நேர்த்தியின்மையின் நேர்த்தி
இளையராஜா நேர்த்தியின்மையை தன் இசையில் கையாளும் விதம் அற்புதமானது. நேர்த்தியின்மையின் அழகை, அதற்கு இணையான நேர்த்தியின் பக்கம் நகர்த்தும்போது இரண்டுக்கும் இடைபட்ட ஒரு புள்ளியை வந்தடையும்.
உதாரணத்திற்கு, சிப்பிக்குள் முத்து படத்தில் வரும், “துள்ளி துள்ளி நீ பாடம்மா…” பாடல் தொடங்கும் இடம்.
SPB அடித்தொண்டையில், நேர்த்தியின்மையின் அழகான பக்கமிருந்து தொடங்க, ஜானகி நேர்த்தியின் பக்கமிருந்து தொடங்குவார். முழு பாடலையும்விட, அவர்கள் இருவரும் ஸ்வரங்களின் வழியே வந்தடையும் அந்தச் சமதளம்தான் அப்பாடலின் உச்சி. அங்கிருந்து பின்னர் அப்பாடல் வேறு தளத்திற்கு நகரும்.
இதுபோல் பல பாடல்கள் உண்டு. நுட்பமான திட்டமிடலில் இளையராஜா இப்பாடல்களைச் சாத்தியப்படுத்தியிருப்பார்.
இதையும் கடந்த பாடலாக, அவதாரம் படத்தில் வரும் “ஒரு குண்டுமணி குலுங்குதடி” பாடலைச் சொல்லலாம். பாடல் பேச்சுவாக்கில் தொடங்கும். Breath Control பற்றி அக்கரையில்லாத பேச்சும், அதில் அதிக அக்கறை கொண்ட பாட்டும் சந்திக்கும் புள்ளி ஒன்று வரும்.
ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் இடையில் இருக்கும் சொற்ப இடைவெளியில், “நல்லாருக்கா” என்று வசனம் பேசிவிட்டு, மறுபடியும், “ஒரு குண்டுமணி” என பாடல் தொடர வேண்டும். ஒருவேளை, அப்படி நேர்த்தியாகத் தொடங்கியிருந்தால் அந்த மேஜிக் நிகழ்திருக்காது. இளையராஜா, அந்த வசனத்திற்கு பின், அரை வினாடி லேசாக Breath Control லிருந்து நழுவி, பின்னர், ஒரு சின்ன திணறல் ஒலியுடன், “..ஹ்…ண்டுமணி” எனத் தொடங்குவார்.
இது அத்தனையைம் சில வினாடிகள்தான். ஆடியோ கேசட் காலத்தில், அதிகம் ரீவைண்ட் செய்து ரசித்த நொடிகள் இவை.
இந்தப் பாடலில் இன்னொரு அற்புதமும் உண்டு. நாசரின் குரலை பல இடங்களில் கிட்டத்தட்ட நெருங்கியிருப்பார்.
the perfection in the imperfection..
https://m.youtube.com/watch?v=0wN2OS7PPPE



Comments
Post a Comment