தன் அகத்தை சிறு சிறு துண்டுகளாக்கி அத்துண்டுகள் ஒவ்வொன்றிலிருந்தும் புத்துயிர்களைப் பிறக்கச்செய்து வெவ்வேறு பரிமாணங்களைக் காட்டலாம். புதிய நிலத்தின் சமூக, பண்பாட்டு ஒற்றுமை வேற்றுமைகளின் வழியாக ஒரு நுட்பமான புதிய வெளியை அறிமுகம் செய்யலாம்.

அதேவேளை, பிறந்த நிலத்தின் வாழ்வை எழுதுவதையும், நினைவேக்கத்தை எழுதுவதையும் பன்முகத்தன்மையற்ற அல்லது ஒற்றை பரிமாணமுடைய எழுத்து என தீர்மானித்துவிட முடியாது. மேலும், இயக்கியப் படைப்பில் ஓர் எழுத்தாளர் தன் பிறந்த நிலம் சார்ந்த தன்னுணர்வை அப்புனைவில் ஒரு பாத்திரமாக உள்ளீடு செய்வதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதே! உலகின் தலைசிறந்த பேரிலக்கியங்களில் நிறைந்திருக்கும் தன்னுணர்வை பன்முகத்தன்மை அற்றது என்று தீர்மானித்துவிட முடியுமா? ரஷ்யாவில் பிறந்த ஒரு எழுத்தாளர் பீட்டர்ஸ் பெர்க் நகரத்தின் வழியே கட்டியெழுப்பும் நுட்பமான சித்திரங்களை, ஒருவேளை அவர் நியூயார்க் நகரத்தில் இருந்துகொண்டு எழுதிருந்தால், அவற்றை எழுத்தாளரின் பன்முகத்தன்மையற்ற படைப்புகள் என்று தரம் பிரிக்க இயலுமா? ஒரு பிரதியின் தரத்தை அந்தப் பிரதியின் வழியாக அணுகுவதே சரியானதாக இருக்கமுடியும்.

மேலும், பிரதிகள் எழுதப்படும் காலம், அக்காலத்தில் நிலவும் அரசியல், பொருளாதார, சமூகச் சூழல் ஆகிய காரணங்களையும் உள்ளடக்கியே புலம்பெயர்ந்து எழுதுபவர்களின் தாய்நிலம் சார்ந்த தன்னுணர்வு மனநிலை இயங்குகிறது. இந்த மனநிலையில் காலப்போக்கில் இயல்பான மாற்றம் நிகழலாம். ஆனால் அதனை  வலிந்து மாற்ற இயலாது. படைப்பாளிகளின் மனம் இப்படியான எல்லைகளை வகுத்துக்கொண்டு எழுவதும் இல்லை. அது சுதந்திரமானது. எதை எப்போது எழுதுவது என அதைக் கட்டுப்படுத்த முடியாது.

மீண்டும் போர் இலக்கியம் குறித்த கேள்விக்கான பதிலைக் கவனித்தால், அது போர் இலக்கியம் என்னும் வகைமை குறித்து அல்லாமல், எழுத்தாளனின் அடிப்படையான தன்னுணர்வின் தொடக்கத்தை மட்டுமே பேசுகிறது என்று புரிந்துகொள்ளலாம். இங்கு போர் என்பது ஒரு புறவயமான காரணம். அந்தக் காரணம் போராகவோ வேறு எதுவாகவோ இருக்கலாம். ஒரு நவீன தேசத்தில் புலம்பெயர் எழுத்தாளர் எதிர்கொள்ளும் உளச்சிக்கல்களை, அக்காலத்தில் நிகழும் சமூக அரசியல் சூழ்நிலைகளோடு சேர்த்துத்தான் அணுகவேண்டும்.

உதாரணமாக, இடப்பெயர்வை முற்றிலுமாகக் கட்டுப்படுத்திய கொரோனாவுக்குப் பிறகான புலம்பெயர்ந்தவர்களின் மனச்சிக்கல்களை, அதே நிலத்தில் பிறந்து வளர்ந்தவர்களின் மனச்சிக்கல்களோடு ஒப்பிட்டுப் புரிந்துகொள்ள முடியாது, உலகப்போர்ச் சூழலோடும் ஒப்பிட்டுப் புரிந்துகொள்ள முடியாது. அதில் நுட்பமாக இழையோடும் திரும்புதலுக்கான நினைவேக்கத்தை உள்ளூர் நிலவியல் எல்லைக்குள் வராதவை என ஒதுக்கிவிடவும் இயலாது. அப்படி ஒதுக்குவது ஒருவகையில் நினைவேக்கம் என்பதையே உள்ளூர் நினைவேக்கம், புலம்பெயர் நினைவேக்கம் என்று பிரிப்பதற்கு வழிசெய்துவிடும். அது மற்றொரு அபத்தத்திற்கு இட்டுச்செல்லும்.

மேலும் இங்கு புலம்பெயர் எழுத்தாளர்களை “சிங்கப்பூர் எழுத்தாளர்” என்று அழைப்பது கூட, இலக்கியத்திற்கு தங்களுடைய பெரும்பான்மையான பங்களிப்பை எந்த நிலத்திலிருந்து  அளித்தாரோ, அதன் அடிப்படையில் என்றே புரிந்துகொள்கிறேன். ஒரு எழுத்தாளர் எதை பிரதிநிதித்துவம் செய்கிறார் என்பதை அவர் பிரதியில் தொடங்குவதே பொருத்தமானதாக இருக்கும். ஒருவேளை அப்பிரதி ஒரு நிலத்தை பிரதிநிதித்துவம் செய்யுமானால், அப்பிரதியின் வழியாக அந்த நிலத்தை சென்று அடையலாம். மாறாக, எழுத்தாளரின் பிறந்த நிலத்தில் தொடங்கி ஒரு பிரதியின் நிலத்தைச் சென்று சேர முயற்சிப்பது பொருளற்றது.

மற்றபடி ஒரு படைப்பின் பண்புகளை நிலத்தின் அடிப்படையில் பகுத்து அணுகும் வழிமுறையை சில படைப்புக்கூறுகளை விளங்கிக்கொள்ளப் பயன்படுத்த வேண்டுமே தவிர, ஒருபோதும் இலக்கியத் தரநிர்ணத்திற்கான கூறுகளில் ஒன்றாக ஆக்கிவிடக்கூடாது. அது பொதுப்புத்தி சார்ந்தது, பொருளற்றது.

நன்றி : சிராங்கூன் டைம்ஸ்

Comments