நள்ளென் றன்றே...


கா
தலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் பாலையாவிற்கு பேய்க்கதை சொல்லும்போது, “ம்ம்ம்ம்ம்ம்… கும்ம்ம்ம்ம்… இருட்டு….” என்று தொடங்குவார். இங்க அது பொறுத்தமற்ற உதாரணம் என்றாலும், ஏற்ற இறக்கங்களுடன் வரும் அந்த “ம்ம்ம்ம்…”-ற்கு அழகான இசைமை உண்டு. கண்களை மூடிக்கொண்டு கேட்டால் ஒருவித அமானுஷத்திற்குள் அந்த ம்-ல் அமர்ந்து வழுக்கிக்கொண்டு போவோம்.

“கண்ணம்மா…காதல் எனும் கவிதை சொல்லடி” பாடலில், “இன்னும் என்னை வெகுதூரம்… கூட்டிச் செல்லடி…” என்ற வரியில், “தூஊஊஊரம்…” என்று ஊகாரத்தின் இசைமையை நீட்டிப்பதன் வழியே, காதலியுடனான பயணத்தின் தொலைவை இளையராஜா நீட்டிப்பார்.

ஒரு குறுந்தொகைப் பாடல்,  “நள்ளென் றன்றே யாமம்” என்று தொடங்குகிறது.  நடு இரவு இருள் மிகுந்ததாக உள்ளது என்று பொருள் கொள்ளலாம். ஆனால், அது போதவில்லை. ஊரே உறங்குகிறது. எல்லா உயிர்களும் உறங்குகின்றன. தலைவன் பிரிவைத் தாளாத, தான் ஒருத்தி மட்டும், அதாவது, “ஓர்யான்” மட்டும் உறங்கவில்லை என்கிறாள்.

எல்லா உயிர்களும் தூங்குகின்றன என்பதை நினைத்துப் பார்க்கவே சிலிர்க்கிறது. நமக்குத் தெரிந்த இரவின் இசைமையில் இரவுப் பூச்சிகள், தவளைகள் என பலவும் உலாவும். எதுவுமே இல்லாத நிசப்பதமான இரவு எப்படியிருக்கும்? இங்கு, “நள்ளென் றன்றே” என்பதை, “நள்ளிரவு” என்று பொருள் கொண்டால், இன்னும் குறிப்பாக, “நள்ள்ள்..” என்ற இசைமையோடு யோசித்தால், “ம்ம்ம்ம்ம்…” என்ற நாகேஷின் இருட்டோடு பொருந்திப் போகிறது. இந்தக் கூடுதல் அழுத்தம் தலைவியின் துயரின் ஆழத்திற்குள் நம்மைப் பிடித்துத் தள்ளுகிறது.

நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே

- பதுமனார்

இடையிரவு செறிந்த இருளை உடையதாக நின்றது;  மனிதர் பேசுதலை ஒழித்து இனிமையாகத் துயின்றனர்;  அகன்ற இடத்தை உடைய உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் வெறுப்பின்றித் துயிலா நிற்கும்; யான் ஒருத்தியே நிச்சயமாகத் துயிலேனாயினேன்.

Comments